முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

திரைப்படக் கல்வியின் அவசியம்

திரைப்பட ரசனைக் கல்வியின் மேன்மையை அமையவிருக்கும் புதிய அரசு புரிந்துகொண்டு, அதை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Updated On : 18 மே 2026, 6:45 am IST
- கோப்புப்படம்
பகிர்:

சீனு ராமசாமி

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

தமிழ் திரைப்பட உலகின் தொடக்கக் காலத்தில் ஆளுமைகளாக உருவெடுத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் வருகை ஒரு இரட்டை முகம் கொண்டது. அவர்கள் திரையைத் தங்கள் ஆளுமையால் நிரப்பினார்கள் என்பது உண்மையே.

Advertisement

ஆனால், அந்தக் காலகட்டத்தில் கதைகளுக்கும், கதாசிரியர்களுக்கும் என ஒரு தனித்த இடம் இருந்தது.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர் போன்ற படைப்பாளிகள் சமூகத்தின் சிக்கல்களை, குறிப்பாகப் பெண்களின் மனவுலகை, குடும்ப உறவுகளின் முரண்களைத் திரையில் கொண்டு வந்தனர்.

அன்றைய பார்வையாளன் ஒரு நாடக மரபில் இருந்து வந்தவன். அவனுக்கு ஒரு கதையின் பயணம் தேவைப்பட்டது.

ஆனால், எப்போது எம்.ஜி.ஆர் தன்னை திரையில் தோற்காத ஓர் அதிமனிதனாகக் கட்டமைக்கத் தொடங்கினாரோ, அங்கிருந்துதான் கலையின் வீழ்ச்சி தொடங்கியது.

பாமர மனிதன் தன் நிஜ வாழ்வின் இயலாமைகளை மறைக்க, திரையில் அந்த மாய பிம்பத்தைக் கொண்டாடத் தொடங்கினான். நான் சொல்வது பலருக்கு வருத்தம் தரலாம், பரவாயில்லை. நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான். கதைகளைவிடப் பிம்பங்கள் எப்படிப் பெரிதாகின?

அதன் பிறகு வந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகட்டும்; அவர்களுக்குப் பிறகு வந்த விஜய், அஜித் ஆகட்டும், இவர்கள் யாருமே வானத்திலிருந்து குதித்து நட்சத்திரங்கள் ஆகிவிடவில்லை. இவர்கள் அனைவரும் அசலான, உயிர்ப்புள்ள கதைகளிலிருந்துதான் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

பாரதிராஜாவின் '16 வயதினிலே', மகேந்திரனின் 'முள்ளும் மலரும்', வசந்தின் 'ஆசை', அகத்தியனின் 'காதல் கோட்டை', விக்ரமனின் 'பூவே உனக்காக', பாசிலின் 'காதலுக்கு மரியாதை' என இவர்களின் அடித்தளம் மிக உறுதியான, எதார்த்தமான கதைகளில்தான் இருந்தது.

ஆனால், இவர்கள் ஒரு குறிப்பிட்ட வியாபார எல்லையைத் தொட்டவுடன், 'சூப்பர் ஸ்டார்' என்ற சிம்மாசனத்தில் அமரவைக்கப்பட்ட மறுகணமே, கதைகளுக்கான கதவுகள் ஈவிரக்கமின்றிச் சாத்தப்பட்டன.

நாயகன் என்பவன் ஒரு மனிதன் அல்ல, அவன் ஒரு தெய்வம்; அவன் அழக் கூடாது, அவனுக்கு அறிமுகப் பாடல் வேண்டும், நான்கு பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் வேண்டும் என "கொண்டாட்டங்களுக்கான' இலக்கணங்கள் எழுதப்பட்டன.

படைப்பாளிகளான இயக்குநர்கள் தங்கள் தனித்துவத்தைத் தொலைத்துவிட்டு, இந்தப் பிம்பங்களைத் தூக்கிச் சுமக்கும் வெறும் "புராஜெக்ட் மேனேஜர்களாக' சுருக்கப்பட்டனர்.

இதன் ஆகப்பெரிய துயரம், இவர்களைப் பார்த்து திரைப்பட உலகுக்கு வந்த பல நடிகர்கள், தாங்களும் அந்தப் பிம்பமாகவே மாற வேண்டும் என்ற வெறியில் நிஜமான நடிப்பைத் தொலைத்துச் சரிந்து விழுந்தார்கள். ஒரு சிலர் மட்டுமே வேறு வழியின்றிப் பக்கவாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் சிறு படம் எடுத்து, கலையின் உந்துதல் காரணமாக இங்கு வந்து தங்கள் மூலதனத்தை இழந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது, கொடுமையானது. அவர்கள் இழந்த பணம் என்று ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் கணக்கில் அடங்காது.

நாமெல்லாம் புருவங்களை உயர்த்திப் பார்க்கிற ஆஸ்கர் போன்ற விருதுகள் தரப்படுகிற அமெரிக்க ஹாலிவுட் திரைத்துறையில் வணிகம் என்பது ஆரம்பத்தில் காமம், வன்முறை, திருட்டு, பேய் பிசாசு, மூடநம்பிக்கை ஆகியவற்றை நம்பியே இருந்தது. ஆனால், சார்லி சாப்ளின் என்ற மேதை ஒரு மாபெரும் கலகம் செய்தார். வன்முறையோ, காமமோ இன்றி, எளிய மனிதர்களின் வறுமையையும், முதலாளித்துவத்தின் கொடுமையையும் வெறும் புன்னகையின் மூலமும், கண்ணீரின் மூலமும் திரையில் சாதித்துக் காட்டினார்.

நான் திரைப்பட விழாக்களுக்கு அங்கே சென்றபோது, நிஜ திரைக் கலைஞர்களின் படைப்புகளையும், அவர்களின் உரையாடல்களையும் அவர்களுடன் இருந்து கேட்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றேன். அந்த அடிப்படையில் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.

நமது இந்தியாவில் எல்லாமே கலந்த ஒரு கதம்பமாக திரைப்படம் திணிக்கப்பட்டது. இதற்கு ஒரு சிறந்த விதிவிலக்காக மலையாள திரைத் துறை நின்றது. மம்மூட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திரங்கள் அங்கு உருவானாலும், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்ற மாபெரும் இலக்கிய ஆளுமைகளின் வலுவான அடித்தளமும், முதிர்ச்சியான பார்வையாளர்களும் அங்கு கலையையும், வணிகத்தையும் அருகருகே வாழ அனுமதித்தார்கள்.

உலக திரைப்படங்களில் மாபெரும் திறப்பாக அமைந்தது இத்தாலியில் உருவான "நவ யதார்த்தவாதம்' (நியோ ரியலிசம்).

விட்டோரியோ டி சிகாவின் "பைசைக்கிள் தீவ்ஸ்' என்ற திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வில்தான், சத்யஜித் ரே தனக்குள் இருந்த திரைத் தாகத்தை உணர்ந்து 'பதேர் பாஞ்சாலி'யை எடுத்தார். அந்தச் செவ்வியல் மரபுதான் இந்தியப் பேரரணில் பூத்த முதல் குறிஞ்சி.

பின்னர் ஈரானிய திரைத் துறையில் மஜித் மஜிதி, அப்பாஸ் கியரோஸ்தமி போன்றோரும், சீனாவில் ஜாங் யிமெü ('தி ரோடு ஹோம்') போன்றோரும் எந்தப் பிரம்மாண்டமுமின்றி, மானுட உணர்வுகளை மட்டுமே நம்பி காவியங்களைப் படைத்தனர்.

ஆனால், சத்யஜித் ரேயின் வழித்தோன்றலாக இங்கு உருவான எதார்த்தப் படைப்பாளிகள் ஈவிரக்கமின்றி வஞ்சிக்கப்பட்டார்கள். விநியோகஸ்தர்களின் இரும்புப் பிடிக்குள் சிக்கி, தாங்கள் சொல்லவந்த ஆழமான கதைகளுக்குள் கவர்ச்சி நடனங்களுடனான பாடல்களையும், வணிகச் சண்டைகளையும் திணிக்க வேண்டிய கசப்பான சமரசத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இன்று நட்சத்திரங்களை மையப்படுத்திய இந்த வணிக சினிமா ஆழமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. 'பான்}இந்தியா' என்ற பெயரில் வெளியாகும் பெருமுதலீட்டுப் படங்கள் எந்த நிலத்துக்கும் தொடர்பில்லாத, கலாசார வேர்களற்ற கதைகளைச் சொல்கின்றன.

நமது மண்ணின், எளிய மனிதர்களின் கதைகள் இந்தப் பிரம்மாண்டப் போட்டியில் நசுக்கப்படுகின்றன.

ஒரு படம் இயக்குநரின் கலைப்பார்வை என்ற நிலை மாறி, நாயகனின் பிம்பத்தைக் கட்டமைக்கும் ஆராதனையாக மாறிவிட்டது. இயக்குநர்கள் வெறும் சண்டைப் பயிற்சியாளர்களாகத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளனர்.

கலை என்பது மெüனத்தின் மூலமும், உணர்வுபூர்வமான காட்சிகளின் மூலமும் பார்வையாளனுக்குள் பச்சாதாபத்தைக் கடத்த வேண்டும். ஆனால், இங்கோ காதைப் பிளக்கும் பின்னணி இசையின் (பிஜிஎம்) மூலமும், அதீத நாடகத்தன்மை மூலமும் பார்வையாளர்களின் உணர்ச்சிகள் வன்முறையாகக் கையகப்படுத்தப்படுகின்றன.

படைப்பாளி அதை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியாமல் முடங்கிப் போகிறான். ஒரு நவீன "வசன கவிதை' எப்படித் தேவையற்ற இலக்கணங்களை, அலங்காரங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, வாழ்வின் உண்மையை நேரடியாக, அப்பட்டமாகப் பேசுகிறதோ, அந்த நேரடித்தன்மையை திரைப்படங்கள் எட்ட வேண்டும்.

பிரம்மாண்டமான பெரு நிறுவன வெளியீடுகளின் பிடியிலிருந்து விடுபட்டு, சிறிய முதலீட்டுப் படங்களுக்கான மாற்றுத் திரையரங்குகள் உருவாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 'திரைப்பட ரசனை' என்பது பள்ளிப் பாடத்திட்டமாக மாறி, சர்வதேசத் தரத்திலான எதார்த்தப் படங்களை நமது அடுத்த தலைமுறை பார்க்க வேண்டும்.

திரைப்படங்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சிக்கியுள்ள ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டது.

அது மனிதன் தன் இருளைப் போக்கிக்கொள்ள ஏற்றிய ஒரு மெழுகுவர்த்தி; அந்த வெளிச்சத்தை, அந்தத் தூய கலையை அதன் அசல் தன்மையோடு மீட்டுருவாக்கம் செய்வதில்தான் தமிழ் திரைத் துறை, திரைப்படங்கள் மட்டுமல்ல, மனிதகுலத்தின் அழகியலும் தங்கியிருக்கிறது.

இனியாவது இங்கிருக்கும் நிஜமான மக்கள் அமைப்புகள் திரைப்பட ரசனைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்; அதை முதலில் சிறார்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சிறார் எழுத்தாளர்களே, இலக்கியங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இந்த திரைப்பட ரசனைக் கல்விக்கும் தாருங்கள்.

குழந்தைகள் படிப்பதிலிருந்து பார்ப்பதற்கு வந்துவிட்டார்கள். இதுதான் சரியான நேரம். திரைப்பட ரசனைக் கல்வியின் மேன்மையை அமையவிருக்கும் புதிய அரசு புரிந்துகொண்டு, அதை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் இயக்கங்களின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களே, நீங்கள் முன்வர வேண்டும். அதை எப்படி வடிவமைப்பது என்பதற்கு ஓர் எளிய கலைஞனாக நான் உங்களுடன் இருப்பேன். அதுதான் நாளைய கலையுலகில் அடியெடுத்து வைக்கப் போகும் இவ்வுலகுக்கு நாம் செய்யும் நன்மையாகும்.

கட்டுரையாளர்:

திரைப்பட இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.