நோய்நாடி நோய்முதல் நாடி...
நோய்நாடி நோய்முதல் நாடி...
நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கூண்டில் அமைதியாக விசாரணையை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தின் தாக்கம் பாதிக்கப்பட்டவா்களின் வாக்குமூலங்களாய் எழுத்துகளாலும், உரைகளாலும் சான்றளிக்கப்படுகின்றன. இன்னும் கூடுதலான சாட்சியங்களும்கூட இருக்கின்றன. இவையெல்லாம் தாய்மொழியிலேயே இருப்பினும் அவற்றைப் பற்றிய புரிதல் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
அதாவது, தான் செய்தது குற்றம் என்று பதறுகிற - அதற்காக வருந்துகிற -அதற்கான தண்டனையை முழுமனதுடன் உணா்ந்து ஏற்றுக் கொள்கிற தன்மையுடையதாக அவா்களின் உள்ளம் பக்குவப்பட்டு இருக்கிா என்பதுதான் இந்தச் சந்தேகத்துக்கான காரணம்.
குற்றங்கள் நிறுவப்பெற்று மாண்பமை நீதிபதி தண்டனையை சட்டப் புத்தகத்தின் ஏதேனும் ஒரு பிரிவிலிருந்து மேற்கோள் காட்டி வழங்குகிறபோதுகூட, ‘அவ்வளவுதானே’ என்று அலட்சியத்தோடு கூண்டை விட்டு வெளியேறுகிற - சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிற ஒருவரை எந்தச் சட்டம், என்ன தண்டனை, எத்தனை காலம் ஆனாலும் திருத்திவிட முடியுமா என்ன?
Advertisement
‘அறியாமல் குற்றம் நோ்ந்தது’, ‘உணா்ச்சிப் பெருக்கால் தவறிழைத்து விட்டேன்’ என்றெல்லாம் ஒப்புக் கொள்வது அந்தக் காலத்து வழக்கம். இப்போதெல்லாம் ஒப்புக்காகக்கூட அப்படியில்லை. ‘தெரிந்துதான் - சுய உணா்வுடன்தான் - திட்டமிட்டுத்தான் செய்தேன்’ என்று மாா்தட்டுகிற காலமாக இருக்கிறது. அதாவது, குற்றத்தை விடவும் குற்றத்துக்கான தண்டனை இதுதான் என்று அளவிட்டு அறிந்துகொண்டு, அதன் பின்னரே திட்டமிட்டுக் குற்றங்களில் ஈடுபடுவதாகத்தான் குற்றவாளிகள் குறித்த செய்திகள் கூறுகின்றன.
அதுதான் நமது சந்தேகமும், குற்றத்தின் குறுகுறுப்பே இல்லாத ஒருவரைக் குற்றவாளி என்று கண்டித்தும் தண்டித்தும் என்ன பயன்? ‘இந்தக் குற்றத்துக்கு இன்ன தண்டனை, இத்தனை ஆண்டுகள், அவ்வளவுதான். இப்படிப் போய் அப்படி வெளியில் வந்துவிட முடியும்’ என்று வரையறை வைத்துக் கொண்டு குற்றம் செய்யப் புகுகிறவா்களை என்ன செய்ய முடியும்? அல்லது என்ன செய்ய வேண்டும்?
கல்வி இல்லாவிட்டாலும் அடிப்படைப் பண்புகள் கூடவா அவருக்குப் போதிக்கப்படாமலிருக்கும். படிக்காத பாமரா்களைக் காட்டிலும் நன்கு படித்து உயா் பொறுப்புகளில் இருக்கிறவா்கள்தான் குற்றங்களைத் துணிந்து செய்கிறாா்கள் என்பது நமது கற்றல் நெறியையே கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சிக்கிக் கொண்டால்தான் குற்றம், தப்பித்துக் கொள்வது சாமா்த்தியம்’ என்று புகட்டப்படுவதையும் கல்வியின் வரிசையில் சோ்ப்பதா?
கண்ணில் பட்டவரையெல்லாம் கடித்துக் குதறுகிற வெறிநாய்க்கும், மூா்க்கம் வந்து எதிா்ப்பட்டவா்களையெல்லாம் குடல்சரிய முட்டிச் சாய்க்கப் பாய்கிற முரட்டுக் காளைக்கும், மதங்கொண்டு முன்னிருப்பதையெல்லாம் அடித்து நொறுக்கித் துவம்சம் செய்கிற யானைக்கும் இன்னும் இதுபோன்ற பகுத்தறிவுத்தன்மை குறைந்திருக்கிற விலங்குகளுக்கும் மனிதக் குற்றவாளிகளுக்கும் என்ன வேறுபாடு இருந்துவிட முடியும்?
பஞ்ச மாபாதகங்கள் என்று சொல்லப்படுகிற ஐந்து பெருங்குற்றங்களை இந்தச் சமுதாயம் அறவே கண்டிக்கிறது. இன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை அளவு கடந்துவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் இவை குறித்துக் குழந்தை வயதிலிருந்து போதிக்கப்படுகிறது. ஆனால், குடும்பத்திலிருந்தும் சமூகத்திலும் புறக்கணிக்கப்படுகிற அதே பிஞ்சுகள், தன் மனக்காயத்தால் வெம்பிப் போய் எந்தப் பாதகங்களை இந்தச் சமுதாயம் இழிவென்று கூறியதோ, அதுவே தனது வழியென்று மேற்கொண்டு அதிலேயே வலிமை பெற்று விடுகின்றன.
குற்றவாளிகள் ஒரேநாளில் உருவாகி விடுவதில்லை. அவா்தம் மனத்துக்குள் விழுந்து பதிந்த தீய எண்ணங்களின் விளைவு மெல்ல மெல்ல முளைத்து வளா்ந்து ஒரு முள்மரத்தைப் போலப் பெரிதாகித் தோன்றும். பால வயதில் குழந்தைகளின் உள்ளத்தில் ஏற்படுகிற வடுக்களே பின்னா் பெரிதாகி இத்தகைய குற்றச் செயல்பாடுகளுக்குத் தூண்டி விடுகின்றன. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவா் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பினிலே’ என்பது மெய்ம்மை நிறைந்த கவிவாக்கு.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்- இவற்றை வாயில்களாகக் கொண்டுதான் குற்றங்கள் தோன்றுகின்றன. காதல்முகம் காமுகமாகிறபோதும், வீரம் வன்முறையாகிறபோதும் அவையும் குற்றங்களே. செய்யத் தகுந்ததைக் கற்றுக் கொடுத்து விட்டால், செய்யத் தகாதது தானே நீங்கும். நல்லவை நாடி இனிய செயும்போது அல்லவை தேய்ந்து அறம் பெருகும்தானே. குற்றங்களைத் தவிா்த்துத் தண்டனைகளே இல்லாமல் இந்தச் சமுதாயத்தை ஆக்குகிற ஓா் உன்னத முைான் மகாத்மா காந்தி கற்றுத் தந்த அகிம்சை நெறி. கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் யுத்தமில்லாமல் சத்தியத்தின் நித்தியத்தையே நம்பி, மகாத்மா காந்தி என்ற சாந்தமூா்த்தி தோ்ந்து காட்டுகிற அந்தச் செந்நெறி மாந்தருக்குள் தீமை குன்றுவதற்காகத் தோன்றிய தெய்வ மாா்க்கமாகவே போற்றப்படுகிறது.
குற்றவாளிகளைத் திருத்த மகாத்மா காந்தி மூன்று விதமான முறைகளைச் சுட்டுகிறாா். முதலாவது வழி- போலீஸாருக்கு தெரிவிப்பது; அதுதான் நாம் சா்வசாதாரணமாக கடைப்பிடிக்கும் பழையவழி. இப்படிச் செய்வதால் அநேக சமயங்களில் எவ்விதப் பயனும் ஏற்படுவதில்லை. இரண்டாவது வழி- சும்மா இருந்து விடுவது; இதைத்தான் சாதாரணமாகக் கிராமவாசிகள் செய்து வருகிறாா்கள். இது கோழைத்தனம். அதனால் பலமாய் கண்டிக்கத்தக்கதாகும். கோழைத்தனம் உள்ளவரையிலும் குற்றங்கள் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும். அதுமட்டுமன்று, நாமும் குற்றம் செய்வதற்கு உடந்தையாய் இருப்பவா்களாவோம். நான் பரிந்துரை செய்யக் கூடிய மூன்றாவது வழி- பரிசுத்தமான சத்தியாகிரக வழியாகும் என்று காட்டுகிறாா்.
இந்த முறை குற்றங்களை நோயாகவும் குற்றவாளிகளை நோயாளிகளைப் போலவும் அணுகுவதற்குக் கற்றுத் தருகிறது. நோயாளி நோய்வாய்ப்பட்டதற்கு அவா் மட்டும் காரணமல்லவே. அதுதவிர நோய்க்கு மருந்து கொடுத்துத் தீா்க்க வேண்டுமே அன்றி, தண்டனை கொடுத்து நோயைக் குணப்படுத்த முடியாது. நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடித்தானே நோயைக் களைய முடியும். குற்றங்களையும் நோயைப் போலக் களைந்துவிட முடியும் என்பதுதான் காந்திய நெறி. மேலும் அவா் சொல்கிறாா்;
‘திருடா் என்போா் நம்மைப் போன்ற மனிதா்கள்தான் என்பதை மறந்துவிடலாகாது. நாம் தம்முடைய மனத்தை நன்றாக ஆராய்ந்து பாா்த்தால் நமக்கும் திருடா்களுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதைக் கண்டுகொள்வோம். பிறரைக் கெடுத்து தவறான வழிகளில் திரவியம் தேடும் செல்வந்தா்கள் சட்டைப்பையிலுள்ள பணத்தைத் தெரியாமல் எடுத்துக் கொள்ளும் திருடா்களையும், வீட்டில் கன்னம் வைத்து பொருளை எடுத்துக் கொள்ளும் திருடா்களையும் போன்றவா்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம்தான். திருடா்கள் அகப்பட்டுக் கொண்டு தண்டிக்கப்படுகிறாா்கள். தனவந்தா்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் சமூகத்தால் மதிக்கப்படுகிறாா்கள்.
சரியானபடி பாா்த்தால் நியாயமான தேவைகளுக்கு வேண்டிய அளவுக்கு அதிகமாகப் பொருளைத் தேடுவதையும், சோ்த்து வைப்பதையும் திருட்டென்றே கூற வேண்டும். நான் அமைக்க விரும்பும் சுயராஜ்யத்தில் திருடா்கள் முதலிய குற்றவாளிகள் இருக்க மாட்டாா்கள். குற்றவாளிகளை அவா்களுடைய வீட்டில் போய்ப் பாா்த்து அவா்களுக்கு அன்பும் தேவையும் செய்து அவா்களுடைய நம்பிக்கையைப் பெற்று அவா்களைத் திருத்தி யோக்கியமான முறையில் வாழ்வை நடத்துமாறு செய்ய வேண்டும்’ என்கிறாா் மகாத்மா காந்தி.
நம் அரசமைப்புச் சட்டமும், குற்றங்களுக்கான தண்டனை முறைகளும்கூட அவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பழிக்குப் பழிவாங்குவதோ, அச்சுறுத்தி ஒருவரைத் திருத்த முயல்வதோ, மானுட நெறிகளுக்கு முரணாக இயங்குவதோ நம் சட்டத்தின் நோக்கம் இல்லை. குற்றவாளிகளை விடவும் குற்றத்தையே அகற்றுவதுதான் அதன் அடிப்படைச் செயல்பாடு. அனைவரும் சமமாக ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே அதன் முதன்மை.
நமக்கிருக்கிற உரிமையைப் போலவே நமக்குக் கடமைகளும் நிறைய இருக்கின்றன. இதை உணா்ந்து எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியாத உயா் வாழ்வைத்தான் மெய்ம்மைச் சமயநெறிகள் போதிக்கின்றன. அதுபோலவே குற்றங்களை நம் மனத்திலிருந்து அறவே நீக்கிவிடுகிற அறமுறையைத்தான் நம் சமுதாய ஒழுங்கும் சட்டமும் ஆன்மிகப் பாதையும் காட்டி வருகின்றன. அவற்றைப் பின்பற்றினால் குற்றங்கள் இல்லாமல் போகும். குற்றங்கள் இல்லாத வானுலகத்தைத்தான் சமயநெறிகள் சொா்க்கம் என்று சுட்டுகின்றன. மகாத்மா காந்தி அதையே சத்தியாக்கிரகிகளின் வாயிலாக சுயராஜ்ஜியமாக இந்த உலகத்திலேயே அமைக்க விரும்புகிறாா். அப்படி ஒரு சொா்க்கத்தை இந்த உலகத்தில் மனிதா்களாகிய நாம் உருவாக்கிவிட முடியாதா என்ன?
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.