முகப்பு
தில்லி காற்று மாசு
நடுப்பக்கக் கட்டுரைகள்

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!

நகரங்களில் உருவாகும் நச்சுக் காற்றுக்கு அண்டை மாநிலங்களின் கிராம விவசாயிகள் மீது வீண்பழி சுமத்துவது வேதனையானது.

நடுப்பக்கக் கட்டுரைகள்

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!

நகரங்களில் உருவாகும் நச்சுக் காற்றுக்கு அண்டை மாநிலங்களின் கிராம விவசாயிகள் மீது வீண்பழி சுமத்துவது வேதனையானது.

Updated On : 5 மார்ச், 2026 at 1:05 AM
தில்லி காற்று மாசு
பகிர்:

முனைவர் ச. சீனிவாசன்

தெற்காசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான பெரு நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவும், சீனாவும் காற்று மாசு உள்ளவை என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய அளவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாக "கிரீன்பீஸ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

பெருநகரங்களில் தில்லியில்தான் காற்று மாசு அதிகம் உள்ளதாகவும், காற்றில் படிந்துள்ள நுண்துகள்கள் அதிகமாக உள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பிற நகரங்களைக் காட்டிலும், தில்லியில் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் மோசம், கடுமை என்ற நிலையே நீடிக்கிறது.

இதனால் சுவாசக் கோளாறு, கண்களில் நீர்க்கசிவு, தொண்டை எரிச்சல், தோல் வறட்சி, நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இதயக் கோளாறு, ஆஸ்துமா முதலான பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியன வெளிவிடும் நச்சுப் புகைகளே தில்லியின் காற்று நச்சுத்தன்மை அடைய பிரதான காரணம் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பனிக் காலத்தில் காற்று மாசு அதிகமாகக் காணப்படுகிறது. "காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், களைய வழியின்றி காற்றுடன் புகை தங்கிவிடுகிறது, காற்றில் புழுதி கலப்பதால் புகை மூட்டம் அதிகரிக்கிறது, விவசாய நிலங்களில் பயிர்க் கழிவுகள் மற்றும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மற்றும் தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்பட்ட புகையால் காற்று மாசு அடைகிறது' ஆகிய நான்கு காரணிகளால் தில்லியில் காற்று மாசு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று பதிவு செய்கிறது.

தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கு எரிப்புப் புகை, அலுமினியம், நெகிழி, ரப்பர் கலந்த கழிவுப் பொருள்களைத் திறந்த வெளியில் எரிப்பது முதலான செயற்கையான செயல்களாலும் காற்று மாசுபடுகிறது.

தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் உண்டாகும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ûஸடு, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ûஸடு மற்றும் புகை, ஹைட்ரோ கார்பன், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை காற்றில் அதிகமாகக் கலக்கும்போது நச்சுத்தன்மையாக மாறி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

தில்லியில் காற்று மாசு நெருக்கடியைச் சமாளிக்க, "தூசு மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகித்தல், மாசுபடுத்தும் தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை, வாகன உமிழ்வைக் குறைத்தல், தில்லியைப் பசுமையாக மாற்றுவதற்கான நீண்டகால முயற்சி, தில்லியை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கான நீண்டகால முயற்சி' ஆகிய ஐந்து அம்ச மாசு கட்டுப்பாடு உத்திகளைக் கையாள தில்லி அரசு முடிவெடுத்துள்ளது.

தூய்மையான ஆக்சிஜனை தரவல்ல மரங்களை அதிக அளவில் வளர்ப்பதும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்ட கருவேல மரங்களை முற்றிலும் அழித்து விடுவதும், வாகனங்கள் உமிழும் புகையைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை மேலும் கடுமையாக்குவதும், கரியமில வாயுவை வெளியேற்றும் என்ஜின்களை தயாரித்து வாகனங்களில் பொருத்துவதும், மாசு ஏற்படுத்தாத மின் வாகனப் பயன்பாட்டுக்கு முன்னுரிமை தந்து ஊக்குவிப்பதும் காற்று மாசைக் குறைப்பதற்கான மாற்று வழிகளாக முன்வைக்கலாம்.

அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப் பகுதிகளில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் தில்லியில் 32% காற்று மாசுக்குக் காரணம் என்று மத்திய காற்று மாசு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லி தலைநகர் வலயப் பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளும் காற்று மாசுக்கு மற்றொரு காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தில்லியின் மேற்கு எல்லைப் பகுதியிலுள்ள ராஜஸ்தான், மேற்கு மற்றும் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள ஹரியாணாவிலிருந்து எரிக்கப்படும் பயிர்க்கழிவுப் புகை காற்றின் திசை வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து தில்லிக்குள் ஊடுருவிப் புகை மண்டலத்தை ஏற்படுத்துவது இயல்பு; ஆனால், தில்லியின் வடக்கு, தெற்கு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசப் பகுதிகளிலிருந்து வெளிவரும் பயிர்க்கழிவு எரிப்புப் புகை தில்லியை ஆட்கொண்டு மாசுபடுத்துகிறது என்று கூறுவது இயல்புக்கு மாறானது. ராஜஸ்தானிலிருந்து கிளம்பும் பயிர் எரிப்புப் புகை அதன் அடர்த்தி குறையாமல் அப்படியே பயணித்து தில்லிக்குள் மட்டும் படர்ந்து மாசை உண்டாக்குகிறது என்பதும் எதார்த்தமாக இல்லை.

நகரங்களில் உருவாகும் நச்சுக் காற்றுக்கு அண்டை மாநிலங்களின் கிராம விவசாயிகள் மீது வீண்பழி சுமத்துவது வேதனையானது. இது ஒருவிதத் திசைதிருப்பும் நோக்கமாகவே தோன்றுகிறது.

பயிர்க் கழிவுகளை அழிப்பதற்கு அவற்றைத் தீயிட்டு எரிப்பதற்குப் பதிலாக ஒரு திரவத்தைப் பயன்படுத்தி அழிக்கலாம் என்று தில்லியிலுள்ள பூசா நிறுவனம் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் பரவும் புகையின் திசை மூலத்தை ஏ.ஐ.மூலம் கண்காணித்தால், உண்மையிலேயே பயிர்க் கழிவு எரிப்பினால் வெளிவருவது வெறும் புகையா?, விவசாயிகள் மீதான புகைச்சலா? என்பது புலப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →