சென்னை: 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு மைசூர் - மெட்ராஸ் ஒப்பந்தங்கள் செல்லாது என்று கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் கூறியுள்ளார்.
12.07.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பென்ச் முன்பு நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், A.M.கான்வின்கர் முன்பு நடந்த விவாதத்தில் கர்நாடக அரசின் சார்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், ”1892-ஆம் ஆண்டு, 1924 ஆம் ஆண்டு மைசூர்-மெட்ராஸ் மாகாணங்களுக்கிடயே நடந்த ஒப்பந்தங்கள் 'பேர அதிகாரம்' மற்றும் மனசாட்சிக்கு விரோதமாக இருப்பதுடன், இந்திய அரசியலமைப்பின் பிறப்பிற்கு பின் அவை செயலிழந்துவிட்டதாக" கூறிப்பிட்டார்.
1892- ஆம் ஆண்டு மைசூர்-மெட்ராஸ் ஒப்பந்தம் - பின்னணி
கி.பி.1807-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இந்தப் பேச்சு வார்த்தைகள் சுமார் 85 ஆண்டுகாலம் நீடித்தது.
கி.பி.1892-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. 1866 இல் மைசூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே.சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தோடு, குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்த, விரிவுப்படுத்த ஆற்றுப் பாசனத்தை அதிகப்படுத்த பெருந்திட்டம் ஒன்றைத் தயாரித்தார். வறட்சியும் பஞ்சமும் இல்லாமல் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். 1872-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. லண்டனும் ஏற்றுக்கொண்டது. இதற்காக புதியதாக பாசனத்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் 1877-78ஆம் வருடங்களில் கடும்பஞ்சம் வந்ததால் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
மைசூர் நிர்வாகப் பொறுப்பு மீண்டும் மகாராஜாவிடம் 1881 இல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் முக்கிய அதிகாரிகள் வெள்ளைக்காரர்களே. சாங்கியின் பாசனத் திட்டங்கள் முழுவீச்சில் தொடங்கப்பட்டது.இந்த மாற்றங்கள் சென்னை அரசுக்கு காவிரி நீர் வரத்து குறையுமே என்ற கவலையை உண்டாக்கியது. ஏற்கெனவே இதுகுறித்து 1870-ஆம் ஆண்டு வாக்கில் மெட்ராஸ் அரசு மைசூர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனை தொடர்ந்தும் பல கடிதப் போக்குவரத்துகள்.
1890 ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் சென்னை அதிகாரிகளுக்கும் மைசூர் அதிகாரிகளுக்கும் காவிரி நீர் குறித்து கூட்டம் நடந்தது. மைசூர் தரப்பில் பிரிட்டீஷ் ஆட்சிப் பேராளர் ஆலிவர் செயிண்ட் ஜான், திவான் கே.சேஷாத்திரி அய்யர் மற்றும் வெள்ளைக்காரத் தலைமைப் பொறியாளர் கர்னல்.சி.பவென் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னைத் தரப்பில் ஆளுநர் அவை உறுப்பினர் எச்.சி.ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பாசனப் பொறியாளர் ஜி.டி.வால்ச் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மைசூர் அரசு தனது தேவைகளுக்கேற்ப நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த அதற்கு நியாயமான சுதந்திரங்களை வழங்குவது மற்றும் சென்னை அரசாங்க நலன்களுக்கு ஊனம் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பது என்ற இவ்விரு நோக்கத்திற்காகத்தான் கூட்டம் நடந்தது. மாற்றி மாற்றி முன்மொழிவுகள் வைக்கப்பட்டன.
1891-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இரண்டாவது கூட்டத்திற்கு பின் விதிமுறைகள் அடங்கிய ஒரு தொகுப்பினை மைசூர் முன் மொழிந்தது. சில திருத்தங்களும் விளக்கங்களும் பெற்ற பின் 1892 பிப்ரவரியில் சென்னை அவ்விதிகளை ஏற்றுக்கொண்டது. அவ்விதிகள்தான் “மைசூர் அரசின் பாசனப் பணிகள் ”சென்னை-மைசூர் ஒப்பந்தம்-1892“ என்று பெயர் பெற்றன.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த 2007-ல் வெளியானது. அதில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி என 12 மாதங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு மைசூர் - மெட்ராஸ் ஒப்பந்தம் : பின்னணி
1910 - ஆம் ஆண்டின், ஒரு காலக்கட்டத்தில் மைசூர் அரசு, கண்ணம்பாடியில் காவிரியில் ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்டுவதென்ற திட்டத்தைத் தயாரித்தது என்றும், அதற்கான அனுமதியை மேலே சொன்ன 1892-ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி, சென்னை அரசிடமிருந்து கோரியது என்றும் தெரிகிறது. இந்தத் திட்டம் சம்பந்தமாக, இரு மாநிலங்களுக்கிடையே கருத்து வேற்றுமையும், சச்சரவும் எழுந்ததால், பிரச்சினை 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி மத்தியஸ்த்திற்கு விடப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சர் ஹெச்.டி. கிரிஃபின் (H.D.Griffin); மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு தொழில்நுட்ப அடிப்படையில் உதவி செய்ய இந்திய அரசின் நீர்ப்பாசன தலைமை ஆய்வாளர் எம். நெதர்ஹோல் (M.Netherhole) என்பவரும் நியமிக்கப்பட்டார். 16.7.1913 அன்று விசாரணைகள் தொடங்கி 12.5.1914 அன்று முடிவுற்றன. வழங்கப்பட்ட தீர்ப்பு, சென்னை மாநிலத்திற்கு ஒப்புக் கொள்ளும் படியாக இல்லை. எனவே, ஆட்செபணைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டன. மத்திய அரசு மத்தியஸ்தர் அளித்த தீர்ப்பில் தலையிட கருதவில்லை. எனவே சென்னை மாநிலத்தில் இப்போதிருக்கும் நீர்ப்பாசனம் பெறும் நிலப்பரப்பிற்கு ஏற்பட இருக்கும் கடும் சேதத்தைக் கருத்திற் கொண்டு, இந்த விஷயத்தில் குறுக்கிட வேண்டும் என்று கோரி மெட்ராஸ் அரசு ராஜ்ய செயலாளரிடம் 1916 ஜீலையில் ஓர் மேல் முறையீடு தாக்கல் செய்தது. மெட்ராஸ் அரசு ராஜ்ய செயலாளரிடம் மேல் முறையீடு தாக்கல் செய்ததை எதிர்த்து அப்போதைய மைசூர் அரசு ஆட்செபித்தது. ஆனால் ராஜ்ய செயலாளர் 1919 டிசம்பரில் மத்தியஸ்தர் வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக உணர்ந்து, தீர்ப்பில் குறுக்கிடுவதற்கான வழக்கிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார். நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினை சம்பந்தமாக வெவ்வேறு மாற்று வழிகள் மைசூர் அரசிடம் முன்வைக்கப்பட்டன.
விதிகளில் பின்வருமாறு திருத்தம் செய்யலாம்:
அ) விதிமுறைகளை இரு தரப்பினரின் சம்மந்தத்துடம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கொரு முறை மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
ஆ) தற்காலிக கால முடிவில் திருத்தம் செய்யப்பட்ட விதிகளை மீண்டும் உறுதி செய்து கொள்ளலாம்.
இ) இரு தரப்பினரும் அ) மற்றும் ஆ) உட்பிரிவுகளுக்குட்பட்டு எந்த திருத்தமோ, மீறும் திருத்தம் செய்யக் கூடாது என்றோ, பழைய விதிகளுக்கு திரும்புவதையோ தடுக்கக் கூடாது.
ஹெல்சிங்கி விதிகள் (சர்வதேச தண்ணீர் விதிகள்)
“ஹெல்சிங்கி விதிகள்(Helsinki Rules) ஆகும். மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் குறித்த பூசல்களைத் தீர்ப்பது பற்றிப் பேசுபவர் யாராக இருந்தாலும், அவர்கள் “ஹெல்சிங்கி விதிகள்” பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இந்த முயற்சிகளில் மிகவும் முழுமையானதும், நன்கறியப்பட்டுள்ளதும் ஹெல்சிங்கி விதிகளில் அடங்கியுள்து. ஃபின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி நகரில் 1966-இல் நடந்த பன்னாட்டுச் சட்டச் சங்கத்தின் (International Law Association) 52-ஆவது மாநாட்டில், பல ஆண்டுகள் விவாதத்திற்குப் பிறகு, இந்த விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் பல ஆண்டுகள் கூடி ஆலோசித்து, விரிவாக விவாதங்கள் நடத்தி, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அதுதான் “ஹெல்சிங்கி விதிகள்” என்ற கோட்பாடாக உருப்பெற்றது.
ஹெல்சிங்கி விதிகளுக்குப் பன்னாட்டுச் சட்டம் என்ற தகுதி கிடைக்கவில்லை. என்றாலும், இவை பன்னாட்டுச் சட்டத்திற்கான ஓர் ஆதாரம் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஏனென்றால், பன்னாட்டு நதிகள் சட்டத்தில் ஈடிணையற்ற வல்லுநர்கள் எனக் கருதப்படும் வித்தகர்களின் பத்தாண்டுகளுக்கும் அதிகமான அரும்பெரும் முயற்சியினால் இவை உருவானவையாகும். புகழ்பெற்ற வல்லுநர்களின் குழு ஒன்று பல ஆண்டுகள் கூடி விவாதித்தது. இறுதியில் பன்னாட்டுச் சட்டத் துறையில் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தத் துறையில் உயர்ந்த தகுதி வாய்ந்த, உலகப் புகழ்பெற்ற நீதியியலறிஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய ஒரு வடிவமாக இது அமைந்தது.
ஹெல்சிங்கி விதிகள் 37 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில், 4, 5 ஆகிய பிரிவுகள், பன்னாட்டு வடி நில நீரை நியாயமாகப் பயன்படுத்துதல் என்ற தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. ஹெல்சிங்கி விதிகளின் அணுகுமுறையானது, “பூசல்களுக்கான அமைதித்தீர்வு ( Pacific Settlement of Disputes )” பற்றிய ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் 33-ஆம் பிரிவினைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவிலுள்ள, 18 பெரிய ஆற்று வடிநிலப் பகுதிகளில் 16 பகுதிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கியதாக உள்ளன. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள இரு சிறிய வடிநிலங்கள் மட்டுமே விதிவிலக்கு.
தரப்பினர்களுக்கிடையில் தீர்க்கப்படாமல், மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயங்களின் தீர்ப்புக்கு அனுப்பப்பட்ட பூசல்கள் நர்மதா, கிருக்ஷ்ணா, கோதாவரி, ரவி, பியாஸ், காவிரி ஆகியவை தொடர்பானவை. அரசமைப்பு வகைமுறைகள் பல உள்ளன. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்) வரும்வரையில், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நீங்கலாக, நீர்ப்பாசனப் பணிமானங்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவை இங்கிலாந்திலுள்ள இந்திய அமைச்சரின் ஒப்பளிப்புக்கு உட்பட்டவையாக இருந்தன.
மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் கோட்பாடுகள்
(LEGAL DOCTRINES RELATING TO INTER-STATE WATERS)
கரைநில உரிமைகள் கோட்பாடுகள்(doctrine of riparian rights)
இக் கோட்பாடு ஆற்றின் நீரை எல்லையோர உரிமையாளர்கள் சம அளவில் பயன்படுத்தலாம். ஒருவர் உரிமையில் ஒருவர் தலையிடும் வரை இக்கோட்பாடு பெருமளவில் மாநிலங்களுக்கிடையியேயான ஆறுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.
பங்கீட்டுமுறை கோட்பாடு(doctrine of prior apportionment)
இது அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பல வழகுகளில் பின்பற்றப்பட்டது. இதில் மூத்தோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
பிரதேச இறையாண்மை கோட்பாடு(doctrine of territorial sovereignty /Harmon Doctrine)
1896-இல் அமெரிக்க தலைமை வழக்கறிஞர் ஹார்மன் மெக்ஸிகோவில் ரியோ கிராண்டி ஆற்றிற்கு இந்த கோட்பாட்டினை குறிப்பிட்டார். இதன்படி மெக்ஸிகோவில் இந்த ஆறு அதிகப்படியாக ஓடுவதால் அதை முழுதும் பயன்படுத்தும் உரிமை அமெரிக்காவை விட அதிகம் என்றார். ஆனாலும் இது அமெரிக்க இறையாண்மைக்கு பொருந்தவில்லை.
சமூக நல கோட்பாடு(Doctrine of community of interest)
பல மாகாணங்களில் ஓடும் ஆற்று நீரை அதிகப்படியாக பயன்படுத்த வேண்டும் என்பது இக்கோட்பாடாகும். இதை மென்மையாக நடைமுறைபடுத்த ஒருமித்த ஒப்பந்தம் இருக்க வேண்டும். இந்தியாவில் கோசி திட்டத்தில்(Kosi Project) இந்தியா நேபாளத்திற்கிடையே இது நடைமுறையில் உள்ளது.
சரிசம பங்கீடு கோட்பாடு(doctrine equitable apportionment)
இக்கோட்பாடு அமெரிக்காவில் உருவானது.. பின்வரும் உச்சநீதிமன்ற வழக்குகளில் இது விளக்கப்பட்டுள்ளது.
(i) Connecticut Vs. Massachusetts, (1931) 282 US 670.
(ii) New Jersey Vs. New York, (1931) 283 US 336.
(iii) Nebraska Vs. Wyoming, (1945) 332 US 54.
தண்ணீர் தகராறுகள் சம்மந்தமான சட்ட வகையங்கள்
இந்திய அரசுச் சட்டம், 1919
இச்சட்டத்தில் மாநிலங்களில் இரட்டை ஆட்சி நிறுவப்பட்டது. பாசனம் மாநிலங்களின் இனமாக மாற்றப்பட்டது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் சம்மந்தமான திட்டங்களுக்கு மத்திய அரசின் முன்னனுமதி பெற வேண்டும். மேலும் 10 லட்சத்திற்குற்பட்ட திட்டங்களை மாகாணங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு காலனி நாடுகளின் நிர்வாக பொறுப்பை வகித்த அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும்
இந்திய அரசுச் சட்டம், 1919
பாசனத்தை மாகாணங்களின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு விட்டது. சட்டத்தின் பிரிவு 130-133 வரை இரு மாநிலங்களுக்கிடையேயான தகராறுகள் பற்றி விவரிக்கின்றது. மாநிலத்தில் தண்ணீர் உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது கவர்னர் ஜெனரலிடம் புகார் அளிக்க வழிவகை செய்கிறது.
கவர்னர் ஜெனரல் புகாரின் பேரில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையில் கவர்னர் ஜெனெரல் முடிவெடுப்பார். கவர்னர் ஜெனரல் ஆணைக்கு அனைத்து தரப்பினர்களும் கட்டுப்பட்டவர்கள். மாகாண கவர்னர்கள், கவர்னர் ஜெனரலின் உத்தவின் பேரில் பாதிக்கப்பட்டால், நேரிடையாக இங்கிலாந்து அரசரிடம் முறையிடலாம். கவர்னர் அவ்வாறு புகார் அளித்தபின் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.
மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறுகள் சம்மந்தமான அரசியலமைப்புச் சட்ட வகையங்கள்
தண்ணீர் சம்பந்தமான தகராறுகள்
சரத்து 262. மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் சம்மந்தமான தகராறுகளில் தீர்ப்புகள்;
மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் குறித்த தண்ணீரைக் கட்டுப்படுத்துவது, பகிர்ந்து கொள்வது மற்றும் பயன்படுத்துவது சம்மந்தப்பட்ட முறையீடு அல்லது தகராறு சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் யாது கூறப்பட்டிருப்பினும், உச்சநீதிமன்றம் அல்லது வேறு எந்த நீதிமன்றமும், கூறு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய தகராறு அல்லது முறையீடு பற்றித் தமது அதிகார வரம்பைச் செயல்படுத்தக் கூடாது என்பது பற்றிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்.
இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறுகள் சட்டம், 1956
அரசியலமைப்புச் சட்டம் சரத்து 262 இல் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இயற்றப்பட்டது.
ஒரு மாநிலத்தில் மேல் தண்ணீர் தகராறில் இருக்கும் மாநிலம், தீர்ப்பாயத்தினை அமைக்க மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியாது என்று நினைக்கும் பட்சத்தில் தீர்ப்பாயத்திற்கு மாற்றிடலாம்.
தீர்ப்பாயமானது தலைவர், மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டிருக்கும். இவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாவர். இவர்களை தலைமை நீதிபதி நியமிப்பார்.
தீர்ப்பாய நடவடிக்கைகளில் உதவிட தீர்ப்பு உதவியாளர்களை(Assessor) நியமித்திடலாம்.
தீர்ப்பாயம் விசயத்தை விசாரித்து, கடைசி அறிக்கையை தயாரித்து இறுதி முடிவெடுக்கும். முடிவு வெளியிட்டபின், அது அனைத்து தரப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.
தீர்ப்பாயம் சம்மந்தப்பட்ட தகராறுகளில் உச்சநீதிமன்றமோ, பிற நீதிமன்றங்களோ தலையிட அதிகாரமில்லை.
மத்திய அரசு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயலாக்க அதற்கான திட்டத்தினை உருவாக்கலாம்.
ஆறுகளின் வாரியச் சட்டம், 1956
இச்சட்டம் மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் வளர்ச்சிக்கான ஒழுங்கு செய்ய நெறியுறுத்துகிறது.
வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே ஆறுகளுக்கு வெவ்வேறு வாரியங்களை நியமித்திடலாம்.
வாரியங்களின் பணிகளை பிரிவு. 13 விவரமாக கூறுகிறது.
வாரியமானது தலைவர்கள் மற்றும் பாசனம், வடிகால், நீர்மின், வெள்ளத்தடுப்பு, நீர்ப்போக்குவரத்து, மண்ணரிப்பு , மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
வாரியத்தின் பணிகள் ஆலோசனையே தவிர நீதிவழங்குபவை அல்ல.
பிரிவு 14(3) இன் படி ஒப்பந்தங்களை பாதுகாக்கவும், அரசுகளை ஆலோசிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.
பிரிவு 15 இன் படி வாரியம் திட்டங்களை உருவாக்கவும், முடிவு செய்யவும் அதிகாரம் படைத்துள்ளது. பிரிவு 15(4) இன் படி திட்டங்கள் கட்டாயமாக்கப்படவில்லை.
பிரிவு 15(5) மற்றும் 15(6) இல் வாரியமானது திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், மத்திய அரசின் உதவியை அதற்காக பெறவும் அதிகாரம் பெற்றுள்ளது.
நடுவர் மன்றங்கள்
நர்மதை நடுவர் மன்றம்
1963 ஆம் ஆண்டு முதல் நர்மதை விவகாரம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கிடையே இருப்பது. 1968-ஆம் ஆண்டில் குஜராத் அரசு மத்திய அரசிடம் வேண்டுகோளை வைத்தது. அதன்படி நடுவர் மன்றம்1969-இல் அமைக்கப்பட்டது.
கிருஷ்ணா நடுவர் மன்றம்
1946 ஆம் ஆண்டு முதல் ஆந்திரபிரதேசம், கர்நாடகம், மகாராஷ்ட்ரம், மத்திய பிரதேசம், ஒரிசா மாநிலங்களுக்கிடையே இருப்பது. 1962-ஆம் ஆண்டில் ஆந்திரபிரதேச அரசு மத்திய அரசிடம் வேண்டுகோளை வைத்தது. அதன்படி நடுவர் மன்றம்1973-இல் அமைக்கப்பட்டது.
கோதாவரி நடுவர் மன்றம்
ஆந்திரபிரதேசம், கர்நாடகம், மகாராஷ்ட்ரம், மத்திய பிரதேசம், ஒரிசா மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினை ஆகும். 1962-ஆம் ஆண்டில் ஆந்திரபிரதேசம் மத்திய அரசிடம் வேண்டுகோளை வைத்தது. அதன்படி நடுவர் மன்றம்1979-இல் அமைக்கப்பட்டது.
ரவி - பியாஸ் நடுவர் மன்றம்
பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினை ஆகும். அதன்படி நடுவர் மன்றம் 1987-இல் அமைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம்
1990-இல் நிறுவப்பட்டு 17 ஆண்டுகள் பணியாற்றி 2007-இல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
நைல்நதி நீர்ப்பகிர்வு
1924ஆம் ஆண்டு செய்யப்பட்ட காவிரி ஒப்பந்தம் உலக அனுபவங்களைக் கணக்கிலெடுத்தே செய்யப்பட்டது. காவிரிச் சிக்கல் பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்ட அதே காலத்தில், நைல் ஆற்று நீர் உரிமைச் சிக்கல் எகிப்துக்கும் சூடானுக்கும் இடையே பேசப்பட்டு உடன்பாடு காணப்பட்டது.
நைல் நதி ஆற்றின் நன்கொடை என்று எகிப்தைச் சொல்கிறார்கள். ஆனால் நைலின் கீழ்ப்படுகை நாடான எகிப்தில் ஒரு துணை ஆறு (Tributory) கூட நைலுக்குக் கிடையாது. அது உற்பத்தியாகும் சூடான், எத்தியோப்பியா நாடுகளில்தான் அதற்குத் துணை ஆறுகள் உண்டு.
பிரித்தானியக் காலனியாக எகிப்து இருந்தது போலவே, சூடானின் ஒரு பகுதியும் அதன் காலனியாக இருந்தது. இன்னொரு பகுதி இத்தாலியக் காலனியாக இருந்தது.
நைல்நீர்ப்பகிர்வு தொடர்பாக எகிப்துக்கும் சூடானுக்கும் சிக்கல் வந்த போது 1914, 1919, 1925, 1929 ஆகிய ஆண்டுகளில் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்தன. இறுதியில் 1929இல் ஒப்பந்தம் ஏற்பட்டது.
கீழ்ப்படுகை நாடான எகிப்துக்குத் தண்ணீர் கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எகிப்துக்கு வரும் நீரின் அளவு குறையக் கூடிய வகையிலோ அல்லது வழக்கமான பருவமழைக்காலத்தில் வரவேண்டிய தண்ணீர் காலம் மாறி வரும் வகையிலோ, சூடான் நைலில் அணைகள் கட்டக்கூடாது என்பது ஒப்பந்தத்தின் சாரம்.
சூடான் விடுதலை பெற்ற பிறகு 1955-இல் இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்ப்புக் கிளப்பினாலும் நைல் ஆற்றில் எகிப்துக்குள்ள உரிமையை மறுக்காமல் அங்கீகரித்தது.
கர்நாடகமோ, 1924 ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாகக் கைவிட்டதுடன், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறது.
கர்நாடகம் கடைப்பிடிக்கும் ஹார்மன் கோட்பாடு
19-ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் ஆற்றுநீர்ப்பகிர்வுத் தகராறுகள் எழுந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே ரியோ கிராண்டி (Rio Grande) ஆறு தொடர்பாகச் சிக்கல் எற்பட்டது. இச்சிக்கலைத் தீர்க்க 1895ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் தலைமை வழக்கறிஞர் (Attorney General) ஹார்மன் என்பவர் ஆற்றுநீர்ப் பகிர்வில், ஆட்சி எல்லை இறையாண்மை (Territorial Sovernity) என்ற கோட்பாட்டை முன் வைத்தார். ஒரு நாடு தனது எல்லையில் ஓடும் ஆற்றை அதன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் இறையாண்மை (சுதந்திர உரிமை) பெற்றிருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். பாசனம் பெறும் மற்ற நாடுகளைப் பற்றிக் கவலைபட வேண்டியதில்லை என்றும் கூறினார். ரியோ கிராண்டி ஆறு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உற்பத்தியாகி, மெக்சிகோ வழியாகப் பாய்வதால் இந்தக் கோட்பாட்டை அமெரிக்கர்கள் வைத்தார்கள்.
ஆனால் கொலம்பியா ஆறு தொடர்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சிக்கல் ஏற்பட்ட போது, அமெரிக்கா ஹார்மோன் கோட்பாட்டை முன்வைக்கவில்லை. காரணம், கொலம்பிய ஆறு கனடாவில் உற்பத்தியாகி அமெரிக்காவுக்கு வருகிறது.
கர்நாடகம், தனது விருப்பப்படி காவிரி நீரைப் பயன்படுத்தியது போக மிச்சமிருந்தால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தருகிறோம் என்கிறது.
ஹார்மன் கோட்பாட்டை உலக நாடுகள் நூற்றுக்கு நூறு மறுதலித்து விட்டன. இப்பொழுது ஹெல்சிங்கி விதிகளைத் தான் உலகம் பின்பற்றுகிறது. அதன்படி, தமிழகத்திற்குக் காவிரியில் முன்னுரிமை உண்டு.
ஃபாலி நார்மன் விவாதம்
சர்வதேச தண்ணீர் கோட்பாடுகள் மற்றும் 1807-ஆம் ஆண்டு தொடங்கி பேச்சு வார்த்தை பல கருதாக்கங்களுக்கிடையே ஏற்பட்டது தான் பின்வரும் ஒப்பந்தகளாகும்:
1. மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1892
2. மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924
3. மெட்ராஸ்-மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924 -இணைப்பு
4. மெட்ராஸ் - மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1929
5. தமிழ்நாடு - மைசூர் மாநில அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1972
இவ்வாறு சட்ட வழிகளில் செல்லும் காவிரி தண்ணீர் தகராறில் 210 ஆண்டு கால சட்ட பதிவுகளைக் கொண்டது. 1950 ஆண்டுகால சட்டத்தை படித்து இதற்கு தீர்வு சொல்ல முடியாது.
அரசியலமைப்புச் சட்டம் பிறந்ததனால், 1892, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தகள் இறந்தது என்றால், மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881, இந்திய தண்டனைச் சட்டம்-1860, பதிவு சட்டம் 1908 போன்ற 1950 ஆம் ஆண்டிற்கு முன் இயற்றப்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் சரத்து. 395 இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட பிறகு இந்திய விடுதலைச் சட்டம், இந்திய அரசுச் சட்டம், 1935, பிரிவு கவுன்சில் அதிகார வரம்புச் சட்டம், 1949 மட்டுமே நீக்கப்பட்டு மற்ற சட்டங்கள் சரத்து 372-இன் படி செயலாக்கத்தில் உள்ளது. அதன் படி இவ்வொப்பந்தங்களும் நடைமுறையில் செல்லும்.
இருமாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறுகள் சட்டம், 1956 பிரிவு. 11 இன் படி தண்ணீர் தகராறுகளில் உச்சநீதிமன்றமோ, பிற நீதிமன்றங்களோ தலையிட அதிகாரமில்லை என குறிப்பிட்டும் நடக்கும் நிகழ்ச்சிகள் சட்டபூர்வமானதா என்பது கேள்விக் குறி.
C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு - 9840052475
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.