எதனால் ‘எத்தனால்’?
எத்தனால் கலந்த பெட்ரோல்
பெ. நா. மாறன்
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் "எத்தனால் கலந்த பெட்ரோல்'. இதை உபயோகிப்பதால் இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதி வெகுவாகக் குறையும் என்று ஒரு புறமும், இதனால் இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்ற பயம் இன்னொரு புறமும் பரவலான விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.
பொதுமக்களைக் குழப்பத்துக்கு உண்டாக்கும் தலைப்புச் செய்திகளாக "ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க, 10,000 லிட்டர் குடிநீர் தேவை' என்கிற மாதிரியான வெடிகுண்டுகள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே கடை விரிக்கத் தொடங்கி விட்டன. பொதுமக்களுக்கு இது குறித்த தெளிவு இருக்க வேண்டியது அவசியம்.
Advertisement
எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது ஒரு புதிய கொள்கைச் சிந்தனை அல்ல; உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு 1970-80-களில் ஏற்பட்டபோதே இந்தச் சிந்தனை தொடங்கி விட்டது. பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கும் போது அந்த அளவுக்கான பெட்ரோல் தேவை குறைவதுடன், அது உபயோகிக்கப்படும் வாகனங்களின் புகையால் குறைந்த அளவே மாசு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட, எத்தனாலுக்கு ஒரு மவுசு ஏற்படத் தொடங்கியது. (இந்தியா போன்ற வளரும் நாடுகளும், மற்ற ஏழை நாடுகளும் எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பல தியாகங்களைச் செய்து காற்றை சிறிது சிறிதாக தூய்மைப்படுத்தி வைத்தால், வளர்ந்த நாடுகள் தங்களுடைய ஆணவக் கொள்கைகளால், போர் என்ற பெயரில் சில நாள்களிலேயே வளிமண்டலத்தைப் பலமடங்கு பாழ்படுத்தி விடுகிறார்கள் என்பது நிதர்சனம்).
சர்க்கரை ஆலைகளின் துணை உற்பத்திப் பொருளாகிய மொலாசஸ் என்பதிலிருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலந்து உபயோகிப்பது சோதனை அளவில் சாத்தியம் என்று ஆனது. முதன்முதலில், 2003-ஆம் ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகிப்பது என்பது கொள்கை முடிவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
முதலில், குறிப்பிட்ட மாநிலங்களில் குறைந்தது ஐந்து சதவீதமாவது எத்தனால் கலந்த பெட்ரோல் (இ5) மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. 2014}ஆம் ஆண்டுக்குப் பிறகு இது இன்னும் தீவிரமாக்கப்பட்டது. சமீபத்திய கொள்கை முடிவின்படி, 2025-26-ஆம் ஆண்டுக்குள், 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே இந்தியா முழுவதும் உபயோகத்தில் இருக்க வேண்டும் என்று இலக்கு முடிவு செய்யப்பட்டது. இப்போதைக்கு 10% முதல் 15% வரையிலான எத்தனால் கலப்பு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது என்றாலும் கூட 20% இலக்கு நோக்கிய பயணம் வேகம் அடைந்திருக்கிறது.
எல்லா வினைக்கும் சமமான எதிர்வினை ஒன்று இருக்கும் என்பது பிரபஞ்ச விதி.
பொதுமக்களின் சர்க்கரைத் தேவைக்காக கரும்பு ஆலைகளின் வளர்ச்சியும் கரும்பு உற்பத்தியும் இருந்த நிலை மாறி, எத்தனால் உற்பத்திக்காக அதிகப்படியான கரும்பு உற்பத்தி செய்வது என்ற நிலை உருவாகத் தொடங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் கரும்பு பயிரிடப்படும் நிலத்தின் அளவு சுமார் 25%, மகாராஷ்டிரத்தில் 20%, கர்நாடகத்தில் 35% அதிகரித்துள்ளன. (அகில இந்திய சராசரி 15%. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை).
மேலோட்டமாகப் பார்க்கும்போது விவசாய வளர்ச்சி, கரும்பு ஆலைகளின் அதிகரிப்பால் கிராமப் பொருளாதார முன்னேற்றம் என்று நேர்மறையாகவே தோன்றும். இதன் தொடர் விளைவுகள் நம் அடிப்படைத் தேவையான தண்ணீருக்கே உலை வைக்கும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்ற மறுபக்கம் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளது.
இந்தியா இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு சுமார் 30 கோடி லிட்டர் பெட்ரோல் உபயோகிக்கிறது. அதில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால், ஆறு கோடி லிட்டர் எத்தனால் ஒரு நாளைக்குத் தேவை. அப்படியானால், ஆண்டுக்கு சுமார் 2,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. அதாவது, ஏறக்குறைய ஒரு டிஎம்சி எத்தனால் தேவை. (ஒரு டிஎம்சி என்பது 2,831 கோடி லிட்டர்.)
சராசரியாக, ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்கத் தேவையான அளவு கரும்பு உற்பத்திக்கு சுமார் 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை என்று கணக்கிட்டால், ஆண்டுக்கு ஒரு டிஎம்சி எத்தனால் உற்பத்திக்கு 3,000 முதல் 5,000 டிஎம்சி தண்ணீர் இதற்காக மட்டுமே தேவைப்படும். (காவிரி நதியின் நீர் உற்பத்தி ஆண்டுக்கு 740 டிஎம்சி. அதை கர்நாடகமும் தமிழ்நாடும் பங்கு போட்டுக் கொள்ள நூற்றாண்டுக் கணக்கில் பஞ்சாயத்து நடந்த வண்ணம் உள்ளது என்பதை நினைவுகூர்ந்தால் 5,000 டிஎம்சி என்பதன் முக்கியத்துவம் புரியும்). கரும்பு தவிர்த்து மக்காச்சோளம், நெல் ஆகியவற்றின் மூலமும் எத்தனால் தயாரிக்க முடியும். அவற்றை உபயோகித்துத் தயாரிப்பது என்றாலும், நிலத்தின் தன்மை குறித்து நீரின் தேவை சற்றேறக் குறைய இதே அளவு அல்லது அதிகமாகக் கூட ஆகலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
இவ்வளவு தண்ணீர் செலவழித்து எத்தனாலை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக இறக்குமதி செய்தால் என்ன என்ற கேள்வி எழலாம். ஆனால், இதில் விவசாயிகளின் "பணப் பலன்' என்ற முக்கியமான காரணி இருக்கிறது.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரும்பு உற்பத்தி செய்யும் விளைநிலங்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் மிகக் கணிசமாக உயர்ந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தின் ஒப்பீட்டில், மகாராஷ்டிரத்திலும், கர்நாடகத்திலும் நதிநீர் வளம் குறைவே.
இருந்தும், கரும்பு உற்பத்தி அங்கே அதிகரிப்பதில், அந்த மாநிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. ஒப்பீட்டளவில், தமிழ்நாடுதான் எத்தனால் உற்பத்திக்கு ஏற்ற வகையில் தன்னுடைய உணவு உற்பத்தி சுழற்சியை கிட்டத்தட்ட மாற்றாமல் வைத்திருக்கிறது. ஆனால், கரும்பு உற்பத்தி விளைநிலப் பரப்பை 35 சதவீதம் அதிகரித்திருக்கும் கர்நாடக மாநிலத்தில் நிலத்தடி நீர் குறைந்தால், தமிழகத்துக்கு வரும் காவிரியின் நீரளவு கணிசமாகக் குறையும் என்பது சிந்திக்கத்தக்க ஒன்று.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேசிய அளவில், எத்தனால் 20% கலந்த பெட்ரோல் மட்டுமே உபயோகிக்கும் நிலைக்கு நாம் மாறும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 10 மில்லியன் டன் குறையும். அதாவது, நாலு முதல் ஐந்து சதவீதம் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் சுமார் எட்டு முதல் 10 பில்லியன் டாலர் ஆண்டுக்கு மிச்சமாகும்; அவ்வளவே...
எத்தனால் கலந்த பெட்ரோல் உபயோகிப்பதால் நமக்கு அந்நிய செலாவணியிலோ, வேறு வகையிலோ, பணம் மிச்சமாகும் என்று இல்லை. எத்தனால் உற்பத்திக்காக நாம் இழக்கும் மற்ற காரணிகளின் பொருளாதாரக் கூறுகளையும் உள்ளடக்கி வணிக ரீதியாகப் பார்த்தால், நெல், மக்காச் சோளம் முதலான உணவுப் பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் சுமார் 30 சதவீதமும், கரும்பு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் சுமார் 50 சதவீதமும் சாதாரண பெட்ரோலைவிட அதிகச் செலவு பிடிப்பவைதான்.
ஆனால், நிலையற்ற புவிசார் அரசியல் சூழலில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான வெளிநாட்டுச் சார்பு குறைவதும், கிராமப்புற விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோரின் பொருளாதாரம் முன்னேறுவதும், அதிகப்படியான சர்க்கரை உற்பத்திக்கு அரசு தந்து கொண்டிருக்கும் மானியச் சுமை குறைவதும், காற்று மாசுபாட்டின் அளவு கணிசமாகக் குறைவதும் புறந்தள்ளத் தக்க காரணிகள் அல்ல. எத்தனால் கலந்த பெட்ரோல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், இதற்கான செலவைக் குறைத்து உற்பத்தி செய்யும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். அவ்வளவு நீர் நம் நாட்டில் இல்லையா என்ற அடிப்படைக் கேள்வி ஆராயத்தக்கது.
கங்கை நதியின் ஆண்டு நீர் உற்பத்தி மட்டுமே சுமார் 18,500 டிஎம்சி. மற்ற நதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவு 1,40,000 டிஎம்சி. இதில் 50% ஆவியாதல் மற்றும் நிலத்தடி நீர் ஊடுருவலில் போக மீதி மட்டுமே நதிகளில் ஓடுகின்றன. இந்தியா இப்போது அதனுடைய ஆண்டு மழைப்பொழிவில் அதிகபட்சமாக 10% மழை நீரை மட்டுமே தேக்கி வைக்கும் வசதியைப் பெற்றுள்ளது. சுருக்கமாக, நதிகளில் ஓடும் 70,000 டிஎம்சி தண்ணீரில், சுமார் 40,000 டிஎம்சி பயன்படுத்தப்பட்டது போக மீதி எல்லாம் (சுமார் 30,000 டிஎம்சி) கடலில் கலக்கிறது.
நாடு தழுவிய அளவில், மாநில வாரியாக ஆங்காங்கே இருக்கும் நீர் நிலைகள், நிலத்தடி நீர் அளவு, மழை அளவு, நிலங்களின் அளவு, அவற்றின் தன்மை, நதி நீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை போன்றவற்றை எல்லாம் நடுநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, மாநிலங்களை உள்ளடக்கிய தேசிய அளவில் ஒரு விவசாயக் கொள்கை அவசியம். நதிநீர் இணைப்பும், கடலில் வீணாகக் கலக்கும் நதிநீரைச் சேமித்து வைப்பதும் உடனடியாக முக்கியத்துவம் தந்து செயல்படுத்த, தேசிய அளவில் ஆவன செய்ய வேண்டும். இதில் மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.