அன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது "வெள்ளையனே வெளியேறு' என்ற "குயிட் இந்தியா' இயக்கம். இன்று நம் தேசத்தை வலுவான தேசமாக மாற்ற உள்ளது "பிட் இந்தியா' ஆகும். விடுதலைக்கு முன்பு "குயிட் இந்தியா' என்று போராடியவர்களுக்கும், இன்று "பிட் இந்தியா' வை உருவாக்க உழைப்பவர்களுக்கும் உந்துசக்தியாக ஒருவர் இருந்தார், இருக்கிறார் என்றால் அது எல்லா காலத்து இளைஞர்களின் நாயகரான சுவாமி விவேகானந்தரே ஆவார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-ஆம் தேதியை தேசிய இளைஞர்கள் தினமாக மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கோடிக்கணக்கான பெண்கள் படிக்கிறார்கள், கல்வி பெற்று உயர் பதவி வகிக்கிறார்கள். இதற்கு மூல காரணமாகச் செயல்பட்டவர் சுவாமி விவேகானந்தர். ஆம், பெண்களை மதிக்கத் தவறியதால்தான் இந்தியர்கள் மதிப்பிழந்தார்கள் என்பதைக் கண்டறிந்து நமக்குக் காட்டியவர் சுவாமி விவேகானந்தரே.
இந்திய சமுதாயம் என்ற பறவைக்கு இரண்டு இறக்கைகள் தேவை. ஓர் இறக்கை ஆணின் ஆற்றல்மிக்க வளர்ச்சி. அடுத்த இறக்கை பெண்ணின் பெருமைமிகு வளர்ச்சி என்று தாய்குலத்துக்காகக் குரல் தந்தவர்தான் சுவாமி விவேகானந்தர்.
மனிதர்கள் அனைவரும் எல்லையற்ற சக்தி படைத்தவர்கள். ஆனால், விழிப்புணர்வு இல்லாத தன்மையினால் ராஜகுமாரர்களாக இருக்க வேண்டியவர்கள் பிச்சைக்காரர்களாகப் பிழைத்து வருவதைக் கண்டு சுவாமிஜி மிகவும் வருந்தினார். அந்த நிலையில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என்பதற்காக அவர் அருளிய மகா மந்திரம்தான் இது. எழுந்திடு, விழித்திடு, ஓயாதிரு, உழைத்திடு.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் நிலை எழுந்திரு என்பதுதான். எதிலிருந்து ஒருவன் எழ வேண்டும்?
1. சுயநலத்திலிருந்து எழுந்திடு!:
திறமைகளும் தன்னம்பிக்கையும் தகுதிகளும் வளர்த்துக் கொள்ளாமல் "உண்டு உடுத்தித் திரியும் இரண்டு கால் மாடு போல்' ஆட்டுமந்தைகளாக வாழும் பொறுப்பற்ற கூட்டத்திலிருந்து மனிதன் வெளிவர வேண்டும்.
2. எச்சரிக்கையாக இருப்பவர்களுடன் சேர்ந்திடு: இரண்டாம் பகுதி விழித்திடு. வெற்றுக் கூட்டத்திலிருந்து வெளிவந்தால் மட்டும் போதாது. நல்லோர் கூட்டத்தில் ஒருவர் இணைய வேண்டும். யாரெல்லாம் தரமாக, வேகமாக, விவேகமாக முன்னேறுகிறார்களோ, யாரெல்லாம் பொறுப்புடன், சிறப்புடன் செயல்படுகிறார்களோ, யாரெல்லாம் மக்கள் தொண்டில் ஈடுபடுகிறார்களோ அவர்களை அடையாளம் காண வேண்டும். லட்சியம் உள்ள ஒருவன் அவர்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். விழிப்புடன் அவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்பது இரண்டாம் நிலை.
3. தேங்காதே; தயங்காதே: மூன்றாம் நிலை மிக மிக முக்கியமானது. "நல்லவனாக இருப்பதும் நன்மை செய்வதும்தான் சமய வாழ்க்கையின் சாரம்' என்பார் சுவாமி விவேகானந்தர்.
அதன்படி நல்ல காரியங்களைச் செய்யும் போதும் நல்லவனாக இருக்கும் போதும் சில சிரமங்களும் சில பிரச்னைகளும் வரலாம். அதற்காக வாழ்க்கையில் ஒருவர் தேங்கியும் தயங்கியும் நின்றுவிடக் கூடாது. தொய்வு அடைந்திடக் கூடாது என்பதற்காக சுவாமி விவேகானந்தர், "நில்லாதே' என்ற எதிர்பதத்தைப் போடுகிறார்; முயற்சியில் சோர்ந்து விடாதே என்றும் எச்சரிக்கிறார்.
4. வேண்டியது ஒரு வெற்றி அல்ல; ஒவ்வொன்றிலும் வெற்றி: நல்ல வகையில் தொடங்கிய லட்சியப் பயணத்தில் தடுமாறாமல் போவதற்கு ஒருவர் தொடர்ந்து நல்லோருடன் இணங்கி நல்ல சக்திகளுடன் செயல்பட வேண்டும். அதனால் அவரது வாழ்க்கைப் பயணம் தெளிவாக இருக்கும். அவர் எடுக்கும் முயற்சி அவருக்கும் பிறருக்கும் பயன்படும். விளையாட்டில் ஏதோ ஒரு போட்டியில் வெற்றி பெறுவது பெரிதல்ல. தொடர் வெற்றியே முக்கியம்.
விரும்பிய லட்சியத்தை அடைவதிலிருந்து ஒருவர் தனது கவனத்தைத் திசை திருப்பக் கூடாது. நம் அன்றாட வாழ்க்கையிலும் சரி, ஆன்மிக வாழ்க்கையிலும் சரி கவனச் சிதைவு என்பது பெரிய தடை. அந்தத் தடையைக் கவனத்துடன் ஒருவர் தாண்ட வேண்டும். முடிந்தால் தகர்த்தெறிய வேண்டும்.
கவனச்சிதைவு என்பது கருச்சிதைவு போன்றது. எல்லா நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. அதுதான் முன்னேறும் மனிதனின் இயல்பான நிலை என்று நம் அனைவருக்கும் சுவாமி விவேகானந்தர் காட்டுகிறார்.
ஆட்டுமந்தைகள் போன்று மனிதர்கள் பலரும் கேளிக்கைக் களியாட்டங்களிலும், போட்டி பொறாமைகளிலும், சுயநலத்திலும் சிக்கி அலைகிறார்கள். அப்படிப்பட்டவர்களை சுவாமி விவேகானந்தர் ஆண் சிங்கமாக, வேதாந்த சிங்கமாக இவ்வாறு எழுப்புகிறார்.
"எழுந்திடு, விழித்திடு, லட்சியத்தை அடையும் வரை ஓயாது உழைத்திடு'. இந்த ஒரு செய்தி நம் ஒவ்வொருவரையும் இளமைச் சக்தியுடன் செயல்பட வைக்கும்; சமுதாயத்தைச் சுறுசுறுப்பாக்கும்; தேசத்தைத் திறனுடன் திடம்படவைக்கும். இதுவே சுவாமி விவேகானந்தர் தேசிய இளைஞர் தினத்தை நாம் கொண்டாடுவதற்கான நோக்கம் ஆகும்.
கட்டுரையாளர்: தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.