சிறப்புக் கட்டுரைகள்

‘ஜெ’வின் உடைத்தேர்வுகள் அவரது ஆழ்மனதின் வெளிப்பாடுகளா?!

கார்த்திகா வாசுதேவன்

தற்போது ‘ஜெ’ இறப்பின் பின் அவரது வாழ்வில் நிகழ்ந்த மோசமான சம்பவங்களை, அவரது உடைத் தேர்வுகளோடு பொருத்திப் பார்த்து பொதுமக்கள் விசனப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் மறைந்த முதல்வரின் நினைவுகளைப் பற்றிப் பேசக் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அவரை நினைவு கூர்வதற்கான வாய்ப்பாக மட்டுமல்ல; அவருக்கு நிகழ்ந்த அவமானங்களில் இருந்து அவர் எப்படியெல்லாம் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள முயன்றார் எனும் ரீதியிலும் சிந்திக்க கிடைத்த வாய்ப்பாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். நேற்று என் வீட்டருகே இருந்த குடியிருப்பு வளாகத்தில் பெண்களுக்கு இடையில் நிகழந்த சம்பாசனை தான் இந்தக் கட்டுரை உருவாகக் காரணமானது. இப்படியும் இருக்கலாமோ என்று யோசிக்கத் தூண்டியது; 

அது என்னவெனில்;

தான் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் உடை விசயத்தில் ஜெயலலிதா ஒரு டிரெண்ட் செட்டர். பட்டிக்காடா, பட்டிணமா.. ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளாகட்டும், பாடல் காட்சிகளுக்கான 'கிளாமர் குயின்' டைப் உடைகளாகட்டும், ராமன் தேடிய சீதை, எங்கிருந்தோ வந்தாள் உள்ளிட்ட படங்களில் பார்க்கக் கிடைத்த பாந்தமான புடவைத் தோற்றங்களாகட்டும், எல்லாமே உடை விசயத்தில் அவரது அபாரமான ரசனையை எடுத்துக் காட்டும் விதமாகவே இருக்கும்.

அதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த போதும் சரி, 91 தேர்தலில் எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதும் சரி  கட்சிக் கரையிட்ட புடவையானாலும், கிரேப் சில்க்கில் பூக்கள் விரவிய புடவைகளாக புடவைகளானாலும் எல்லாவற்றிலுமே நறுவிசாக உடுத்திய அழகான தோற்றங்களில்  ஜெயலலிதாவைப் பார்க்கலாம். 

தமிழ்நாட்டில் ஆண்களுக்கானதென்று நம்பப் பட்ட அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக, பலரது பார்வையில்  நடிகையாக உள்ளே அழைத்து வரப் பட்ட ஜெயலலிதா எப்போதும் தனது அழகுணர்ச்சியின் மீதும் மிகுந்த அக்கறை உடையவராகவே இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் தன்னை முழுதாக இழுத்துப் போர்த்திக் கொண்டதொரு உடையலங்காரத்தில் நாம் அவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. எப்போதிருந்து ஜெ முகமும், முன் கைகளும் மட்டும் வெளித்தெரியும்படியாக உடை உடுத்த ஆரம்பித்தாரென்றால்; அது அவரது பிற்கால அரசியல் வாழ்வின் போக்கைத் தீர்மானித்த அந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு தான்.


 
முதலாவது எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின் போது ராணுவ வண்டியிலிருந்து இடித்துக் கீழே தள்ளப் பட்ட  சம்பவம்,  இரண்டாவது ஜெ எதிர்கட்சித் தலைவராக இருந்த போது நடந்தது. சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் நிதி அறிக்கை தாக்கல் செய்த போது இருகட்சி உறுப்பினர்களிடையே கலகம் வெடித்து தாக்குதல் நடைபெற்ற போது, எதிர்கட்சியினரால் ஜெ புடவை இழுக்கப் பட்டு, தலைமுடி கலைந்து மானபங்கப் படுத்தப்பட்டு பரிதாபமான கோலத்தில் சட்டமன்றத்திலிருந்து வெளிவந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்த பெண் அரசியல்வாதிக்கும், கட்சித் தலைமைக்கும் நடந்திராத மிக மோசமான அவமானம் இது! 

இந்த இரண்டு சம்பவங்களும் தான் ஜெ வின் பிற்காலத்திய உடையலங்காரத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தின. என்.டி.டி.வி சிமி கிரேவலுக்கு ஜெ அளித்த வெளிப்படையான நேர்காணலில் தன்னை இயல்பில் ‘கூச்ச சுபாவி’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். அப்படி அந்நியரை சந்திக்க ஆர்வமற்ற, கூச்ச சுபாவம் கொண்ட ஒரு பெண் வாழ்வோட்டத்தில் என்ன தான் மிகப் பெரிய கட்சித் தலைவியாக ஆனாலும் கூட, ஆறு முறை தமிழகத்தின் முதல்வராகி, ஒப்பற்ற அதிகார மையமாகி, மாநில அரசியல் தாண்டி மத்திய அரசிலும் தவிர்க்க முடியாத அங்கமாகி மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தாலும் கூட; பெண் எனும் ஒரே காரணத்தால் ‘தான் எக்கணமும் அவமானப் படுத்தப்பட்டு விடலாம்’அல்லது ‘இனி எப்போதும் எங்கும் எவர் முன்பும் அவமானப் பட்டு விடக் கூடாது’ எனும் தற்காப்பு உணர்வே குண்டு துளைக்காத(!!!) ஓவர் கோட் புடவை என்றும், இழுத்துப் போர்த்திய புடவை என்றும் அவரது உடையலங்காரத்தை மாற்றிக் கொள்ள வைத்தது.

முதல்முறை முதல்வராகப் பொறுப்பேற்ற சமயத்தில் அதுவரை எங்கும் பார்த்திராத அளவில் புதுவிதமான உடையலங்காரம் ஒன்றை ஜெயலலிதா தனக்காகத் தேர்ந்தெடுத்தார். அது புடவையும், புடவைக்கு மேட்சாக அதே துணியில் காலர் வைத்த ஓவர் கோட் ஸ்டைல். இந்த மாதிரியான புது ஸ்டைல் உடையலங்காரத்தை அப்போது தான் தமிழகம் முதன்முறை நேரில் கண்டது. சிலர் ஜெயலலலிதா குண்டு துளைக்காத கோட் அணிந்திருக்கிறார் என்று கூட பேசிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு வந்த தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா உடனடியாக தனது புடவை கட்டும் ஸ்டைலை மாற்றி விட்டார். இதற்கு காரணம் தோல்விக்குப் பின்னான பொதுமக்களது விமர்சனமாகவும் இருக்கலாம்.

முதல் முறை முதல்வராகப் பொறுப்பேற்ற போது ஜெ வுக்கு வயது 43. அந்த வயதுக்கேற்றவாறு அப்போது பெரிய பெரிய பூக்களிட்ட, அடர் நிறங்களில் ஆன புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த பதவிக் காலங்களிலும் சரி, பதவியற்று வீட்டிலிருந்த காலங்களிலும் சரி ஜெ வின் புடவை ரசனை அவரது வயதுக்கேற்றவாறு மாறிக் கொண்டே தான் இருந்தது. புரோகேட், பட்டு, கிரேப் சில்க் என்று அணிந்து கொண்டிருந்தவர், கலைஞர் ஆட்சியில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று மீண்ட பின் மெல்லிய எம்பிராய்டரி செய்யப்பட்ட பிளெயின் புடவைகளையே கடைசி வரை உடுத்திக் கொண்டிருந்தார். உடன்பிறவா சகோதரி சசிகலாவும் அவரும் ஒரே மாதிரியான புடவைகளில் வலம் வந்த காலங்களும் உண்டு.

எது எப்படியோ தமிழர்கள் மனதில் மட்டுமல்ல இந்திய அரசியல் அரங்கிலும் ஜெ வின் புடவை விசயம்; அதன் நிறம் முதற்கொண்டு எப்போதும் பலராலும் கவனிக்கப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT