முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தமி​ழ​க​மு‌ம் சம​ண​மு‌ம்...

மதுரை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் சமணர்கள் சிறப்பாக வாழ்ந்த குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 31 மார்ச், 2026 at 12:19 AM
மகாவீரர் ஜெயந்தி
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

அறத்தின் பாதையில் நிற்பதே வாழ்க்கை எனக் கற்றுத் தந்த மகாவீரர் அவதரித்த இந்தப் புனித தினத்தில் அவருக்கு எனது அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கிறேன். சமண சமயத்தைப் பின்பற்றும் மக்களுக்கு வாழ்த்துகள்.

தமிழகம் ஆன்மிகத்தில் மிகுந்த பற்றுக் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலவிதமான ஆன்மிக சிந்தனைகள் சித்தாந்தங்கள் இந்த மண்ணில் தழைத்து வளர்ந்திருக்கின்றன. தொன்மையான பண்பாடும் அரவணைக்கும் பக்குவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட நமது முன்னோர் தேசத்தின் பல பகுதிகளிலும் தோன்றிய சமயங்களை எவ்விதப் பாகுபாடும் இன்றி ஏற்றுப் போற்றியிருக்கிறார்கள்.

அறம் என்பதே வாழ்க்கையின் ஆதாரம் என்று கருதிய தமிழ் மக்கள், அறத்தை வலியுறுத்திய சமயங்களை ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. அறம், பொருள், இன்பம் என்ற முறையில் வாழ்க்கை அமைய வேண்டும் என்றாலும் அறத்தின் வழியில்தான் பொருளும் இன்பமும்கூட கிடைக்க வேண்டும். அறத்தோடு நிற்றல்' என்பதே வாழ்வின் இலக்கணம். அறம் இல்லாத பொருள் சேர்க்கையும், அறம் இல்லாத இன்ப நுகர்வும் பழித்தற்குரியது. சமூக அளவில் புறக்கணிப்புக்கும் தண்டனைக்கும் உரிய தீயசெயல் என நம்பினர் தமிழர்கள்.

அறம் சாராத நடைமுறைகள் உலகத்தில் இருந்தாலும்கூட அவற்றை மரபு என மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இலக்கியங்கள்கூடப் பேசுவது முறையல்ல என்று இலக்கணம் வகுத்துக் கொண்டவர்கள் நாம். இதை தொல்காப்பியம் பேசுகிறது.

'மூன்று ரத்தினங்கள்' என்று நல்ல நம்பிக்கை, நல்ல அறிவு, நல்ல நடத்தை ஆகிய மூன்று கோட்பாடுகளே சமணத்தின் அடிப்படை என்றார் வர்த்தமான் மகாவீரர். இந்த அறச் சிந்தனையைப் போதித்த வடபுலத்தில் தோன்றிய சமண சமயத்தைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் மிகப் பழைமையான ஆன்மிக மரபுகளில் ஒன்றாக அஹிம்சை, சத்தியம், தவம், துறவு ஆகிய ஒழுக்கவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சமணம் விளங்குகிறது. மகாவீரர் தனது 12 ஆண்டுகால தவ வாழ்க்கையால் அடைந்த ஞானத்தை இந்த உலக மக்களின் மேன்மைக்காக உபதேசித்தார்.

அறத்தைக் கடைபிடித்து வாழ்வதன் மூலம்தான் மனிதன் வீடுபேறு அடைய முடியும். வேறு எந்த வழியிலும் வீடுபேற்றை அடைய முடியாது என்ற திடமான கொள்கையை தனது செய்தியாக வழங்கியவர் மகாவீரர்.

தானங்கள் செய்வதைக் கடமையாக சமணம் சொல்கிறது என்பது தர்ம சிந்தனை கொண்ட தமிழர்களுக்கு விருப்பமானதாக இருந்ததில் வியப்பில்லை. அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் எனும் நான்கு தானங்கள் செய்வதை சமணர்கள் தங்கள் கடமையாகக் கருதினர். பசியால் வாடும் ஏழைமக்களுக்கு உணவு கொடுத்து அவர்களைக் காப்பது, அறங்களுள் மிகச் சிறந்தது. இதனால்தான், ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறோம். அபய தானம் அல்லது அடைக்கல தானம் என்பது தம்மைக் காக்குமாறு வேண்டி வருபவர்களை ஏற்று அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, சமணக் கோயில்களுக்கு அருகில் அஞ்சினான் புகலிடம் என்று அதற்கென இடங்கள் இருந்தன. சமணர்கள் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்தனர், அதற்கான மருத்துவ சாலைகளையும் அமைத்திருந்தனர்; இது ஒளடத தானம் என்று வழங்கலாயிற்று. நான்காவது சாத்திர தானம், அதாவது கல்வி வழங்குவது.

இன்றும் நாம் கல்வி நிலையங்களைப் பள்ளிக்கூடங்கள் என்று அழைப்பதற்குப் பின்னால் சமணர்களின் கல்விப் பணி இருக்கிறது. அனைவருக்கும் ஒரே விதமான கல்வி கிடைக்க வேண்டுமென கல்விக் கூடங்களை சமணர்கள் நிறுவினர். அவற்றுக்கு, 'பள்ளிகள்' என்று பெயர். இன்றளவும் அந்தப் பெயர் நிலைத்திருக்கிறது என்பதில் இருந்தே சமூகத்தில் அவை ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சு புலனாகும்.

சமண சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்க முக்கியமான காரணம் அவர்கள் சமயக் கொள்கைகளைத் தமிழ்மொழி வழியாக எடுத்துக் கூறினார்கள். சமண மதநூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலேயே எழுதினார்கள். தமிழுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பும் அளப்பரியது.

பல சங்கப் பாடல்களில் சமணத் தத்துவங்களின் தாக்கம் இருந்தாலும் முற்பிறவியின் கர்மவினையால் வந்ததுதான் இப்பிறவி என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தும்,

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப்படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்று பாடிய கணியன் பூங்குன்றனாரின் பாடல் முற்றாக சமண சமயம் காட்டும் தத்துவமே. இதனால்தான் கணியன் பூங்குன்றனாரை சமணர் என்கிறோம். தமிழின் பெருமையைக் காலம் கடந்தும் கொண்டாடும் பாடல் சமணர் அளித்த கொடை.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, ஒழுக்கம், நற்பண்பு குறித்துக் கூறும் நூலான நாலடியார் என தமிழ் இலக்கிய வரலாற்றில் காலம் கடந்தும் நிற்கும் அமர இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

தமிழர்களை ஒரு காலத்தில் பெரிதும் கவர்ந்த சமணம் தமிழகத்துக்கு வந்தது குறித்து ஒரு நம்பிக்கை உள்ளது. மகத நாட்டில் 12 ஆண்டுகள் கடும் பஞ்சம் வர இருக்கிறது என்று முன்கூட்டியே தனது தவ வலிமையால் அறிந்து கொண்ட பத்திரபாகு முனிவர், தம்முடன் இருந்த 12,000 சமண முனிவர்களைப் பஞ்சத்திலிருந்து காப்பதற்காக தென்திசை நோக்கி அவர்களோடு புறப்பட்டார். மன்னர் சந்திரகுப்தரும் துறவு மேற்கொண்டு பத்திரபாகு முனிவருடன் வந்தார். மைசூர் நாட்டில் சமணர் வெள்ளைக்குளம் என்ற இடத்தில் தங்கினர்.

பத்திரபாகு முனிவர் இங்கிருந்து தம் சீடர்களுள் ஒருவரான வைசாக முனிவர் என்பவரைக் கொண்டு சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். இந்தத் தகவல் அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதாகோசம், தேவசந்திரர் கன்னட மொழியில் இயற்றிய ராஜாவளி கதெ (ராஜாவளி கதை) ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிடைத்த பிராமி கல்வெட்டுகளிலும் இந்தத் தகவல் உறுதியாகிறது. கர்ண பரம்பரைக் கதையாகவும் 2,000 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

இன்றைக்கும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சமண சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர். சமண சமயம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பரவியது. மதுரை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் சமணர்கள் சிறப்பாக வாழ்ந்த குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தன்னவாசல், திருமலை, அரவக்குறிச்சி போன்ற இடங்களில் சமணர் வாழ்ந்த தடயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சமணப் படுக்கைகள் சமணத் துறவிகளை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

தட்சிண காசி' என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி என்று மூன்று பகுதிகளாக இருந்ததை வரலாற்றில் காண்கிறோம். ஜைன காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதி. இங்கு மகாவீரருக்கும், சந்திரநாத தீர்த்தங்கரருக்கும் கோயில்கள் இருக்கின்றன. இங்கு சமயம், கல்வி, சமூகம் சார்ந்த தொண்டுகளை சமணத் துறவிகள் செய்து வந்தனர். கல்வியில் சிறந்தநகரமாக காஞ்சி திகழ்ந்தது.

செப்பேடு, திருப்பருத்திக்குன்றம் மகாவீரர் கோயில் குறித்த தகவல்களை பள்ளன் கோயில் தருகிறது. அர்காகீர்த்தி என்ற புலவர், தொன்மைசேர் பருத்திக்குன்றில் உறைகின்ற திரிலோக நாதனே என்று சமணக் கோயிலையும் தெய்வத்தையும் பாடுகிறார். இந்தக் கோயில் தமிழகத்தில் கட்டட சிற்ப, ஓவியக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

சித்தன்னவாசல்போல திருப்பருத்திக்குன்றத்திலும் வண்ண ஓவியங்கள் சமணர்களின் கலை ஆர்வத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இத்தகைய ஜைன காஞ்சியில் சமண மடம் இருந்து சமூகப் பணிகளைச் செய்துள்ளது. கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகரம்' என்று அப்பர் சுவாமிகள் பாடுவதன் பெருமையில் சமணர்களுக்கும் பங்குண்டு.

சமண சமயம் வடபுலத்திலிருந்து வந்திருந்தாலும் சமணக் கோயில்கள் தமிழகத்தின் கோயில்களை ஒத்திருக்கின்றன. வழிபாட்டிலும் தமிழர் மரபும், வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. செஞ்சியில் அமைந்துள்ள சமணமடம் மற்றும் ஆலயத்தில் இன்றைக்கும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

உள்ள வடார்க்காடு மாவட்டத்தில் அரந்தை திருப்பாண்மலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சமணக் கோயில்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன. சீனாபுரத்தில் இன்றும் பழைமையான முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் கோயிலில் மக்கள் பக்தியோடு வழிபாடு நடத்துகிறார்கள்.

கொங்குவேளிர் மன்னர் விஜயமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர். இவர் உதயணன் வரலாற்றைக் கூறும் ஸ்ரீபிருகத்கதா என்னும் காப்பியத்தை, தமிழில் பெருங்கதை என்ற பெயரில் எழுதினார். விஜயமங்கலத்தில் சமணக் கோயில் ஒன்றையும் காட்டினார். கொங்கு மண்டலத்திலேயே தொன்மைமிக்க கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ்த் தொண்டும் ஆற்றியுள்ளார்.

தீபாவளியும், சிவராத்திரியும்கூட சமணர்களுக்கு உண்டு என்ற தகவல் வியப்பளிக்கும். தீபாவளி மகாவீரர் வீடுபேறு அடைந்த நாள், முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் முக்தி அடைந்த நாள் சிவராத்திரி. இரு புண்ணிய தினங்களும் அவர்களின் பண்டிகைகள் ஆகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான சமண ஆலயங்களில் இவ்விரு பண்டிகைகளும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

மகாவீரர் வழங்கிய அஹிம்சை முதலான நற்செய்திகள் இன்றைய உலகுக்கும் மிகவும் பொருத்தமானவையும் அவசியமானவையும் ஆகும். வன்முறை, போர், சண்டைகள் இல்லாத உலகம் அஹிம்சை என்ற கொள்கையின் வழியாக மட்டுமே சாத்தியமாகும். மகாவீரர் தோன்றிய இந்தப் புனித நாளில் அறத்தின் வழியில் வாழ நாமும் உறுதி ஏற் போம்.

இன்று மகாவீரர் ஜெயந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.