நல்லறம் நாடுவோம்!
மனிதநேய மாண்புடன் மானுடம் சிறந்து திகழ்ந்திட, அளப்பரிய அறத்தொண்டு புரிந்த பகவான் மகாவீரரைப் பற்றி...
இவ்வுலகில் சிறந்த பண்பாட்டுக்குரிய நாடு நம் பாரத நாடு என்னும் அடையாளம் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இத்தகைய பெருமைக்குக் காரணம், தொன்மையில் நம் மண்ணில் தோன்றிய மதங்கள் பலவும் மானுட வாழ்வியல் விழுமியங்கள் செழித்தோங்க ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் ஒழுக்க நெறியையும் இழையோடும் பாவாய் சமயக் கோட்பாடுகளுடன் இனிதே கலந்து மக்களிடையே போதித்தன.
இவ்வாறு அறப்பண்புகளைப் பக்தி நெறி வாயிலாகப் போதித்து இந்தியத் திருநாட்டை ஞானபூமியாகத் திகழச் செய்த சமயங்களுள் சமணமும் ஒன்று!
'அகிம்சா பரமோ தர்ம' என்னும் அன்பு நெறியை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டு சமண சமயக் கொள்கைகளை இவ்வுலகில் முதன்முதலில் பரப்பியவர் விருஷப தேவர் என்றும் இவரே ஆதிபகவன் என்று அழைக்கப்படுவதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன.
விருஷப தேவரைத் தொடர்ந்து அவ்வப்போது தோன்றிய சமணச் சான்றோர்கள் 23 பேர் சமண சமயக் கொள்கைகளை உலகில் பரப்பினர். விருஷப தேவர் தொடங்கி வர்த்தமான மகாவீரர் வரையிலான இருபத்து நான்கு சான்றோர்களையும் தீர்த்தங்கரர்கள் (அனைத்தையும் அறியும் ஆற்றலை ஒரு ஜீவன் பெறும் நிலையே தீர்த்தங்கரர் ஆகும்.) எனச் சமணர்கள் போற்றுகின்றனர்.
இவ்வாறு வட இந்தியாவில் தோன்றி ஓங்கி வளர்ந்த சமண சமயம் தமிழ்நாட்டில் மேலும் செழித்தோங்கக் காரணமாக விளங்கியவர் பத்திரபாகு முனிவர். இவர் சமண சமயத் தலைவராகவும் மௌரிய மன்னர் சந்திரகுப்தனுக்கு மத குருவாகவும் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் மகத நாட்டில் 12 ஆண்டுகள் வற்கடம் வரப்போகும் செய்தியினை பத்திரபாகு முனிவர் மன்னர் சந்திரகுப்தனுக்குத் தெரிவித்ததுடன் அந்தக் கொடுமையினின்று தப்பிக்கும் வகையில் தானும் தன்னைச் சார்ந்த பன்னீராயிரம் சமண முனிவர்களும் தென் திசை நோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.
மன்னர் சந்திரகுப்தன் அரசைத் துறந்து தவக்கோலம் பூண்டு முனிவர் பத்திரபாகு மற்றும் சமணத் துறவிகளோடு தென் திசை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். இறுதியில் இவர்கள் மைசூர் வந்தடைந்தனர். மைசூர் வந்தடைந்த சமணத் துறவிகள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்த துறவிகளும் இணைந்து நான்கு பிரிவுகளாகப் பிரிந்து (நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம்) தமிழ்நாடெங்கும் சமண சமயக் கொள்கையைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய இலக்கணப் படைப்புகளையும் நல்கி தமிழுக்கும் அருந்தொண்டு செய்தனர்.
சமண சமயத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர் எனப் போற்றப்படும் வர்த்தமானர், கி.மு.599-இல் குண்டலபுரத்தில் மன்னர் சித்தார்த்தனுக்கும் பிரியகாரிணிக்கும் நன்மகனாய்ப் பிறந்தார். இவர் மதிஞானம், சுருத ஞானம், மனப்பர்ய ஞானம் ஆகிய மூவகை ஞானங்களையும் குழந்தைப் பருவத்திலேயே பெற்று வீரமிக்கவராகவும் திகழ்ந்ததால் 'மகாவீரர்' என்றழைக்கப்பட்டார். இத்தகைய சிறப்புகளுடன் வளர்ந்து ஆட்சிப் பீடத்தையும் அலங்கரித்த இவர், ஆதிபகவன் அருளிய அகிம்சை நெறியை மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தனது 30-ஆவது அகவையில் பட்டத்தைத் துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக் கடவுள் இல்லையென்பது சமணக் கோட்பாடு என்பதால், தீர்த்தங்கரர்கள், சித்தர்கள், குருக்கள், உபாத்தியாயர்கள், சாதுக்கள் ஆகிய தெய்வத்தன்மையடைந்த ஐவரை, மனிதர்கள் வணங்கி மனத்தூய்மையுடன் வாழவேண்டும் என்ற வழிபாடு முறையை மகாவீரர் போதித்தார்.
சமூகத்தில் சமத்துவ நிலையும் ஒற்றுமையுணர்வும் செழித்தோங்க இல்லறம் அடிப்படைக் காரணம் என்றும் அத்தகைய இல்லறம் நல்லறத்தில் நடைபோட கொல்லாமை (அகிம்சை), வாய்மை, களவு செய்யாமை (நடுநிலை தவறி பொருள்களை ஈட்டுவதும் களவு என்றே கருதப்படும்), பிறன்மனை விரும்பாமை, மிகுபொருள் விரும்பாமை (தேவைக்கு அதிகமான பொருள் அல்லது செல்வம் ஈட்டி அதைப் பதுக்கி வைத்தல்) ஆகிய சமணம் கூறும் ஒழுக்க நெறிகளான ஐந்து வகை அணுவிரதங்களை கடைப்பிடித்து வாழ வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் அன்ன தானம், அபய தானம், மருந்து தானம், கல்வி தானம் ஆகியவற்றை இல்லறத்தார் இயலாதோர்க்கு வழங்கி சமூக நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றார். மானுடம் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து ஒழுக சமணம் கூறும் நவ பதார்த்தங்களான (ஒன்பது உண்மைப் பொருள்கள்) உயிர், உயிரற்றது, நல்வினை, தீவினை, ஊற்று (இருவினைகள் உயிரில் சுரப்பது), செறிப்பு (ஐம்புலன் அடக்கி கர்மத்தைத் தேடாதிருத்தல்), உதிர்ப்பு (வினைகளைக் களைதல்), பந்தம் (வினைகள் உயிருடன் கலத்தல்), மோட்சம் (வீட்டுலகம் பெறும் நிலை) ஆகியவற்றைத் தத்துவ நூல்களின் வழியே பரிபூரணமாக உணர்ந்து கொள்ளுதல் 'நற்காட்சி' என்றும், நூல்பொருளில் காணலாகும் உண்மைகளை ஏற்பது 'நல்ஞானம்' என்றும் அவ்வுண்மை நெறிபோற்றி அதன் வழி வாழ்தல் நல்லொழுக்கம் ஆகிய இம் மூன்றும் சமணம் கூறும் இரத்தினத் திரயம் அல்லது மும்மணிக் கொள்கை என்றும் மக்களிடையே எடுத்துக் கூறிய மகாவீரர் துறவறத்துக்கு அடிப்படையான இல்லறம் செழித்தோங்க இம்மும்மணிக் கொள்கையைப் பின்பற்றி நடப்பதை மக்கள் தங்கள் உயிருக்கு நிகரான கடமையெனக் கருத வேண்டும் என அறிவுறுத்தினார்.
உலகில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து உழலும் தன்மையுடையவை. எனவே, 'யாக்கை நிலையாமை' என்னும் பேருண்மையை உணர்ந்து மக்கள் அன்பெனும் அகிச்சை வழி நடந்து புலன்களையும் கர்மங்களையும் வென்று பிறவிப் பெருங்கடலைக் கடக்க முயலவேண்டும் என்றும் போதித்தார்.
இவ்வாறு மனிதநேய மாண்புடன் மானுடம் சிறந்து திகழ்ந்திட, அளப்பரிய அறத்தொண்டு புரிந்த பகவான் மகாவீரர் 72-ஆவது வயதில் பாவாபுரி நகரில் (கி.மு. 527-இல்) பரிநிர்வாணமென்னும் வீடு பேற்றை அடைந்தார். மகாவீரர் பிறந்த இந்நன்னாளில் அவர் வகுத்தளித்த அன்பு நெறியைப் போற்றுவோம்!
நாளை (மார்ச் 31) மகாவீரர் ஜெயந்தி.