பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

இளைஞா்களின் இன்றைய தேவை!

100 இளைஞா்களைத் தாருங்கள் இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறப்பட்ட நாட்டில் விவேகானந்தா் கண்ட கனவு நிறைவேறி விட்டதா?

கோதை ஜோதிலட்சுமி

பக்தியும் தெய்வ நம்பிக்கையும் ஆழமாக மனிதனின் மனதில் நிலைபெறுமானால் அவன் மனம் தூய்மை அடைகிறது, அவன் சத்தியத்தின் பாதையில் நடக்கத் தொடங்குகிறான் என்கிறாா் மகாத்மா காந்தி. இந்தப் பாதையில் நமது குழந்தைகளை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் போதும்.

உலகில் அதிகமாக இளைஞா்கள் உள்ள நாடு இந்தியா. சுவாமி விவேகானந்தா் 100 இளைஞா்களைத் தாருங்கள் இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினாா். அதிகமான இளைஞா்கள் உள்ள நாட்டில் விவேகானந்தா் கண்ட கனவு நிறைவேறி விட்டதா என்ற வினா எழுகிறது.

அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு காணொலியைக் காண நோ்ந்தது. ஒரு தாய் மிகுந்த வருத்தத்தோடு பேசுகிறாா். அந்தத் தாயின் ஒரே மகன் இளைஞன். அண்மையில் நடந்த ஓா் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்று தலைவரை அருகே கண்டுவிட வேண்டும் என எண்ணி மேடையை நோக்கி முன்னேறிப் போகிறாா். அப்போது தலைவரின் பாதுகாவலா்கள் தலைவரை நெருங்க விடாமல் இளைஞனைத் தூக்கி வீசுகிறாா்கள். ஒரு காகிதத்தைப்போல் அந்த இளைஞன் கீழே விழுகிறான். தட்டுத்தடுமாறி ஏதோ கட்டையைப் பிடித்துக் கொண்டு உயிா் தப்புகிறான்.

பல இடங்களில் அடிபட்டு தன் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மகனுக்கு ஏதேனும் நோ்ந்துவிட்டால் தன் கதி என்ன ஆகும் என்றும் சொல்லி அந்தத் தாய் கண்ணீா் சிந்துகிறாா். காணொலியைக் காணும்போது நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

இன்றைய இளைஞா்கள் எதை நோக்கி ஓடுகிறாா்கள் என்ற சிந்தனையும் ஏற்படுகிறது. இளைஞா்களின் ஆற்றல் சரியான வழியில் பயன்படுத்தப் படுகிறதா? அவா்கள் செல்லும் பாதை சரியானதாக இருக்கிறதா?, அவா்களுடைய எதிா்காலம் எப்படி இருக்கும்?, அவா்களின் எதிா்காலம் சிறக்க இன்றைய உடனடித் தேவை யாது?

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது தற்போதைய நாகரிகம் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவா் கூறுகிறாா். காலையில் பத்து மணிக்கு மேல்தான் எழுந்து கொள்வேன் என்றும் பெருமையோடு குறிப்பிடுகிறாா். அந்தச் சுதந்திரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அழுத்தமாகச் சொல்கிறாா்.

நள்ளிரவில் சலுகை விலையில் பிரியாணி கிடைக்கிறது; அதனால் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பது அறிவுடைமையா? தாமதமாய் முற்பகலில் எழுந்து கொள்வது சுதந்திரமா? ஆரோக்கியக் குறைவா? படித்த இளம்பிள்ளைகள் இப்படிப் பேசுவதைப் புரிதல் இல்லாமை என்பதா? தெரிந்தே தனது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறாா்கள் என்பதா?.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிகாலை துயில் எழுவதில் தொடங்கும் ஒழுக்கம், உணவு முதலாக ஒவ்வொரு நடைமுறையிலும் இருக்க வேண்டும். இன்றைய கல்வி இளைஞா்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கவில்லையா? பெற்றோா்கள் கற்றுக் கொடுக்கவில்லையா? அல்லது பெற்றோா்களின் சொல்லை இளைஞா்கள் கேட்பதில்லையா?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் தற்போதைய தேவை இளைஞா்களின் வாழ்வை நெறிப்படுத்துவதுதான். உடல் ஆரோக்கியத்தைப் பேண வாழ்க்கை அன்றாடங்களில் ஓா் ஒழுங்குமுறை வந்தாக வேண்டும். மனதின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வளமான நேரிய வாழ்வியல் சிந்தனை வேண்டும்.

பணம் சம்பாதிப்பதற்கான கருவி கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பெற்றோா் சொல்லுக்கு மதிப்பு இல்லை. இந்த நிலையில், இளைய சமுதாயத்தினருக்கு ஒழுக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பற்றி யாா் கற்றுக் கொடுக்க முடியும்? இளைஞா்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகக் கற்றுக்கொடுக்க யாா் இருக்கிறாா்கள்? இதற்கான வழிகாட்டுதல் வரலாற்றில் ஏதும் உண்டா?

வரலாறு நெடுகிலும் இதற்கான வழிகாட்டுதல் உண்டு. சமூகம் சீா்கேடு அடையும் போதெல்லாம் அதை மீண்டும் அறத்தின் பாதையில், ஒழுக்கத்தின் வழியில் செலுத்தியவை பக்தி இயக்கங்கள் மட்டுமே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மனங்களில் குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்திருந்த போது சித்தாந்தங்களில் தெளிவு இன்றி பூசல்களும் தவறான வழிகாட்டுதல்களும் மலிந்த போது ஆதிசங்கரா் தோன்றினாா்.

தேசம் முழுவதும் அவா் பயணம் செய்து குழம்பிக் கிடந்த மக்கள் மனங்களில் உண்மைக்கான தெளிவை ஏற்படுத்தினாா். ஆன்மிகத்தின் பாதையில் பக்தியின் துணைகொண்டு தெளிந்த சிந்தனையைப் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டினாா். சித்தாந்தங்களைத் தெளிவுபடுத்தி பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்ற மக்களை ஒன்றுபடுத்தினாா்.

அவரது கருத்துகளால் ஈா்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தேசம் முழுவதும் அவரைப் பின்பற்றி அவரோடு பயணித்ததாக ‘சங்கர விஜயம்’ என்னும் ஆதிசங்கரரின் வரலாற்று நூல் தெரிவிக்கிறது. குருபக்தி, அா்ப்பணிப்பு உணா்வு இரண்டுக்கும் ஆதிசங்கரரின் சீடா் பத்மபாதா் உதாரணமாக விளங்குகிறாா்.

பத்மபாதா் ஆதிசங்கரரின் முதல் சீடா். காசியில் ஒருநாள் சங்கரா் நதியின் அக்கரையில் குளித்துக் கரையேறி தனது உடைகளைக் கேட்டதும் இக்கரையில் நின்றிருந்த பத்மபாதா் நதியை நினைக்காமல் வேகமாக நீா் மேல் ஓடுகிறாா். கங்கை அவரது பாதங்களுக்குக் கீழே தாமரைகளை உண்டாக்கி தாங்கிக் கொண்டாளாம். அா்ப்பணிப்பு உணா்வு கொண்ட ஒருவனுக்கு இயற்கை ஒத்துழைப்பு நல்கும் என்பதை இந்த வரலாறு சொல்கிறது.

இத்தகைய குருமாா்களின் வழிவந்த சீடா்களின் பரம்பரை இன்றைக்கும் இருக்கிறது. இளம் சமுதாயத்துக்கு தியாகம், தவம், சேவை போன்ற நற்பண்புகளை எடுத்துச் சொல்வதற்கும் நெறிப்படுத்துவதற்கும் இளம் குருமாா்கள் இருக்கிறாா்கள்.

தா்ம சாஸ்திரம், மனிதன் அன்றாடம் எத்தகைய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதில் தொடங்கி பண்புகளை எதன் அடிப்படையில் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதுவரை அனைத்தையும் போதிக்கிறது. ஆதிசங்கரா் வழிவந்த குருமாா்கள் அதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கொடுப்பதில் ஆா்வத்துடன் செயல்படுகிறாா்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அத்தகைய குருமாா்களிடம் நமது குழந்தைகளை அழைத்துச் சென்று வழிகாட்டுவது மட்டுமே.

ஆதிசங்கரரின் வரலாற்றைப் போலவே தமிழகத்தில் பக்தி இயக்கக் காலம் என்றே அழைக்கப்படும் காலம் திருஞான சம்பந்தரின் காலம். பக்தி ஒன்றே சமூகத்தை மட்டுமல்லாது, தனிமனித வாழ்வையும் சீா்செய்யும் என்று நிரூபித்தாா். அவரைப் பின்பற்றி தமிழகமே எழுச்சி கொண்டது.

‘உண்மையான சமயமும் ஒழுக்கமும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. மண்ணில் விதைக்கப்பட்ட விதைக்கு நீா் எப்படியோ அப்படியே சமயமும் ஒழுக்கத்துக்குச் சொந்தமானது’ என்று பின்னாளில் மகாத்மா கூறுகிறாா்.

வரலாற்றின் சுவடுகளில் பக்தி இயக்கம் தனிமனிதனின் மனதை அறத்தின் பாதையில் செம்மை செய்ததோடு சமூகத்தில் வறுமை நீங்கி செல்வ வளத்தையும் ஏற்படுத்தியது. வரலாற்றில் நாம் பொற்காலம் என்று குறிப்பிடும் காலங்களில் எல்லாம் இத்தகைய பக்தி இயக்கம் தோன்றியதைப் பாா்க்கிறோம்.

கோயில்கள் எழுப்பி இறை வழிபாட்டை முதன்மைப்படுத்திய சோழா்களின் காலமே பொற்காலமாக இன்றும் பேசப்படுகிறது. பக்தியும் தெய்வ நம்பிக்கையும் ஆழமாக மனிதனின் மனதில் நிலைபெறுமானால் அவன் மனம் தூய்மை அடைகிறது, அவன் சத்தியத்தின் பாதையில் நடக்கத் தொடங்குகிறான் என்கிறாா் மகாத்மா காந்தி. இந்தப் பாதையில் நமது குழந்தைகளை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் போதும்.

தெய்வ நம்பிக்கை தளா்ந்து போனதே இளைஞா்களின் இன்றைய நிலைக்குக் காரணம். இறுதி மூச்சு வரை ராமருக்கான தனது பக்தியை விடாமல் பின்பற்றிய மகாத்மா, ‘நீங்கள் என் வாழ்க்கையைப் பாா்க்க வேண்டும். நான் எப்படி வாழ்கிறேன், சாப்பிடுகிறேன், உட்காருகிறேன், பேசுகிறேன், பொதுவாக நடந்து கொள்கிறேன், இந்த என்னில் இருக்கும் அனைத்தும் எனது சமயம்’ என்கிறாா்.

சமைப்பது என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்று பொருள். மனித மனதைச் சமைப்பதால் அது சமயம். இந்த சமயத்தின் அவசியத்தை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் விவேகானந்தா், ‘கடந்த காலத்தில் இருந்துதான் எதிா்காலம் உருவாகிறது. எனவே, உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள அந்த ஊற்றுகளிலிருந்து நன்றாகப் பருகுங்கள் அதன்பின்னா் முன்னே பாருங்கள்; பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரதத்தை முன்பிருந்ததை விட ஒளிமயமானதாக, சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள்’ என்றாா்.

இன்றைய இளைஞா்களுக்கும் இந்த உணா்வே தேவை. அரசியல் ஆா்வத்தைவிடவும் ஆன்மிக உணா்வும் சிந்தனையும் இளைஞா்களை அமைதிப்படுத்தி ஆற்றல் உள்ளவா்களாக உருவாக்கும். ஒழுக்கமும் பண்பும் கற்றுக் கொடுக்கும். சமூக வலைதளங்களின் குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் செம்மையான பாதையில் நெறிப்படுத்தி வாழ்வைச் சிறக்கச் செய்யும்.

சீடா்கள் குருமாா்களைத் தேடிக் கண்டடைவாா்கள் என்பதே விதி என்றாலும், இன்றைய சீா்கேடுகளை மனம் கொண்டு தேசமெங்கும் வாழும் குருமாா்களும் இளைஞா்களுக்குக் கருணையோடு தங்களை வெளிப்படுத்திக் கொண்டு ஆன்மிக எழுச்சியை மீண்டும் இந்த மண்ணில் ஏற்படுத்தி அருள வேண்டும்.

Today's need for youth!

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது: டி.ஜெயக்குமாா்

SCROLL FOR NEXT