முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அரசியல்வாதிகளைக் கண்டு அஞ்சாத அதிரடி நிர்வாகி அஸ்வனி லொகானி: தி கிங் ஆஃப் ஏர் இந்தியா!

லொகானியோ ஏர்-இந்தியாவின் மேலாண்மை இயக்குநராகப் பதவியேற்றது முதல் இன்று வரை தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ இலவச விமான பயணச் சலுகைகளை பயன்படுத்தியதில்லை. அதேபோல் கார்ப்பரேட் கிரெடிட் கார்டையும் 

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:13 PM
பகிர்:

அஸ்வனி லொகானி; இந்தப் பெயர் தற்போது இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருக்கலாம், அவர் யாரென்றால் ‘ஏர்-இந்தியா’ விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாண்மை இயக்குநர், 

சென்ற மார்ச் மாதம், சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட், ஏர்-இந்தியா அதிகாரியைத் தாக்கிய போது இவரது பெயர் மிகவும் பரபரப்பாக செய்தி ஊடகங்களில் அடிபட்டது. அதேபோல், 2015 ஆம் ஆண்டு திருப்பதி ஏர்போர்ட் மேலாளர் தாக்கப்பட்ட போதும் இவர் எடுத்த தைரியமான முடிவுகளுக்காக ஏர்-இந்தியா ஊழியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அஸ்வனி லொகானி நன்மதிப்பை பெற்றிருந்தார்.

அஸ்வனி ஏர்-இந்தியா மேலாண்மை இயக்குநர் பதவிக்கு வருவதற்கு முன்பு, மத்திய பிரதேசத்தில், மாநில சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். அதற்கும் முன்பு இந்திய ரயில்வேயில் பல உயர் பதவிகளை வகித்தவர். தமிழ்நாட்டில் முன்னேறத்துடிக்கும், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஐஏஎஸ் அதிகாரிகளான வெ.இறையன்பு, சகாயம் போன்றோர் கனவு நாயகர்களாக திகழ்கிறார்கள். அந்த வரிசையில் இனி நாம் அஸ்வனி லொகானியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏர்-இந்தியாவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட சலுகைகளாக கார்ப்ரேட் கிரெடிட் கார்டும், இலவச விமான பயணங்களும் உண்டு. ஆனால் லொகானியோ ஏர்-இந்தியாவின் மேலாண்மை இயக்குநராகப் பதவியேற்றது முதல் இன்று வரை தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ இலவச விமான பயணச் சலுகைகளை பயன்படுத்தியதில்லை. அதேபோல் கார்ப்பரேட் கிரெடிட் கார்டையும் பயன்படுத்தியதில்லை. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்திடும் நேர்மையான அதிகாரி லொகானி.

2015ஆம் ஆண்டு திருப்பதி ஏர்போர்ட்டில், அப்போதைய காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி, நிலைய மேலாளரை அறைந்ததற்காக, அருகிலுள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து எம்பி மிதுன் ரெட்டியை கைது செய்ய வைத்தவர் லொகானி. 

அதேபோல், சென்ற மார்ச் மாதம், சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா அதிகாரியை தாக்கியதிற்கு லொகானியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தனது விமான நிலைய ஊழியர்கள் அனைவரையும் கூட்டி அவர்கள் முன்னிலையில் யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு முடிவை எடுத்தார் லொகானி. அவர் எடுத்த அந்த அதிரடி முடிவால், ஏர் இந்தியா அதிகாரியைத் தாக்கிய அந்த எம்பி, தற்போது இந்தியாவில் உள்ள எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாமல் ஆனது. ‘இந்திய அரசியல்வாதி விமானத்தில் பயணம் செய்ய தடை’ என்ற தடாலடி முடிவு இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்று. இந்திய விமான வரலாற்றில், விமானத்தில் பயணம் செய்ய அரசியல்வாதிக்கு தடை விதித்திருப்பது இதுவே முதல் தடவை. அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்தத் தடை ஒரு பாடம்.

அதுமட்டுமல்ல, அஸ்வனி லொகானி, நான்கு பொறியியல் பட்டப்படிப்பிற்கு சொந்தக்காரர். இந்தச் சாதனைக்காக  ‘லிம்கா புக் ஆப் ரிகார்ட்சில்’ இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ரயில்வேயில் பணிபுரிந்த போது, உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்டீம் லோகோமோடிவ் என்ஜின் உதவியுடன் FAIRY QUEEN EXPRESS ரயிலை வெற்றிகரமாக ஓட்டியதால், இவருடைய பெயர்  ‘கின்னஸ் புத்தகத்திலும்’ இடம்பெற்றுள்ளது. லொகானி எந்தத் துறையில் இருந்தாலும் சரி தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு நியாயமான ஆதரவை தெரிவிப்பவர் எனும் நம்பிக்கையை காப்பாற்றி வருபவராக இருக்கிறார். அதேபோல், ஊழியர்-அதிகாரி நல்லுறவில் மிகவும் நம்பிக்கைக் கொண்டவராகவும் திகழ்கிறார்.

இப்பேற்பட்ட நேர்மையும் சாதனையும் கொண்ட லொகானி தான் ஏர்-இந்தியாவின் முக்கியத் தேவை என்று கருதிய மத்திய அரசு, 2015ஆம் ஆண்டு ஏர்-இந்தியாவின் மேலாண்மை இயக்குநராக அவரை நியமித்து அழகு பார்த்தது. அதற்கேற்ப போட்டிகள் நிறைந்த விமானத்துறையில், லொகானியின் நிர்வாகத்திறன் ஏர்-இந்தியாவை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை.

இப்படி நேர்மையான அதிகாரிகளெனப் பெயரெடுத்த வெ.இறையன்பு ஐஏஎஸ், சகாயாம் ஐஏஎஸ், ஏர் இந்தியா லொகானி போன்றோரது சாதனைகளைப் பின்பற்றி இவர்களது வரிசையில் வயதில் இளைய அதிகாரிகளும் இணையவேண்டும். அப்படி நடந்தால் குறைந்தபட்சம் 2030- ஆம் ஆண்டில் குறைகள் களைந்து, நிறைகள் நிறைந்த வல்லரசாக இந்தியா மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →