சிறப்புக் கட்டுரைகள்

வரலாற்றை மாற்றிக் காட்டிய தினகரன் கடந்து வந்த பாதை! 

தமிழக பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் பெற்றுள்ள இந்த வெற்றி, தமிழக அரசியல்வாதிகளையே

ஆர். வெங்கடேசன்

தமிழக பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் பெற்றுள்ள இந்த வெற்றி, தமிழக அரசியல்வாதிகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மூத்த மகன் டிடிவி தினகரன். திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன்-வனிதாமணி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்த தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவர்களில் சுதாகரன் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்து வந்தார். சசிகலாவின் மற்றொரு மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது மாமன் மகளையே தினகரன் திருமணம் செய்துகொண்டார்.

அதிமுக பொருளாராக இருந்து வந்த தினகரன் 1999-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் கிடைத்தது.  பின்னர் 2004-இல் ஏற்பட்ட மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்ட தினகரன் தோல்வியடைந்தார். தோல்வியடைந்தாலும் மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றம் சென்றார் தினகரன்.

இதனிடையே 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் தினகரனுக்கு அமலாக்கத்துறையால் 31 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.

இப்படி இறங்கு முகங்களை சந்தித்த தினகரனை 2011-இல் சசிகலா, தினகரன் உள்ளிட்டோருடன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா. இதையடுத்து நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்கு வந்தார்.

முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அப்பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சென்று அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் சசிகலாவும், பிறகு எடப்பாடி பழனிசாமியும் மனு அளித்தனர். அப்போது அவர்களுடன் இருந்தவர் தினகரன். 

பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்யுத்த போராட்டம் என மவுன போராட்டம் நடத்தி கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார் சசிகலா.

பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில், பல காட்சிகள் அரங்கேறிய நிலையில், சசிகலா அணியின் சார்பாக பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலையையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து கட்சின் இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைதரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றாத தினகரனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டார். பின்னர் வாக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த தினரன் அதிகாரமாக செயல்பட்டதுடன் முதல்வர் உள்ளிட்டவர்களை கடுமையாக தாக்கி பேசி வந்தார். 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், தர்மயுத்தம் நடத்தி வந்த பன்னீர்செல்வம் தரப்பினரும் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்த கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பன்னீர்செல்வம்-பழனிசாமி தலைமையிலான அணிக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறவித்தது. இதையடுத்து ஆளும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனனும், சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் தினகரன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் இருந்தனர். 59 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், அதிமுக வேட்பாளர், மதுசூதனனுக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோருக்கு இடையே தான் போட்டி நிலவியது.

கடந்த 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்த தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி வேட்பாளரான மதுசூதனனை தோற்கடித்ததுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கட்சியான திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்ட 57 பேரை டெபாசிட் இழக்க செய்து அபார வெற்றியை பெற்றார் தினகரன். 
 
தமிழகத்தில் 1980க்கு பின் ஆர்.கே.நகர் வரை 51 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், ஆளும் கட்சி, 43-இல் வென்றுள்ளது. எதிர் கட்சிகள் 9-இல் மட்டுமே வென்றன. 

கடந்த, 2011-இல் இருந்து நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று வந்தது. முதல் முறையாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது. 

தமிழக தேர்தல் வரலாற்றில், 2006க்கு பின்னர், சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த, 2006 சட்டப்பேரவை தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரன், 4,595 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

11 ஆண்டுகளுக்கு பின்பும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற முதல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலேயே அதிமுகவை சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். 

தமிழகத்தில்,  2004-இல் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து, ஆளும் கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடி வருகின்றனர்.  

2004-இல் மங்களூர் இடைத் தேர்தலில், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை 13 ஆயிரத்து 886 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கணேசன். தற்போது, 13 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஆளும் கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தினகரன் தகர்த்து எறிந்திருக்கிறார்.

1949-இல் அண்ணா முதல் அத்தியாயத்தை தொடங்கினார். பின்னர் 1972-இல் எம்ஜிஆர் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கினார். இன்று ஆர்.கே. நகரில் இருந்து மூன்றாவது அத்தியாயத்தை தினகரன் தொடங்கி உள்ளார். 

எப்போது வித்தியாசமாக இருந்து வரும் தமிழக அரசியல் களத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள், தமிழகத்தில் திராவிட கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது. தேர்தலில் தனியாக நின்று பார்த்தாலும், மண்ணை கவ்விய வேடிக்கைகள் நிகழ்ந்துள்ள நிலையில், சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்து அவர் ஆட்சிக்கு பிரஷர் கொடுப்பாரா?, இரட்டை இலையையும் அதிமுகவையும் பழனிசாமி-பன்னீர்செல்வத்திடம் இருந்து தினகரன் மீட்டெடுப்பாரா? இல்லை, தனி கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT