முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

காவிரிப் பாசன கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்: விடுபட்ட கடலூர் மாவட்டம்

 சிதம்பரம், மே 9: காவிரிப் பாசன கட்டமைப்புக்கு ரூ.1560 கோடியில் நான்கு அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டம் இடம் பெறாதத

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

 சிதம்பரம், மே 9: காவிரிப் பாசன கட்டமைப்புக்கு ரூ.1560 கோடியில் நான்கு அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டம் இடம் பெறாததால் அந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

 ஒவ்வொரு முறையும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிதி மற்றும் சலுகைகளை அரசு ஒதுக்கீடு செய்யும்போது காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது.

 அதன்பிறகு விவசாயிகள் போராடி பெற வேண்டி பெற நிலை உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் புயல், வெள்ளம், வறட்சி என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் காவிரி டெல்டா கடைமடைப் பகுதியைச் சேர்ந்தது கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களாகும்.

 கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் காவிரிப் பாசனம் மூலம் 1.50 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. முதல்வர் அறிவிப்பில் திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 ஆனால் கடலூர் மற்றும் நாகை மாவட்டம் குறிப்பிடப்படாததால் இம்மாவட்டம் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 இது குறித்து காவிரி டெல்டா விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் பாதுகாப்பு சங்க துணைத் தலைவரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி அமைப்பாளருமான வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தது:

 சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளில் உள்ள மதகுகள், கதவணைகள் ஆகியவற்றை சீர்செய்யவும், வெள்ளநீரை தேக்கவும் பணிகள் மேற்கொள்ள ரூ.1560 கோடி செலவிடப்படும் என அறிவித்துள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

 அதேவேளையில் காவிரி டெல்டாவின் இன்னொரு கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டத்தை குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யாதது வேதனையளிக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்கள் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

 இம்மாவட்டத்தில் கிள்ளை, பரங்கிப்பேட்டை, சின்னகாரமேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடலோர கிராமப் பகுதிகள் உள்ளன. கடலோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தினால் கடல்நீர் உட்புகும் என்று முதவ்வர் கூறியுள்ளார்.

 இந்த பாதிப்பு கடலூர் மாவட்டத்துக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீராணம் ஏரியும், 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கொள்ளிடம் கீழணையிலும் பல மதகுகள், பல கதவணைகள் சேதமடைந்துள்ளன.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள கடைமடைப் பகுதிகளில் உள்ள மதகுகளை சீரமைக்கவும், கதவணை அமைக்கவும் முதல்வர் ஒதுக்கிய நிதியிலிருந்து ரூ.400 கோடி நிதிஒதுக்க வேண்டும்.

 மேலும் வெள்ளத் தடுப்பு என சொல்லும்போது கொள்ளிடம் கீழணைக்கு கீழே ஏற்கெனவே ஒரு கதவணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 எனவே ஒரு மாதிரி திட்டமாக கடலூர் மற்றும் நாகை மாவட்டம் பயன்பெறும் வகையில் கதவணை கட்டினால் வெள்ளநீரை சேமிக்க ஏதுவாக இருக்கும் என வி.கண்ணன் தெரிவித்தார்.

 ஆண்டுதோறும் வீணாக

 கடல் கலக்கும் நீர்...

 கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க கீழணைக்கு மேலும், கீழும் கதவணைகள் அமைக்க வேண்டும் என கடலூர் மற்றும் நாகை மாவட்டம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குறிப்பாக கொள்ளிடத்தில் 2005-ல் 349 டிஎம்சியும், 2006-ல் 1854 டிஎம்சியும், 2007-ல் 100.41 டிஎம்சியும், 2008-ல் 60.40 டிஎம்சியும், 2009-ல் 23.85 டிஎம்சியும், 2010-ல் 17.65 டிஎம்சியும், 2011-ல் 22.82 டிஎம்சி நீர் கடலில் வீணாக கலந்துள்ளது.

 வீராணம் ஏரியை பொறுத்தவரையில் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம் மாவட்டங்களிலிருந்து நீர் வருகிறது.

 கிருஷ்ணகிரி கேஆர்கே அணைக்கட்டிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் வெள்ளாற்றில் விடப்படுவதால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றில் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் வீராணம் ஏரியிலிருந்து பழைய கொள்ளிடத்தில் நீர் திறந்துவிடப்படுவதால் ஆண்டுதோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 அதுபோன்று வீராணம் ஏரிக்கு வரும் 5 டிஎம்சி நீரை சேமிக்க முடியாமல் வீணாகிறது. வீராணம் ஏரியில் தற்போது ஒரு டிஎம்சி நீர்தான் சேமிக்க முடியும். இதை 2 டிஎம்சி நீர் தேக்கி வைக்கும் வகையில் ஆழப்படுத்த வேண்டும்.

 கீழணையின் மேலும், கீழும் கதவணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.