சிறப்புக் கட்டுரைகள்

யார் இந்தச் சிறுமி முஸ்கான் அஹிர்வார்?

வி. உமா

முஸ்கான் அஹிர்வாரைத் தெரியுமா உங்களுக்கு? போபாலில் துர்க்கா நகர் எனும் குடிசைப் பகுதியில் வாழும் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். சரி. அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அப்படி என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? முஸ்கான் இந்த இளம் வயதிலேயே அழகான சாதனை ஒன்றைச் செய்து வருகிறாள். தன் சிறிய வீட்டின் ஒரு பெரிய பகுதியில் நூலகம் ஒன்றினை அமைத்து, சுற்று வட்டாரக் குழந்தைகளுக்கு படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியும், புத்தகங்களை இரவல் கொடுத்தும் வருகிறாள். அவளுடைய நூலகத்தின் பெயர் ‘பால் புஸ்தகாலயா’ அதைச் சிறப்பாக நிர்வகித்து வரும் இளம் நூலகர்தான் முஸ்கான். எவ்வித பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல் இதைத் தொடங்கிய முஸ்கானின் நூலகம் அப்பகுதியினரின் கவனத்தைப் பெற்று வந்தது.

இந்த 9 வயதுச் சிறுமியின் ஆர்வத்தைப் பார்த்த மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் முஸ்கானுக்கு முறையான நூலகம் அமைக்க 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவளைப் பாராட்டி பரிசாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலைத் அவளுக்குத் தந்துள்ளார் செளஹான். மேலும் அவளை ஊக்கப்படுத்தும்விதமாக புத்தகங்களை பராமரித்து வைக்க விலாசமான அறையொன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். முஸ்கானைப் போன்ற சிறுமிகள் நினைத்தால் இந்தச் சமூகத்தை மாற்றிவிட முடியும். நிச்சயம் அவளைப் போல ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அரசு தரப்பிலிருந்து உதவிகள் கிடைக்கும் என இரண்டு லட்ச ரூபாய் காசோலையை முஸ்கானிடம் ஒப்படைத்த போது செளஹான் கூறினார்.

முதலில் 25 புத்தகங்களுடன்தான் இந்த நூலகத்தைத் தொடங்கினேன். இப்போது அது மெள்ள அதிகரித்து ஆயிரம் புத்தகங்களாகிவிட்டது என்ற தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் முஸ்கான். முஸ்கானின் தந்தை மனோஹர் அஹிர்வார் சமீபத்தில் இறந்துவிட்டார். தந்தையின் மரணத்துக்குப் பின்னர் இந்த நூலகத்தை எப்படி பராமரிக்கப் போகிறோமோ என்று மிகவும் கவலைப்பட்ட முஸ்கானுக்கு கடவுள் ஒரு வழியைக் காண்பித்தார். அதுதான் முதலமைச்சர் நிதி உதவி.

இப்போது முஸ்கானின் பாதையில் எவ்விதத் தடைக்கல்லும் இல்லை. அவள் விருப்பப்படி இன்னும் அதிக புத்தகங்களை சேகரிக்க முடியும். தன்னைச் சுற்றியுள்ள குடிசைப்புறக் குழந்தைகளின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்க உறுதிமொழி எடுத்துள்ளாள். என்னுடைய அப்பா என்னிடம் நல்லா படிக்கணும், பெரிய ஆளா வரணும், பெரிய பெரிய விஷயங்களைச் செய்யணும் என்று சொல்வார். எனக்கு டாக்டருக்கு படிக்க ஆசை’ என்று கூறுகிறார் முஸ்கான்.

முஸ்கானின் நூலகம் தினமும் மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை இயங்குகிறது. 20 லிருந்து 25 குழந்தைகள் பதிவாக தினமும் இந்த நூலகத்துக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் அமைதியாக பாயில் அமர்ந்து புத்தகங்களைப் படிக்கிறார்கள். அங்கு படிக்க முடியாதவர்கள் புத்தகத்தை இரவல் வாங்கிச் சென்று, படித்தபின் திரும்பத் தருகிறார்கள். உண்மையில் புத்தகங்களைப் படிக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள முஸ்கான் சில சமயம் அவர்களிடம் கேள்விகள் கேட்பதுண்டாம். தன்னுடைய நூலக விவகாரங்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் அக்கா நேஹா அஹர்வாரின் உதவியைச் சில சமயம் அவள் பெறுவதுண்டு.

நூலக விபரங்கள், செலவுக் கணக்குகள் என அனைத்தையும் பதிவு செய்தும் வைக்கிறார் இந்தச் சமர்த்து சிறுமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT