எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!
நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்
முனைவர் செ. அ. ராகுல் கோல்டன்
நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்; குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான முடிவாக அமைகிறது. மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அவர்களது எதிர்காலப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மாணவருக்கு எது பொருத்தமானது, எந்தக் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தப் பாடப் பிரிவில் அதிக வாய்ப்பு உள்ளது என்பதைக் கண்டறிதல் என்பது சவாலானது.
Advertisement
மாணவரின் விருப்பம், திறமை மிகவும் முக்கியமானது. ஒருவர் செய்ய விரும்பும் செயல் அவருக்கு எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய வேண்டும். எனவே, முதலில் மாணவர் தங்களுடைய ஆர்வம் என்ன? எதைப் படிக்க விரும்புகிறார்கள்? எதில் திறமை இருக்கிறது? என்பதைக் கண்டறிதல் முக்கியமானது.
பாடப் பிரிவின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த தெளிவும் அவசியம். ஒவ்வொரு பிரிவுக்கும் தன்னிச்சையான வேலைவாய்ப்புகள், வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல் போன்றவை அதிக வேலைவாய்ப்புகள் கொண்டவை. அதே சமயம், சமூகப் பணி, பத்திரிகைத் துறை, மொழிபெயர்ப்பு, வலைதள வடிவமைப்பு, சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பிரிவுகளும் தற்போது பெரிதும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இது தவிர, அரசு வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள், கல்வித் துறைகள் மற்றும் ஆராய்ச்சித் துறைகள் குறித்தும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
கல்விச் செலவினம் மற்றும் பெற்றோரின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு பாடப் பிரிவு மற்றும் கல்லூரியைத் தேர்வு செய்வது முக்கியம். பல சிறந்த கல்லூரிகளில் கல்விக்கான கட்டணங்கள் அதிகமாக இருக்கும். எனவே, உதவித்தொகை, அரசு உதவித் திட்டங்கள், கல்விக் கடன் போன்றவற்றின் வாயிலாகக் கல்வியைத் தொடரலாம்.
கல்லூரியின் தரம், உள்ளமைவு, நெறிமுறைகள், வளாக வேலைவாய்ப்புகள், பேராசிரியர்களின் தரம், முன்னாள் மாணவர்களின் வலையமைப்பு ஆகியவற்றைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். என்ஐஆர்எஃப் போன்ற தர வரிசைப் பட்டியல்களைப் பார்த்தும் கல்லூரியின் தரத்தை மதிப்பீடு செய்யலாம். ஒரு கல்லூரியின் தரம் குறித்து அதன் முன்னாள் மாணவர்கள் எந்தப் பணியில் அல்லது பதவியில் இருக்கிறார்கள் என்பதை வைத்தும் நம்மால் அறிய முடியும்.
பாடத்திட்டம், திறன்சார் பயிற்சிகள், தொடர்புத் திறன்கள், வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகள் போன்றவற்றில் கல்லூரி ஏதேனும் வழங்குகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
படிப்பை தானாகவே தேர்வு செய்ய வேண்டும். பெற்றோரின் விருப்பத்துக்கோ அல்லது நண்பர்களின் அழுத்தத்துக்கோ சென்று ஏதாவது ஒரு பாடப் பிரிவில் சேர்வது தவறு. சில பெற்றோர் மருத்துவர் ஆசையுடன் தங்கள் பிள்ளையை நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அந்த மாணவருக்கு அந்தத் துறையில் ஆர்வமில்லையெனில், அவர் சந்திக்கும் உளவியல் அழுத்தம் பெரியதாகும். எனவே, மாணவரின் விருப்பம், ஆர்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாடப் பிரிவுகள் குறித்தும் ஆராய வேண்டும். அனைவரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கோ, பொறியியல் துறைக்கோ செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. தற்போதைய சூழலில் புதுமையான, குறைவாக ஆராயப்பட்ட துறைகளும் பெரும் வாய்ப்புகளை வழங்குகின்றன.
தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, காலநிலை சார்ந்த படிப்புகள், சமையல் உள்ளிட்ட துறைகள் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த உதவக் கூடியவை.
பட்டப் படிப்பை முடித்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்ற வாழ்க்கைப் பாதை குறித்து கல்லூரியில் சேரும் முன்பே மாணவர்கள் திட்டமிட வேண்டும்.
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும், வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்த்துப் பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம். சில பாடப் பிரிவுகள் வெளிநாட்டில் அதிக மதிப்புள்ளவை, வேலைவாய்ப்பு தரக்கூடியவை. அதேபோல், சில பாடப் பிரிவுகள் இந்தியாவில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்கும். எனவே, யோசித்து தேர்வு செய்தல் நலம்.
கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை பெறலாம். அவர்கள் தரும் தகவல்கள், நமக்குத் தெரியாத புதிய துறைகள், புதிய கல்லூரிகள், உதவித்தொகை வாய்ப்புகள் குறித்த தெளிவான மற்றும் அதிகப்படியான விவரங்களைத் தரும்.
ஒரு பாடப் பிரிவு அல்லது துறையைத் தேர்வு செய்த பிறகு, அதில் நாமாகவே புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பட்டப் படிப்பு மட்டுமின்றி சான்றிதழ் படிப்புகள், மொழியறிவு, கணினிப் பயிற்சி, தலைமைத்துவம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில்முனைவோராக மாறும் எண்ணமும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்க்கைத் திறன்களும் வளர வேண்டும். கல்வி என்பது தேர்வு செய்யும் நெருப்பு பாதை; அதில் எது எளிதாகச் சுடாது என்பதல்ல, எது நம்மைச் சுடாமல் ஒளி கொடுக்கும் என்பதே முக்கியம்.
மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டியெழுப்ப, இந்தக் குறிப்புகள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமையும். ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய இயல்பை உணர்ந்து, திறமையை நம்பி, திட்டமிட்டு, காலத்துக்கேற்ற தேர்வை செய்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும்.