இயற்கை கடவுள் என்றால் இயற்கையின் நுண்குரலைப் புரிந்து கொண்டு அவற்றை நமக்குத் தெரிவிப்பவர்கள் தேவதைகள். அவர்கள் இயற்கையின் தூதுவர்கள். அப்படியான ஓர் "இயற்கையின் தூதுவர்' என்று சூழலியல் அறிஞர் மாதவ் காட்கிலைக் குறிப்பிடலாம்.
தொழில் பெருக்கம், நகரமயமாதல், இயந்திரமயமாதல் ஆகியவை நவீனகால வளர்ச்சிக்குத் தேவைதான் என்றாலும், இயற்கை வளங்களையும் உலகின் சூழலியல் சமநிலையையும் அவை பாதிக்கும் என்றால், அவற்றைக் கட்டுக்குள் வைத்து எதிர்காலத்தைப் பாழாக்காமல் வளர்ச்சி அடைவது எப்படி என்பதைச் சூழலியலாளர்களின் ஆய்வறிக்கைகள் மூலம் கண்டறிய முடியும்.
காதைப் பிளக்கும் இயந்திர ஒலிகளையும், கண்களைக் கூசச் செய்யும் வண்ணக் காட்சிகளையும் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்ட நமக்கு, இயற்கையின் நுண் குரல்களையும், அதன் நுட்பமான சமிக்ஞைகளையும் உணரும் புலன்கள் இல்லை. அவை நாம் அறியாமலேயே தூர்ந்து போய் விட்டன. ஆகவே, நுண் குரல் உணரும் திறன்கொண்டவர்களை அறியும் திறனாவது நாம் கொண்டிருத்தல் அவசியம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அற்புதத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர் மாதவ் காட்கில். அங்கு அவர் கால்படாத இடமே இல்லை என்கிற அளவுக்கு மலை முழுவதும் பயணித்தவர். பல்லுயிர் பெருக்கத்துக்குத் தாய்மடியாக மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர். நாம் பருகும் நீருக்கும், சுவாசிக்கும் காற்றுக்கும் இந்தப் பல்லுயிர் பெருக்கமே ஆதாரம்.
மாதவ் காட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, உயிரியல் பன்மைத்துவம் கொண்ட உலக அதிசயம் மேற்குத் தொடர்ச்சி மலை என்பதையும், அதைப் பாதுகாக்கும் நெறிமுறைகளையும் ஆராய்ந்து அறிவியல்பூர்வமான ஓர் அறிக்கையை அரசுக்கு வழங்கியது.
அதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை ஏற்று, அதன் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால் கேரளத்தின் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்காது என்று சூழலியல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
கர்நாடகம், கோவா மற்றும் இன்னபிற பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளுக்கும் இது பொருந்தும். கல் குவாரிகள், மின் நிலையங்கள், சாலைகள், புதிய கட்டுமானங்கள் முதலியவற்றை எந்தத் தயக்கமும் இன்றித் தடை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் காட்கில். அதைக் கவனத்தில் கொள்ளாமல், புதிய கட்டடங்களையும் "ரிசார்ட்டு'களையும் அமைப்பதற்கு அனுமதி அளித்ததால்தான் பேரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது என்று முன்பு அவரது அறிக்கையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலரான மாதவ் காட்கில், உலகளாவிய சூழலியலையும், பூமியின் பசுமையைக் காப்பதிலும் கவனம் செலுத்தியவர். சர்வதேச சூழலியல் பத்திரிகைகளிலும், கருத்தரங்குகளிலும் சூழலியல் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை அறிவியல்பூர்வமாக எழுதியும், வாசித்தும் உள்ளார். வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹாவுடன் இணைந்தும், தனித்தும் ஆங்கிலத்தில் சூழலியல் குறித்த பல நூல்களை எழுதி வெளியிட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த மாதவ் காட்கில் தலைமையிலான ஆய்வறிஞர் குழுவின் அறிக்கை ‘நீர்க்கோபுரம்' என்ற மொழிபெயர்ப்பு நூலாக தமிழில் வெளிவந்துள்ளது. மேலும் சில நூல்களும் தமிழில் கிடைக்கின்றன. "மக்களுக்கான சூழலியலாளர்' என்று காட்கில் குறித்து அவரது நண்பரான ராமச்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளதன் மூலம் காட்கிலின் மக்கள் சார்பு புலப்படும்.
பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரைச் சார்ந்து அவரது சூழலியல் கோட்பாடுகள் அமைந்திருந்தன. இயற்கைச் சூழல் அழிக்கப்படுவதால் வனத்தில் வாழ்பவர்களும் வனவிலங்குகளும் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து கவலைப்படுபவராக இருந்தார் காட்கில். 1942-இல் புணேயில் பிறந்த மாதவ் காட்கில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி படித்தவர். அங்கேயே கணிதவியல் அடிப்படையிலான சூழலியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பின்னர், அங்கு பேராசிரியராகவும் பணியாற்றினார். அவரது மனைவி சுலோச்சனாவும் ஹார்வர்டில் கணிதத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் பணியாற்றிய இருவரும் இந்தியாவுக்கு வந்து, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்குச் சேர்ந்தனர். அங்கு சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையத்தைத் தொடங்கினார் காட்கில்.
யானைகள், வன விலங்குகளின் வாழ்க்கை முறை குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டார். காடுகள் பாதுகாப்புச் சட்டம் (1980), பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் (2002) ஆகியவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் காட்கில். தன்னுடைய சூழலியல் பணிக்காக ஐ.நா. சபையின் "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது, ஹார்வர்டு நூற்றாண்டு பதக்கம், விக்ரம் சாராபாய் விருது, இந்திய அரசின் "பத்மஸ்ரீ', "பத்மபூஷண்' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
இறுதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சிந்தித்து வந்த மாதவ் காட்கில் புணே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பால் (83) ஜனவரி 7-ஆம் தேதி மரணடைந்தார் எனும் கவலை தரும் செய்தி இயற்கையை நேசிக்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அலட்சியத்தாலோ, சுயநலத்தாலோ சூழலியல் அறிஞர்களின் முன்னறிவிப்புகளைத் தவிர்ப்பது மனித குலத்துக்கு பாதிப்பு என்பதை இனியேனும் உணர்ந்து செயல்பட வேண்டும். மாதவ் காட்கிலின் சூழலியல் குறித்த ஆவணங்கள், ஆய்வு நூல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.