உணவு மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. ஆனால், தெற்காசிய சமூகங்களில் அது உடலின் தேவையை நிறைவேற்றும் எரிபொருளாக அல்ல; சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் கருவியாக மாறியுள்ளது.இந்த மனநிலை உணவின் சத்து நிலையை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறது. அதிக நெய், எண்ணெய், இனிப்புகள், இறைச்சி கொண்ட உணவு பணக்கார உணவு என உயர்த்திப் பேசப்படுகிறது. அதே நேரத்தில் கஞ்சி, பருப்பு, எளிய காய்கறி உணவுகள் ஏழை உணவு என்ற முத்திரை பெறுகின்றன. இதன் விளைவாக, சத்தான உணவு என்பது ஏழ்மையின் அடையாளம் என்ற தவறான சமூக நம்பிக்கை உருவாகிறது.
இயற்கை உணவு குறித்த பேச்சு அதிகமாக இருந்தாலும், நடைமுறையில் ரசாயன கலவைகள் நிறைந்த உணவுகளே அன்றாட உணவாக மாறியுள்ளன. லேபிள் வாசிப்பு, உள்ளடக்கப் புரிதல் போன்றவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. பிரபலமானது நல்லது என்ற நம்பிக்கை உணவுத் தேர்வை வழிநடத்துகிறது. இதனால் உணவு, உடல்நலத்துக்கான அறிவியல் முடிவாக அல்ல; சந்தை மற்றும் சமூக அழுத்தங்களின் விளைவாக மாறுகிறது.
ஐரோப்பிய சமூகங்களில், இதற்கு மாறாக உணவு பெரும்பாலும் உடல் நலத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. உணவு பிரமீடு, அளவுக் கட்டுப்பாடு, சத்துக் கணக்கீடு போன்றவை அன்றாடப் பழக்கமாக உள்ளன. அங்கு உணவு ஒரு காட்சிப் பொருளல்ல; அது ஒரு பொறுப்பு. இந்த அடிப்படை வேறுபாடுதான் இரண்டு உலகங்களின் உணவு மனநிலையைப் பிரிக்கிறது.
தெற்காசிய சமூகங்களில் நாம் கடினமாக உழைக்கிறோம் என்பதே உடல் அசைவுக்கான விளக்கமாக வழங்கப்படுகிறது. விவசாயம், வீட்டு வேலை, உடல் உழைப்பு ஆகியவை உடற்பயிற்சியாகவே கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாக, உடல் அசைவு என்பது திட்டமிட்ட, உடலை சமநிலைப்படுத்தும் இயக்கமாகும். உழைப்பும் உடற்பயிற்சியும் ஒன்றல்ல என்ற உண்மை பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
நகரமயமாக்கல், தொழில்நுட்ப வசதிகள், அமர்ந்தபடி செய்யும் வேலைகள் ஆகியவை உடல் அசைவை பெரிதும் குறைத்துள்ளன. ஆனால், அதற்கேற்ற உடற்பயிற்சி பழக்கம் வளரவில்லை. உடல் அசைவு என்பது எடை குறைப்பதற்கான தற்காலிக முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. குண்டானால் நடைப்பயிற்சி,
திருமணத்துக்கு முன்பாக உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வது என்ற மனநிலையே மேலோங்கியுள்ளது.ஐரோப்பிய சமூகங்களில், வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக உடல் அசைவு உள்ளது. நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது, விளையாட்டு, வெளிப்புற செயல்பாடுகள் போன்றவை உடல் எடைக்காக அல்ல; உடல்மன சமநிலைக்காக மேற்கொள்ளப்படுகின்றன. உடல் அசைவு என்பது தண்டனை அல்ல; அது உடலுக்கான பராமரிப்பு என்ற புரிதல் அங்கு வலுவாக உள்ளது.
உணவும் உடல் அசைவும் குறித்து பேசும் சமூகங்கள்கூட, மன நலன் குறித்து பேசுவதில் இன்னும் தயங்குகின்றன.
தெற்காசிய சமூகங்களில் உளநலம் ஒரு சுகாதாரப் பிரச்னையாக அல்ல; ஒரு தனிப்பட்ட பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. அதெல்லாம் மனசு பலவீனம்தான்; அதிகமாக யோசிக்காதே போன்ற வார்த்தைகள் மனநலப் பிரச்னைகளை மூடி மறைக்கின்றன.
உணவு, உடல் அசைவு, மனநலம் இவை மூன்றும் ஒன்றோடொன்று இணைந்தவை. தவறான உணவு மனநிலையைப் பாதிக்கிறது. மன அழுத்தம் உடல் அசைவைக் குறைக்கிறது. உடல் அசைவு இல்லாமை மீண்டும் உணவுப் பழக்கத்தைப் பாதிக்கிறது. இந்தச் சங்கிலி உடைக்கப்படாவிட்டால், ஆரோக்கியம் முழுமை அடையாது.
உடல் தோற்றம் குறித்த சமூக விமர்சனங்கள் உளநலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அதிக எடை அசிங்கம், மெலிந்த உடல் அழகு என்ற வரையறைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஐரோப்பிய சமூகங்களில் உள நலன் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ஆலோசனை, சிகிச்சை, உதவி கேட்பது இவை பலவீனம் அல்ல; உரிமை என்ற புரிதல் அங்கு வளர்ந்துள்ளது. மனம் ஓர் உறுப்பு; அதற்கும் பராமரிப்பு தேவை என்ற உண்மை மெதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
உணவு, உடல் அசைவு, உளநலன் இவை மூன்றும் தனித்தனி அல்ல. ஒன்றைப் புறக்கணித்தால் மற்ற இரண்டும் சீர்குலையும். உணவை அந்தஸ்திலிருந்து விடுவிக்காமல், உடல் அசைவை வாழ்க்கை முறையாக மாற்றாமல், உள நலனைப் பேசத் தொடங்காமல், ஆரோக்கியம் முழுமையடையாது. எனவே, ஆரோக்கியம் ஒருவரின் ஒழுக்கம் அல்லது கட்டுப்பாடு எனக் குறைக்கப்படக் கூடாது; அது சமூகப் பொறுப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.
மாற்றத்தின் முதல்படி குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. உணவு மேஜை கட்டுப்பாடுகளின் இடமாக அல்ல; பாதுகாப்பான உரையாடலின் இடமாக மாற வேண்டும். முழுவதும் சாப்பிடு, அதைச் சாப்பிட்டால் குண்டாவாய், இதெல்லாம் உனக்கு வேண்டாம் போன்ற வார்த்தைகள், குழந்தையின்மனதில் உணவை பயத்துடன் இணைக்கின்றன. குடும்பம் உணவை உடல் தேவையாகவும், மகிழ்ச்சியின் இயல்பான அங்க
மாகவும் அறிமுகப்படுத்தும்போது மட்டுமே ஆரோக்கியம் நிலைபெறும். கல்வி அமைப்பும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் உணவு, உடல், மனம் குறித்து வழங்கப்படும் அறிவு பெரும்பாலும் மேற்பரப்பிலேயே நிற்கிறது. உணவு பிரமீடு, சத்துகள், உடல் அசைவு, மனநலன் ஆகியவை தேர்வு மதிப்பெண்களைத் தாண்டி வாழ்க்கைத் திறன்களாக கற்பிக்கப்பட வேண்டும். குழந்தைகள் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காட்டிலும், எதற்கு எது தேவை? என்பதைப் புரிந்துகொள்ளும் கல்வியே நீடித்த ஆரோக்கியத்தை உருவாக்கும்.
ஊடகங்கள் சமூக மன நிலையை வடிவமைக்கும் சக்தி கொண்டவை. ஆனால், அவை தொடர்ந்து ஒரே உடல் வடிவத்தை மட்டுமே அழகாகவும், வெற்றியின் அடையாளமாகவும் முன்னிறுத்தும்போது, உடல் வெறுப்பு சமூக நோயாக மாறுகிறது.
உணவு மற்றும் உடலை மாற்றும் விளம்பரங்கள், உடலை சரிசெய்ய வேண்டிய பொருளாக மாற்றுகின்றன. ஊடகங்கள் அழகை மறுவரையறை செய்யாமல், ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உரையாடலை உருவாக்காமல் இந்தச் சங்கிலி உடையாது.
வேலை இடங்கள் ஆரோக்கியத்தை அதிகம் புறக்கணிக்கும் இடங்களாக மாறியுள்ளன. நீண்ட நேர வேலை, இடைவெளியற்ற உணவு, உடல் அசைவு இல்லாத வாழ்க்கை, தொடர்ச்சியான மன அழுத்தம் இவை அனைத்தும் வேலை வாழ்க்கையின் இயல்பு என ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த இயல்பு மனித உடலுக்கும் மனத்துக்கும் எதிரானது. வேலை இடங்களில் உணவு இடைவெளி, இயக்கத்துக்கான வாய்ப்பு, மனநல ஆதரவு ஆகியவை சலுகைகளாக அல்ல; அடிப்படைத் தேவைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
அரசும் கொள்கை அமைப்புகளும் தனி நபரைக் குற்றம் சொல்லும் வழியை விட்டு விலக வேண்டும். சத்தான உணவு அனைவருக்கும் எளிதில் கிடைக்கிறதா? பாதுகாப்பான நடைபாதைகள் உள்ளனவா? மனநல சேவைகள் அணுகத் தக்கவையா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லாமல், ஆரோக்கியத்தை தனிநபரின் தோல்வியாக மாற்றுவது நியாயமல்ல.
உணவு, உடல் அசைவு, உள நலன் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த மனித மரியாதையின் அடிப்படைகள். இவற்றில் ஒன்றை மட்டும் முன்னிலைப்படுத்தி மற்றவற்றை புறக்கணிக்கும் எந்த சமூகமும் முழுமையான ஆரோக்கியத்தை அடைய முடியாது. இன்று தெற்காசிய சமூகங்கள் எதிர்கொள்கிற பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களும், மன அழுத்தங்களும், உடல் வெறுப்பும், தனிநபரின் தோல்வியல்ல; அது சமூக மனநிலையின் பிரதிபலிப்பே.
ஐரோப்பிய சமூகங்கள் காட்டும் முக்கியப் பாடம் ஒன்றே. உணவு ஒரு காட்சிப் பொருளல்ல; அது உடல் பராமரிப்பின் ஒரு பகுதி. உடல் அசைவு தண்டனை அல்ல; அது வாழ்வின் இயல்பு. உளநலன் அவமானம் அல்ல; அது சுகாதார உரிமை. இந்த மூன்றையும் இணைத்துப் பார்க்கும் போது, ஆரோக்கியம் தனிநபரின் சுமையாக அல்ல; சமூகத்தின் பொறுப்பாக மாறுகிறது.
மாற்றம் பெரிய புரட்சியாக இருக்க வேண்டியதில்லை. அது குடும்ப உணவு மேஜையில் தொடங்கலாம். பள்ளி வகுப்பறைகளில் வளரலாம். ஊடக உரையாடல்களில் வலுப்பெறலாம். வேலை இடங்களிலும் கொள்கைகளிலும் உறுதியாகலாம். ஆனால் அந்த மாற்றத்தின் அடிப்படை ஒன்றுதான். உணவை உணவாகவும், உடலை மனிதனாகவும், மனத்தை ஓர் உறுப்பாகவும் பார்க்கத் தொடங்குதல்.
இறுதியாக, ஓர் உண்மை மட்டும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். ஆரோக்கியம் அந்தஸ்து அல்ல; அழகு போட்டி அல்ல; சமூக ஒப்பீட்டு அளவுகோலும் அல்ல. அது மனித மரியாதையின் அடிப்படை. உணவு, உடல், மனம் - இந்த
மூன்றையும் ஒரே நேரத்தில் மதிக்கும் சமூகமே உண்மையில் முன்னேறிய சமூகமாகும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.