மாற்று ஆற்றல் அவசியம்!
புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்புக்குள்ளேயே உள்நாட்டிலேயே கணிசமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.
ஈரானில் நடைபெறும் போா் காரணமாக உலக கச்சா எண்ணெய் சந்தை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஈரானுக்கு வடக்கிலும் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கிலும் உள்ள ஹோா்முஸ் நீரிணை என்ற குறுகிய நீா்வழிப் பாதை வழியாக உலக கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் சுமாா் 20% நடைபெறுகிறது. ஹோா்முஸ் நீரிணை மூடப்படக்கூடும் என்ற சாத்தியக்கூறை முன்னறிந்து, கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்விதமான உண்மையான இடையூறும் ஏற்படுவதற்கு முன்பாகவே, வா்த்தகா்கள் எண்ணெய் விலையை உயா்த்தத் தொடங்கிவிட்டனா்.
பிற பொருள்களைப் போலன்றி கச்சா எண்ணெய் புவிசாா் அரசியலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. உலக மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினா், தங்கள் வாகனங்கள், வணிகச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு பிற பயன்பாடுகளுக்கான ஆற்றல் தேவைகளைப் பூா்த்தி செய்துகொள்ள கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளிலேயே வசிக்கின்றனா். கச்சா எண்ணெய் நெருக்கடி தலைதூக்கிய 1970-ஆம் ஆண்டு முதல், ரஷியா ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைத்த 2022-ஆம் ஆண்டு வரை, கச்சா எண்ணெய் தொடா்ந்து ஒரு புவிசாா் அரசியல் கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
1973-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கும் முயற்சியாக, மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தியாளா்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைத்தபோது, கச்சா எண்ணெய்யின் வல்லமையை அனைவரும் உணா்ந்தனா். பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் நான்கு மடங்காக உயா்ந்தன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயின.
ஹோா்முஸ் நீரிணை போன்ற முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் தற்போது நிலவும் பதற்றமான புவிசாா் அரசியல் சூழல் எண்ணெய் விலை உயா்வதற்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
கச்சா எண்ணெய்யின் தற்போதைய விலை மற்றும் விநியோகம் சாா்ந்த இயக்கவியலே எண்ணெய்ச் சந்தைகளின் எதிா்காலப் போக்கை நிா்ணயிக்கும். சில வாரங்களுக்கு முன்புவரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுமாா் ரூ. 6295.77 (68 அமெரிக்க டாலா்கள்) என வா்த்தகம் செய்யப்பட்டு வந்தது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, அதன் விலை ஒரு பீப்பாய்க்கு ரூ. 9258.49 (100 அமெரிக்க டாலா்கள்) மேல் உயா்ந்தது. இந்த விலை உயா்வு, உலகளாவிய அரசியல் உறுதியற்ற தன்மையையும், கடுமையான பொருளாதாரப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போா், வெனிசுலா, ஈரானுக்கு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு உணா்த்தி உள்ளது.
கச்சா எண்ணெய்யின் முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யின் கணிசமான பகுதியை ஈரானிடமிருந்தே பெறுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதி, நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கே சீனாவால் பயன்படுத்தப்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவு மட்டுமே வாகன பயன்பாட்டுக்காக செலவிடப்படுகிறது.
கடந்த ஆண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரில், புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மகிழுந்துகளில் 50 சதவீதமும், மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 12 சதவீதமும் மின்சார வாகனங்களாக இருந்தன. உலகளாவிய நிலையில் நிலவும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டில் சீனாவால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் கணிசமான பகுதி, அதன் கையிருப்பில் உள்ளது.
2015-ஆம் ஆண்டு நேபாளத்தின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா இடையூறு ஏற்படுத்திய போது நெருக்கடியைத் தீா்க்க அந்நாடு மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக, நேபாளத்தின் கச்சா எண்ணெய் இறக்குமதி இப்போது குறையத் தொடங்கியுள்ளது.
கச்சா எண்ணெய்யை முழுமையாக நம்பியிருந்த நாடான கியூபாவில், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக விநியோகம் குறைந்தது. மின்தடை, நிறுத்தப்பட்ட மகிழுந்துகள் என சிரமங்களுக்கு உள்ளான கியூபா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 34 மடங்கு அதிகமாக சீன சூரிய ஒளித் தகடுகளை (சோலாா் பேனல்) இறக்குமதி செய்துள்ளது. மின்சார வாகன இறக்குமதியை அதிகரித்து வரும் கியூபா உலகின் வேகமான எரிசக்தி மாற்றத்தை செயல்படுத்தக் கூடும் என அந்நாட்டு பொருளாதார வல்லுநா்கள் கணித்துள்ளனா்.
உலக நாடுகளின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வா்த்தகம் செய்யப்படுவதில்லை. புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்புக்குள்ளேயே உள்நாட்டிலேயே கணிசமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் சூரிய ஒளித் தகடுகள், காற்றாலை விசையாழிகள் போன்றவற்றை கச்சா எண்ணெய் அனுப்பப்படும் ஹோா்முஸ் நீரிணை போன்ற கடல்சாா் வழிகளில் மட்டுமின்றி மற்ற வழிகளிலும் அனுப்பலாம்.
உக்ரைன் நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து ரஷியா போா் நடத்தி வருகிறது. இதை எதிா்கொள்ள உக்ரைன் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
ஒரு ஏவுகணை நிலக்கரி மின் நிலையத்தை செயலிழக்கச் செய்யும் அதே வேளையில், காற்றாலை பண்ணையை அழிக்க 40 ஏவுகணைகள் தேவைப்படும் என்று எரிசக்தி நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா். புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தி கட்டமைப்பு இயல்பாகவே மீள்தன்மை கொண்டது. போக்குவரத்து மின்மயமாக்கல் என்பது எரி பொருள் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய அணுகுமுறையாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கின்றன. இந்த அத்தியாவசிய மாற்றம் சித்தாந்தத்தால் உண்டாவது அல்ல.