முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

'விவேகானந்த நவராத்திரி' சிந்தனைகள்

நூறு துடிப்பு மிக்க இளைஞர்கள் இருந்தால் இந்த உலகத்தை மாற்றி அமைத்துவிடலாம் என்ற சிந்தனை கொண்ட அவரது நம்பிக்கையின் நிலமாகத் திகழ்ந்தது தமிழகம்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:39 PM
சுவாமி விவேகானந்தர்.
பகிர்:

-குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தேசத்தின் சேவையே தெய்வத்தின் சேவை என்று உலகத்துக்குக் கற்றுக் கொடுத்த சுவாமி விவேகானந்தரின் நினைவில் ஆழ்ந்திருக்கிறது மனம். நூறு துடிப்பு மிக்க இளைஞர்கள் இருந்தால் இந்த உலகத்தை மாற்றி அமைத்துவிடலாம் என்ற சிந்தனை கொண்ட அவரது நம்பிக்கையின் நிலமாகத் திகழ்ந்தது தமிழகம்.

செழிப்புமிக்க அமெரிக்காவில் தனது நான்காண்டு கால வாசத்தை விட்டு, பாரதம் திரும்புவது குறித்து ஓர் அறிஞர் கேட்டபோது "இந்தியாவின் தூசிகூட எனக்கு புனிதமானது; பாரதம் ஒரு புனித பூமி - யாத்திரை ஸ்தலம்' என்று அவர் பதிலுரைத்தார்.

Advertisement

அமெரிக்காவில் தனது வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்தடைந்த பிறகு, சுவாமி விவேகானந்தரின் ஒளிபொருந்திய கண்கள் பாரத அன்னையைக் காண ஆவலுடன் இருந்தன. ஜனவரி 26, 1897-ஆம் ஆண்டு தென் தமிழகத்தின் பாம்பன் கரையில் வந்து இறங்கினார்.

ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, சுவாமிஜியை எதிர்கொண்டு வரவேற்கக் கடற்கரையில் காத்திருந்தார். விவேகானந்தரை அழைத்துச் செல்லக் காத்திருந்த குதிரை வண்டியில் குதிரைகளை அவிழ்த்துவிட்டு தொண்டர்களில் ஒருவராக மன்னர் தானும் வண்டியை இழுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றதை வரலாற்றின் பக்கங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளன. சுவாமிஜியின் புனிதமான பாதங்கள் பாரத மண்ணில் பதிந்த இடத்தை புனிதத் தலமாகக் கருதி பாஸ்கர சேதுபதி 40 அடி உயரத்தில் வெற்றிச் சின்னத்தை எழுப்பி அதில் "சத்யமேவ ஜெயதே' என்றும் பொறித்து வைத்தார்.

தூய்மையான துறவியின் பெருமையை, தமிழகத்தின் ஆன்மிக நாட்டத்தை இந்தச் சம்பவம் உலகுக்கு இன்னும் பல நூற்றாண்டுகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்.

ராமநாதபுரத்தில் சுவாமிஜி ஆற்றிய உரை, "சகோதரர்களே, எழுந்திருங்கள்; விழித்துக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் நமது தேசத்துக்காக கடினமாக உழைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்' என்று உற்சாகப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. ராமநாதபுரத்திலிருந்து கும்பகோணம் வந்த சுவாமி விவேகானந்தர், எழுந்திருங்கள்; விழித்துக்கொள்ளுங்கள் என்பதோடு "இலக்கை அடையும் வரை நிற்காது முன்னேறிச் செல்லுங்கள்' என்றும் அறைகூவல் விடுத்தார். தமிழகத்தின் மண்ணில் சுவாமிஜி விடுத்த இந்த அறை கூவலே அவரது அடையாளமானது.

1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவர் கும்பகோணத்தில் தங்கியிருந்து, ஆற்றிய ஊக்கமளிக்கும் உரைகள் வர்க்க பேதமின்றி அனைவர் மனதிலும் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின.

பிப்ரவரி 6-ஆம் தேதி சுவாமிஜி சென்னை வந்தடைந்தார். தருமமிகு சென்னை செய்த தவப்பயன் விவேகானந்தர் ஒன்பது நாள்கள் நமது மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மாளிகையில் தங்கியிருந்தது. ஒன்பது நாள்களும் அவரது உரைகளும், எண்ணங்களும், செயல்களும் மக்களின் மனதில் ஏற்பட்டிருந்த உற்சாகமும் அளப்பரியன.

இன்னும் தமிழ் மண்ணில் அந்த உற்சாகம் வற்றிவிடவில்லை. இப்போதும் சுவாமி விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த ஒன்பது நாள்களை "விவேகானந்த நவராத்திரி' என்று கொண்டாடி மகிழ்கிறோம். நிகழாண்டும் "விவேகானந்த நவராத்திரி' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய நிலையில் சுவாமிஜி சென்னை வருகிறார் என்ற செய்தி எப்படிப் பரவியிருக்கும்? மக்கள் எந்தப் போக் குவரத்து சாதனத்தைப் பயன்படுத்தி அவரைக் காண விழைந்திருப்பார்கள் என எண்ணிப் பார்க்கையில் பரவசம் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமிஜியைக் காண சென்னைக்கு நடந்தே வந்து கடற்கரையில் குவிந்திருந்தார்கள்.

பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை மக்கள் மனங்களில் தேச சிந்தனை மேலோங்கி இருந்ததையே இந்த உற்சாகம் வெளிப்படுத்துகிறது.

சுவாமி விவேகானந்தர், சென்னை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து அவர் தங்கியிருந்த "ஐஸ் ஹவுஸ்' எனப்படும் கெசில் கெர்னன் மாளிகை வரை மக்கள் ஆரவாரம் விண்ணை எட்டியது. கூட்டத்தில் இளைஞர்களும் மாணவர்களும் உற்சாகத்துடன் குழுமியிருந்தனர்.

வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சுவாமிஜி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். பெண்கள் வீடுகள் தோறும் வாசலில் விளக்கேற்றி சுவாமி விவேகானந்தரை வரவேற்றனர்.

ஒன்பது நாள்களும் அவர் ஆற்றிய உரைகள், கலந்துரையாடல்கள் இந்த தேசத்தின் விடுதலைக்கானதாகவே அமைந்திருந்தன. ஆன்மிக அடையாளமே பாரதத்தின் பெருமை. அதை மீட்டெடுத்து நாம் உலகுக்கு வழிகாட்டுபவர்களாக உயர வேண்டும் என்ற அவரது சிந்தனையை தமிழகம் ஆர்வத்தோடும் அடங்கா உற்சாகத்தோடும் ஏற்றுக்கொண்டது.

இந்த நாள்களில் நடைபெற்ற சம்பவங்களும் தமிழகத்தின் மீது இறைவனின் கருணை நிரம்பியிருப்பதை நிரூபித்தன எனலாம். பிப்ரவரி 8-ஆம் தேதி விக்டோரியா அரங்கில் சுவாமிஜியின் உரையைக் கேட்பதற்காகப் பல்லாயிரம் பேர் கூடியிருந்ததைக் கண்டு அவர் நெகிழ்ந்து போனார். மக்களுக்காகவே நாம் என்று எண்ணிய அவர், ஒரு வண்டியில் ஏறி நின்று கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது "சென்னை இளைஞர்களே! என் நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது' என்றார்.

இந்தக் காட்சி போர்க்களத்தில் நிகழ்ந்த கீதோபதேசக் காட்சியை நினைவுபடுத்தியது. நாட்டின் விடுதலையும் தனிமனித ஆன்ம விடுதலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற சிந்தனை சென்னை மண்ணில் அந்த நாளில் விதைக்கப்பட்டது. அந்த விதையே வீரியத்துடன் வளர்ந்து சுதந்திர பூமியாக பாரதத்தை மீட்டெடுத்தது.

1897-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரு புண்ணிய தினம். சுவாமிஜி "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் தனது தனிச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். உரையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். 3,000 பேர் கூடியிருந்த அரங்கம் சுவாமிஜியின் பேச்சில் கட்டுண்டு கிடந்தது.

உரையைக் கேட்ட பேராசிரியர் ஒருவர் அதைப் பற்றி "விவேகானந்தர் - மனிதனை உருவாக்கும் அவரது நற்செய்தி' என்ற பதிவில், "சுவாமியின் சொற்பொழிவு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் மேடையில் கர்ஜிக்கும் சிங்கம் போல் தெரிந்தார். அவரது குரலின் கர்ஜனை அரங்கம் எங்கும் எதிரொலித்தது' என்று எழுதினார்.

சுவாமிஜியே இந்திய சுதந்திரப் போருக்கான வீரியத்தை ஏற்படுத்தியவர். என்றைக்கும் பாரதத்தின் மேன்மையைக் கருதுகிறவர்கள் பயணிக்க அதுவே சிறந்த வழியாகும். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் என எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தலைவர்களாக இருந்தாலும், விவேகானந்தரின் சிந்தனைகளே அவர்களை வழிநடத்தின. இன்றளவும் அதுவே நமக்கான வழியாக இருந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும் அதை உணர்ந்தே சுவாமிஜி தங்கியிருந்த, உரையாடிய இடத்தில் 2023-ஆம் ஆண்டு சென்று ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதோடு சுவாமிஜி தங்கியிருந்த அறையில் அமர்ந்து தியானம் செய்தார். அப்போது பிரதமர், "பாரதம் குறித்த சுவாமிஜியின் கனவு தற்போது நனவாகி வருவதை அவர் பார்த்துக்கொண்டிருப்பார்' என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு பேசியதை நினைத்துப் பார்க்கிறேன்.

2024-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தில் பிரதமர் தியானம் மேற்கொண்ட காட்சி களும் நினைவில் நிழலாடுகின்றன.

விவேகானந்தர் என் வாழ்வில் எப்போதும் ஓர் உந்துசக்தியாகவே விளங்குகிறார். நான் இயக்கத் தலைவராக இருந்தபோது நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, போதையில்லா சமுதாயம் அமைத்தல், தீண்டாமை ஒழிப்பு, பொது சிவில் சட்டம், சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வள மேம்பாட்டை வலியுறுத்தி 93 நாள்கள் தமிழ்நாடு முழுவதும் நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டேன். அத்தகைய உயரிய நோக்கங்களுக்கான எனது நடைப்பயணம் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் தொடங்கி சென்னை விவேகானந்தர் இல்லத்தில்தான் முடிவுற்றது.

"விவேகானந்த நவராத்திரி' எனக்குள் பல சிந்தனைகளை நினைவுகளைக் கொண்டுவருகின்றன. தமிழ்நாட்டின் மீதும் இளைஞர்கள் மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை இன்றைக்கும் அப்படியே இருப்பதாக உணர்கிறேன். சர்வமத மகாசபையில் விவேகானந்தர் உரையாற்றி, உலகப் புகழோடு திரும்பிய பின்னர் சிறந்த துறவி என்று அனைவரும் அவரைக் கொண்டாடினார்கள்.

தமிழகமோ அவர் அப்படிப் புகழ் பெறுவதற்கு முன்பே அடையாளம் கண்டு கொண்டாடிய பெருமைக்கு உரியது. காவி உடையோடு இந்தியா முழுவதும் சுற்றி வந்த சுவாமிஜி சர்வமத மகா சபையில் கலந்து கொள்வதற்கு உதவியாக உறுதுணையாக நின்றது தமிழகம். மன்னர் பாஸ்கர சேதுபதியும், அளசிங்கப் பெருமாள் போன்ற அவரது பக்தர்களும் மேற்கொண்ட முயற்சிகளே சுவாமிஜியின் புகழ் ஓங்கவும், அதன்மூலம் பாரதத்தின் பெருமை வெளிப்படவும் காரணமாக அமைந்தன.

ஞானத்தை, துறவை, ஆன்மிக சிந்தனைகளைப் போற்றி வளர்த்து அந்த ஒளியில் வளர்ச்சி கண்ட பாரம்பரியம் கொண்டது தமிழகம் என்பதை விவேகானந்தரின் வரலாறு உலகத்துக்குப் பறைசாற்றுகிறது.

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய மகாகவி பாரதி,

"எல்லாரும் அமரநிலை

எய்தும்நன் முறையை

இந்தியா உலகிற்களிக்கும்-ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்-ஆம் ஆம்,

இந்தியா உலகிற்களிக்கும்'

என்று மீண்டும் மீண்டும் அழுத்திச்

சொன்னது சுவாமி விவேகானந்தர் தந்த நம்பிக்கையில்தான்.

மகாகவியின் நம்பிக்கை மெய்ப்பட, சுவாமி விவேகானந்தரின் வழியில் பாரதத்தின் மேன்மை மேன்மேலும் உயர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments