கருக்கலைப்பு என்பது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மிகுந்த வலியும் துக்கமும் நிறைந்த ஒரு தருணம், அந்தத் தருணத்தை பெண்கள் யாரும் அவர்களாக வேண்டி விரும்பி எப்போதும் தேடிக்கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தில் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. இதைச் சரி தப்பு என்று வகைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பாதிப்படைந்த ஒவ்வொரு பெண்ணின் கதையையும் தனித் தனியே கேட்டுத் தீர்ந்தால் ஒழிய சரியான முடிவுக்கு வர முடியாது.
நமது இந்தியாவில் 1971- ல் கருக்கலைப்பு தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது, இந்தச் சட்டம் 1972 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தால், 20 வாரங்களுக்கு மேற்பட்டதாக இருந்தாலும் கருவை கலைக்க அனுமதிக்கலாம் என, கருக்கலைப்பு சட்டப் பிரிவு கூறுகிறது' .
இதற்கு சமீபத்திய உதாரணம் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலர் திருமணம்செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உறவு கொண்டு பின்பு ஏமாற்றி விட்டார் எனவும் அதனால் உண்டான கருவுக்கு 'அனஸ்பாலி' எனும் மரபியல் நோய் இருப்பதால், பிறக்கும் போதே மூளை அல்லது கபாலம் இன்றி குழந்தை பிறக்கும் அபாயம் உண்டெனவும், அதைக் கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது கடந்த வாரத்தின் பரபரப்புச் செய்தி. இந்த தீர்ப்பை பெண்ணின் எதிர்கால வாழ்வு மற்றும் கருவிலேயே தீராக்குறையுடன் பிறக்கப் போகும் சிசுவின் நிச்சயமற்ற எதிர்காலம் போன்ற காரணங்களுக்காக சரியான தீர்ப்பு என்று மருத்துவர்கள் மற்றும் மக்களின் ஒருசாரர் ஏற்றுக்கொண்டாலும் சிலர் இதற்கு கண்டனக்குரல் எழுப்பவும் தவறவில்லை.
ஏனெனில் கருக்கலைப்பு தடை சட்டத்தின் உட்பிரிவுகளைப் பயன்படுத்தி சிலர் முறைகேடான கருக்கலைப்பு செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. இது குறித்த விசாரணையின் போது அரசு சார்பாக வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியதாவது; ’இருபது வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க அனுமதிக்க முடியாதென, கருக்கலைப்பு தடுப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவு கூறுகிறது. அதே நேரத்தில், சட்டத்தின் ஐந்தாவது பிரிவு, தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சூழ்நிலையில் அனுமதி அளிக்கலாம் என்று கூறுகிறது.இந்த சட்டத்தின்படி, இரண்டு உயிர்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐந்தாவது சட்டப் பிரிவை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் கருவை கலைக்கும் அபாயம் உள்ளது. இதனால், பெண் சிசு கலைப்பு அதிகரித்துவிடும். அதனால், இந்த சட்டப் பிரிவுகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.’என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை குறித்து அதற்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள அமர்வில் விவாதிக்கலாம் என வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ’ஐரோப்பிய யூனியனின் மால்டா’ தவிர அமெரிக்கா,ஆஸ்திரேலியா, பிரேசில், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகள் அனைத்திலும் சற்றேறக்குறைய இந்தியாவைப் போலவே தான் கருக்கலைப்பு தடைச்சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாகச் சில நாடுகளின் கருக்கலைப்புத் தடைச் சட்டங்களுக்கான வரையறைகளைப் பாருங்கள்;
அமெரிக்கா: அமெரிக்காவில் கரு உருவான நாளில் இருந்து அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்ணுக்கு அனுமதி உண்டு. எனினும் அங்கு சில மாகாணங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை, மனநிலை போன்ற சில காரணங்களை ஒட்டி இதற்கான சில வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன. அம்மாதிரி நேரங்களில் மட்டும் மருத்துவர் ஆலோசனையைப் பொறுத்து கருக்கலைப்புக்கு தடை உண்டு.
அயர்லாந்து: அயர்லாந்தின் சட்டங்கள் கருக்கலைப்பிற்கு எதிரானவை. கருவினால் பெண்ணின் உடல்நலனுக்கு பேராபத்து எனும் நிலையில் மட்டுமே கருக்கலைப்பிற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் சோதனையின் பின் அனுமதி வழங்கப்படும்.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்புச் சட்டம் மாநில அரசுகளால் வரையரை செய்யப்படுகின்றன. அங்கு ஒவ்வொரு தனி மாநிலமும் கருக்கலைப்புக்கு அனுமதி மற்றும் தடை என்பதில் தமக்கென்று தனித்தனி வரையறைகள் வைத்துள்ளன. அதன்படி கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் பெண்ணின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவரது உடல்நலன், பாதுகாப்பு, எதிர்காலம் இவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதியோ தடையோ முடிவு செய்யப்படும்.
மால்டா : ஐரோப்பியநாடுகளில் மால்டாவில் மட்டும் தான் இதுவரை கருவிலிருக்கும் சிசுவின் உயிர்க்காப்பதற்கான சட்டங்கள் என்று எதுவுமில்லை, இங்கு கருக்கலைப்பு தடைச்சட்டம் என்ற தனிச்சட்டம் எதுவுமில்லை. கருவைச் சுமப்பதும் நிராகரிப்பதும் சமபந்தப்பட்ட பெண்ணைச் சார்ந்தது எனும் நிலை தான் இங்கு நீடிக்கிறது.
பிரான்ஸ் : பிரான்சில் கரு உண்டாகி 14 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள சட்ட ரீதியாக அனுமதி உண்டு. ஆனாலும் இந்த அனுமதி என்பது கறாரான நிபந்தனைகளுக்கு உட்பட்டது, கருவைச்சுமக்கும் பெண் மற்றும் கருவிலிருக்கும் சிசு இருவருக்கும் விபத்து அல்லது மரபியல் கோளாறுகள் காரணமாக மோசமான பாதிப்புகள் அல்லது பெண்ணுக்கு உளவியல் ரீதியாகப் பெரும் சிக்கல் என்றாலோ மட்டும் போதுமான மருத்துவ சான்றிதழ்கள் மூலம் உறுதி படுத்தப்பட்ட பின்னர் சட்ட ரீதியாக கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
பிரேசில் : பிரேசிலில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி உண்டு, எப்போதெனில் கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் பெண் ஆபத்தான நிலையில் இருந்தால் அல்லது கரு உண்டான முறையானது பாலியல்வன்முறையால் என்பது நிரூபிக்கப்பட்டால் அந்நாட்டுச் சட்டம் கருக்கலைப்புச் செய்ய அனுமதி வழங்குகிறது.
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கருக்கலைப்புச் செய்து கொள்ள சட்ட அனுமதி உண்டு. கரு உருவான முதல் 24 வாரங்களுக்குள் கருவைச் சுமப்பவருக்கு கருவால் உயிரிழப்பு ஆபத்துக்கள் இருப்பின் அவர்களது கருக்கலைப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்
மெக்சிகோ: மெக்சிகோவில் கூடாநட்பு மற்றும் பாலியல் வன்முறையால் கரு உண்டானால் அந்தக் கருவைக் கலைக்க பெண்ணுக்கு அனுமதி உண்டு. அங்கே கருக்கலைப்பு என்பது சட்டத்தின் அனுமதிக்குட்பட்டது.
மேலே கண்ட விவரங்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புச் சட்டங்கள் என்னவோ எல்லா நாடுகளிலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மனநலனுக்கு முன்னுரிமை அளித்துத் தான் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை கையாள்பவர்களான மக்களாகிய நாம் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட்டதின் நோக்கமே மாறிப்போகும் அளவுக்கு நமது வசதிகளுக்கும் வாய்புகளுக்கும் ஏற்ப வளைத்து நெளித்து அதன் நிஜத் தோற்றத்தை முற்றிலுமாகக் கெடுத்து விடுகிறோம். இங்கே யோசியுங்கள் இப்போது மாற வேண்டியவை, மாற்றப்பட வேண்டியவை சட்டங்களா? மனித மனங்களா? என்பது தான் புரியாத புதிர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.