உ.வே.சா. பிறந்த நாள் சிந்தனை :கள்ளா வா... புலியைக் குத்து!
அது ஒரு கிராமம். கீழப்புலியூர் என்று பெயர். ஊரில் வயதானவர்களே அதிகம். இளையவர்கள் எல்லோரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும்
அது ஒரு கிராமம். கீழப்புலியூர் என்று பெயர். ஊரில் வயதானவர்களே அதிகம். இளையவர்கள் எல்லோரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வேலை நிமித்தமாய். எனவே சிறுவர்களான நாங்கள் அந்த ஊரை "கிழ'ப்புலியூர் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு.
தனிமையில் இருக்கும் வயதானவர்களுக்கு இரவு வந்தால் கொஞ்சம் பயமும் வந்துவிடும். கொல்லைப்புறத்தில் காற்றில் ஆடும் தென்னங்கீற்று, சுவரில் உரசும் சத்தம் கூட பயத்தைத் தோற்றுவிக்கும். இடையில் திருடர் பயம் வேறு! நெஞ்சு அடைத்துக் கொண்டு இருமல் வந்தால் எழுந்து தண்ணீர் குடிக்கக்கூட முடியாமல் உடல் தளர்ந்திருக்கும் பலருக்கு!
எனவே பள்ளிச் சிறுவர்களான நாங்கள் முறை வைத்து அவர்கள் வீடுகளில் துணைக்கு படுத்துக் கொள்வது வழக்கம். இரவு அரைகுறைத் தூக்கத்தில் அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதுண்டு. இப்போது போல் டி.வி. பாதிப்பு இருபது வருடங்களுக்கு முன் கிடையாது. தூக்கம் வருவதற்குள் பல கதைகளை, வரலாற்றுச் சம்பவங்களை அவர்கள் சொல்வர். சுதந்திரப் போராட்டக் கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சில சமயங்களில் கொஞ்சம் அலுப்புத்தட்டும். அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று "உம்' கொட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் அப்போது அவர்களிடமிருந்து கேட்ட பல விஷயங்கள்தான் இப்போது வாழ்க்கையில் அனுபவப் பாடங்களாகத் திகழ்கின்றன என்பது புரிந்தது.
Advertisement
எனவே, பெரியவர்கள், வயதானவர்கள் பேசும்போது ஏதேனும் ஒரு படிப்பினை நமக்குக் கிடைக்கலாம் என்பதால் அவர்கள் பேச்சை அலட்சியப்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொல்வதுண்டு... இது நம்மைப் போன்றோருக்கு இலேசாகத் தெரியலாம். ஆனால் ஒருவருக்கு, இல்லை இல்லை இந்தத் தமிழச் சமுதாயத்துக்கே ஒரு அரிய பொக்கிஷத்தைத் தந்திருக்கிறது என்பது வரலாறு!
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைப் பற்றி நாம் நிறையவே படித்திருக்கிறோம். கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருந்த ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடிப் பதிப்பித்து, தமிழ் இலக்கியங்களுக்கு மறு வாழ்வளித்தவர் அவர்.
உ.வே.சா அவர்கள் 18.02.1854 இல் பிறந்தவர். அந்த வகையில் அவருடைய 159 ஆவது பிறந்த தினம் இம்மாதம் வருகிறது. அவருடைய 159 ஆவது ஆண்டு தினத்தில், தமிழர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் அவருடைய பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டும். இல்லங்களில் செல்வங்களாய் வளைய வரும் சிறார்களுக்கு கதைகளைச் சொல்லி, தமிழ்த்தாத்தாவின் அரிய பணிகளை நினைவில் பதியவைக்க வேண்டும்.
"உ.வே.சா' அவர்களைப் பற்றி நிறையப் பேர் தெரிந்து வைத்திருக்கலாம். அவருடைய எழுத்துகளை ஊன்றிப் படித்தவர்களுக்கு வேறெதையும் காணும் சிந்தனை வராது. இந்தப் பகுதியில் நான் குறிப்பிடப்போகும் சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே எங்காவது படித்திருக்கலாம். இருப்பினும் என் இனிய இளைய சமுதாயத்தை மனத்தில் கொண்டு இச்சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன். இதை, உ.வே.சா அவர்கள் தமது "நினைவு மஞ்சரி' பாகம் - 2 இல் பதிவு செய்திருக்கிறார்.
உ.வே.சா பதிப்பித்த முதல் இலக்கியம் சீவகசிந்தாமணி! அந்தப் பாடல்களுக்கு விளக்கம் எழுதும்போது பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் அவர் தவித்ததும் உண்டாம். அப்படி ஒரு இடம் &
காந்தருவதத்தையிடம் வீணை இசையில் போட்டியிட்டு வெல்வோர் அவளை மணக்கலாம் என்று அறிவித்தான் கட்டியங்காரன். அங்கு வந்திருந்த அரசர் பலரும் தோல்வியுற, சீவகன் இதில் வெற்றி பெற்றான். பொறாமைத் தீயில் வெம்பிய கட்டியங்காரன், தோல்வியுற்ற அரசர்களை ஏவி சீவகனை வெல்ல எண்ணினான்.
சீவகசிந்தாமணி காந்தருவதத்தையார் இலம்பகத்தில் வரும் அந்தப் பாடல்...
வெள்ளிலை வேற்க ணாளைச் சீவகன் வீணை வென்றான்
ஒள்ளிய னென்று மாந்தர் உவாக்கடல் மெலிய வார்ப்பக்
கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க் கெல்லாம்.
(சீவகசிந்தாமணி - 741)
இந்தப் பாடலில் வரும் ""கள்ளராற் புலியை வேறு'' என்ற வரிகளுக்கு சரியான வகையில் உவமை கிடைக்காமல், சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் புரியாமல் இந்த வரிக்கு மட்டும் தெளிவான விளக்கமின்றி 1887 இல் சீவகசிந்தாமணி முதல் பதிப்பை வெளியிட்டார் உ.வே.சா!
கும்பகோணம் பக்தபுரி அக்ரஹாரத்தில் வசித்து வந்த உ.வே.சாவின் வீட்டுப் பக்கத்தில் சாமப்பா என்ற கிழவர் இருந்தார். அவர் உ.வே.சாவிடம் அவர் அனுபவத்தில் அறிந்தவற்றைச் சொல்வாராம். சில சமயங்களில் அவற்றை உ.வே.சா கேட்காமலும் இருந்துவிடுவாராம்.
ஒருநாள் அவர் வழக்கம்போல் உ.வே.சா.விடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது சொந்தக் கதையைச் சொன்னாராம். கிழவருக்கு வேண்டாதவர் ஒருவர், இன்னொருவரிடம் இவரைப் பற்றிக் குறை கூறி சண்டை மூட்டிவிட்டாராம். ""எப்படியாவது நாங்கள் முட்டிமோதி சாகட்டுமே என்பதுதான் அவன் ஆசை. நாங்கள் இருவருமே அவனுக்கு வேண்டாதவர்கள்தான்! அதற்குத்தான் அவன் கள்ளா வா! புலியைக் குத்து! என்கிறான். நானா ஏமாந்து போவேன்...'' என்றார் அந்தக் கிழவர்.
அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்த உ.வே.சாவுக்கு "கள்ள வா! புலியைக் குத்து' வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. கிழவரை மிகவும் வேண்டிக் கொண்டு அதன் அர்த்தத்தைச் சொல்லுமாறு கேட்க, கிழவரோ ""அது ஒரு பழமொழி'' என்று சொல்லி அது தொடர்பான கதையைச் சொன்னாராம்!
வழிப்போக்கன் ஒருவன் கையில் பண மூட்டையுடன் காட்டில் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைத் துரத்தினான். மூச்சிரைக்க ஓடிய அவன் எதிரே திடீரென்று ஒரு புலி தோன்றியது. முன்னே புலி, பின்னே திருடன்... இந்த இரு ஆபத்துகளையும் சமாளிக்க எண்ணிய அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் செய்தான். திருடனிடம், ""அந்தப் புலியைக் கொன்று விட்டால் இந்தப் பணமூட்டையை அப்படியே தந்துவிடுகிறேன்'' என்று ஆசை காட்டினான்.
திருடனும் சரியென்று கூறி, புலியைத் தாக்கினான். ஆனால் ஒரே நேரத்தில் புலியும் திருடனும் மடிந்துபோக, வழிப்போக்கன் தப்பிப் பிழைத்தான்.
இந்தக் கதையைக் கேட்ட உ.வே.சாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சீவகனை இந்த மன்னர்களை வைத்தே கொன்று விடலாம் என்று கணக்குப் போட்ட கட்டியங்காரனின் எண்ணம் தவிடுபொடியானது. சீவகன் அவர்களை வென்றான்.
இந்தப் பாடலில் கள்ளனுக்கும் புலிக்கும் உவமையாக மன்னர்களையும் சீவகனையும் திருத்தக்க தேவர் காட்டுகிறார் என்பதும் உ.வே.சாவுக்குப் புரிந்தது. அதுவும் எதிர்பாராது ஒரு கிழவரிடமிருந்து பெற்ற விளக்கத்தால்... கிழவருக்கு ஆயிரமாயிரம் நன்றிகளைக் கூறி, 1907 இல் தாம் வெளியிட்ட சீவக சிந்தாமணி இரண்டாம் பதிப்பில், "கள்ளா வா! புலியைக் குத்து! என்பது ஒரு பழமொழி' என்று உரிய விளக்கத்தைச் சேர்த்தாராம்.
நமக்கு ஒரு பழமொழியும், சிறுகதையும், உவமை நயமும் இந்தக் காப்பியத்தில் இருந்து கிடைத்திருக்கிறதே. அதைக் காட்டியவர் உ.வே.சாமிநாத ஐயர்தானே! அதுவும் இந்தக் கதையிலிருந்து நமக்கு ராஜதந்திரமும் நீதியும் அல்லவோ காட்டப்பட்டிருக்கிறது! இதுவன்றோ நம் வாழ்வியல் சிந்தனை!