முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

மக்கள் போராட்டம் மட்டுமே வெற்றிபெறும்

ஐபிஎல் போட்டி நேற்று வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்தது. ‘நம்ம சென்னை டீம் ஜெயிச்சுடுச்சுப்பா' என்று பெருமைப்பட்டால், அது போலியான பெருமை.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:43 PM
பகிர்:

ஐபிஎல் போட்டி நேற்று வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்தது. ‘நம்ம சென்னை டீம் ஜெயிச்சுடுச்சுப்பா' என்று பெருமைப்பட்டால், அது போலியான பெருமை. காரணம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நேற்றைய அணியில் இல்லை. ‘சென்னை' என்ற பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தவிர தமிழகத்திற்கும் இந்த அணிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் போராட்டம், மறியல் என்று களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பத்து பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் காலணிகளை வீசியதாக பதினோறு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தவிர ஐநூறுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையின் போது மஞ்சள் நிறத்தில் உடையணிந்து சாலையில் சென்றுகொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கழற்றப்படும்வரை அடித்து உதைக்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல், அரங்கத்தில் நுழைவதற்காக ரசிகர்கள் வரிசையில் நிற்கும் போது அவர்களுக்கு அருகில் சென்ற போராட்டக்காரர்கள் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்ததையும் பார்க்க முடிந்தது. காதில் நுழைந்து ரத்தம் கசியச் செய்யும் ஏவுகணைகள் அவை. வரிசையில் நின்றிருந்த பெண் ரசிகைகள் அவமானத்தால் நெளிவதை பார்க்க முடிந்தது.

போராட்டக்காரர்களே! ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் முன்பாக உங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தால், ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதை தவிர்த்திருப்பார்கள் அல்லவா! உங்களுக்கு தோன்றும் போது போராட்டத்தை அறிவிப்பதும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சரியா? ஐபிஎல் போட்டி நடக்கட்டும், டிக்கெட் வாங்கியவர்கள் அதை புறக்கணிக்கட்டும். அதுதான் உண்மையான வெற்றி. உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை. அதைவிடுத்து, வன்முறையால் போட்டியை நிறுத்துவது ஜனநாயகமல்ல. ஐபிஎல் போட்டிகள் மூலமாக உலக மக்களுக்கு நமது பிரச்னையை உணர்த்தலாம். ஆனால் அதுவே காவிரியின் மதகுகளை திறக்கும் சாவியல்ல.

அரசியல் கட்சிகள் ஒருபுறம் வன்முறையை அரங்கேற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், சினிமாத்துறையைச் சார்ந்த இயக்குனர்கள் அண்ணா சாலையில் ஒன்றுகூடி, மத்திய அரசுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கல்லெறி சம்பவம் நடைபெற்றது. காவல்துறை பலத்தை காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

‘நாங்கள் துக்கத்தில், துயரத்தில் இருக்கும்போது ஐபிஎல் கேளிக்கை ஆட்டம் தேவையா?' என்று முழங்கினார் இயக்குனர் பாரதிராஜா. மிஸ்டர் பாரதிராஜா அவர்களே! இதே கேள்வியை உங்களைப் பார்த்து கேட்கிறோம். நீங்கள் சார்ந்த துறையும் கேளிக்கை தொடர்புடையதுதானே! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கேளிக்கையான சினிமாத்துறை சார்ந்த அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடியுமா? திரையரங்குகளை மூடிவைக்க முடியுமா?


பாரதிராஜா அவர்களே! ஜல்லிக்கட்டு போராட்டமும் நேற்று நீங்கள் நடத்திக்காட்டிய வன்முறை போராட்டமும் ஒன்றல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அரசியல், ஜாதி, மத சாயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், நீங்கள் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிராக பேசிவருவதும், வன்முறை ததும்பிய கருத்துக்களை வெளியிடுவதும் நீங்கள் ஒரு மதத்திற்கு எதிரானவர் என்பதையே காட்டுகிறது. ஆகையால் இந்தப் போராட்டத்தை நீங்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்கமுடியாது.

அரசியல் தலைவர்களே! மக்களை உசுப்பேற்றி அதில் குளிர்காய நினைக்காதீர்கள். போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். உங்களது உணர்ச்சிகரமான பேச்சு, அவர்களுக்கு வன்முறையின் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது. இன்று திண்டிவனத்தில் பாமக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் ஒருவர் ரயில் இன்ஜின் மீது ஏறியபோது மின்சாரம் தாக்கியதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். இதற்கு யார் பொறுப்பு? அடுத்த தலைமுறையினர் மீது விஷத்தை விதைப்பதை இனியாவது தலைவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

காவிரிக்காக போராடுவது நம்முடைய கடமை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எத்தகைய போராட்டங்கள் வெற்றிபெறும், எது பலனளிக்காது என்பதை விளக்க வருகிறது ஒரு குட்டிக்கதை.

ஒரு நாடு. அந்த நாட்டில் நீண்ட நாட்களாக மழையில்லை. பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களில் ஒரு பிரிவினர் அரசை எதிர்த்து போராடினர். அரசர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பதிலாக, கஷ்டத்தில் இருக்கும் மக்களை மகிழ்விப்பதற்காக ஒரு நாடக குழுவை அனுப்பினார். அவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று நாடகங்களை நடத்தினர். அரசரின் இந்த செயல் போராட்டக்காரர்களை மேலும் வெறுப்பேற்றியது. நாடகம் நடக்கும் அரங்கைச் சுற்றி போராட்டங்களை நடத்தினர். கோஷங்களை எழுப்பினர்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தலைமைக் காவலன் அரண்மனையை நோக்கி ஓடினான். தூங்கிக்கொண்டிருந்த அரசரை எழுப்பினான்.

‘அரசே! நாட்டில் வன்முறை அதிகமாகிவிட்டது. ‘பஞ்சமான நாட்டில் கேளிக்கை எதற்கு?' என்ற கோஷத்தோடு நாடக அரங்கை முற்றுகையிட்டு மக்கள் போராட்டங்கள் செய்கின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும்?' என்று பவ்யமாக கேட்டான் தலைமைக் காவலன்.

‘போராட்டங்கள் வெளியே நடக்கிறது. உள்ளே நாடகம் நடக்கிறதா?' என்று கேட்டார் அரசர்.

‘ஆம் அரசே! நாடகம் உள்ளே நடக்கிறது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்', என்றான் தலைமைக் காவலன்.

‘அப்படின்னா சரி! காலையில் சந்திப்போம். நான் தூக்கத்தை தொடர்கிறேன்', என்றார் அரசர்.

‘என்ன அரசே இப்படி சொல்கிறீர்களே! போராட்டக்காரர்களை எப்படி அடக்குவது?' என்று கேட்டான் தலைமைக் காவலன்.

‘அவர்களை அடக்க வேண்டாம். போராடுவது அவர்களது உரிமை. அவர்கள் அதைச் செய்யட்டும். நீ நாடகம் சிறப்பாக நடப்பதற்கு தேவையான காவல் பணிகளை செய். நாடகம் பார்ப்பவர்களுக்கும், நாடக குழுவுக்கும் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்', என்றார் அரசர்.

‘எனக்கு எதுவுமே புரியவில்லை அரசே!' என்றான் தலைமைக் காவலன்..

“அட முட்டாளே! இந்த போராட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, நாடக அரங்கு நிரம்பி வழிகிறது. இது தற்போது நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அப்படியே அவர்களுக்கு அக்கறை இருந்தாலும், அதற்காக, தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் அது உணர்த்துகிறது”.

“இரண்டாவதாக, எந்த ஒரு போராட்டமும் அதைத் தொடர்ந்து வன்முறையும் ஏற்படுமானால் அதுதான் பிரச்னையின் உச்ச நிலை. அதாவது இனி பேச்சுவார்த்தை மூலமோ, அமைதி வழியிலோ பிரச்னைக்கு தீர்வுகாண முடியாது என்ற நிலை. அந்த நிலை தானாக உருவாகும். அதற்கு யாருடைய உந்துதலும் தேவைப்படாது. பெரிய புரட்சிகள் வெடிப்பது இந்த நிலையை எட்டியவுடன் தான். அப்படியில்லாமல், யாராவது செயற்கையாக இத்தகைய நிலையை ஏற்படுத்த நினைத்தால், அது தோன்றிய நிலையிலேயே அழிந்து போகும். ஆகையால், தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் போராட்டங்கள் செயற்கையான புரட்சி. இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை”.

“பசிக்கின்ற நேரத்தில் அழுவதும், பசி அடங்கிய பின் பசியை மறப்பதும் பொறுப்பான குடிமக்களின் செயலல்ல. ‘பசியானது நிரந்தரமாக தீர்க்கப்படுவதில்லை. அடுத்த வேளைக்கு ஒத்திப் போடப்பட்டிருக்கிறது'. இதைத் தெரிந்து கொள்ள முடியாத குடிமக்களின் குறைகள் நிரந்தரமாக தீர்க்கப்படுவதில்லை. இதை புரிந்தவன் ஆட்சி செய்கிறான். புரியாதவன் அடுத்த வேளை போராட்டத்துக்கு தன்னை தயார் செய்து கொள்கிறான். ஒருபுறம் போராட்டங்கள், மறுபுறம் நாடகம் பார்ப்பவர்கள். இந்த இரண்டு பேருக்குமிடையே உள்ள இடைவெளியில் நாம் நிம்மதியாக பயணிக்கலாம்', என்றார் அரசர்.

‘அரசே! நடப்பது உண்மையான புரட்சியா? செயற்கை புரட்சியா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?', என்று கேட்டான் தலைமைக் காவலன்.

‘பலத்த காவலுக்கு மத்தியில், என்றைக்கு நாடகத்தை பார்ப்பதற்கு அரங்கில் மக்கள் யாரும் இல்லாத நிலை உருவாகிறதோ, அன்று நாம் விழித்துக் கொண்டால் போதும்', என்று சொல்லிவிட்டு உறக்கத்தை தொடர்ந்தார்.

உண்மையை உணராத மக்களின் கண்கள் விழித்துக் கொண்டிருந்தாலும், உணர்வுகள் தூங்குகின்றன. உண்மையை உணர்ந்த அரசனின் கண்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும், உணர்வுகள் விழித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷயம் இதுதான். “மக்கள் தாமாக வந்து போராட்டத்துக்கு உயிர் தரவேண்டும். அப்படியில்லாமல், அடுத்தவர்களை உசுப்பேற்றுவது, கட்டாயப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட வைப்பது, போராட்டம் வெற்றி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவை நினைத்த பலனைத் தராது. மாறாக அது மக்களையும் சேர்த்து தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும்”,

அடுத்தவர்களை உசுப்பேற்றும் அரசியல் தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். யார் அதிகமாக போராட்டம் செய்கிறார்களோ, யார் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்கே நாம் ஓட்டுப் போடுவோம் என்று யாரும் நினைப்பதில்லை. தேவையில்லாத போராட்ட மாயைக்குள் மக்களையும் இழுத்துச் செல்லாதீர்கள்.

கூச்சலிடுவது, கெட்ட வார்த்தைகளை பேசுவது, பஸ், ரயில்களை மறிப்பது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற காலாவதியான, கூர்மழுங்கிப்போன ஆயுதங்களை தூக்கியெறியுங்கள். பிரச்னைகளையும், போராடுபவர்களை பற்றியும் மக்கள் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம். இது தொடர்பாக எத்தகைய போராட்டங்களை வேண்டுமானாலும் நடத்துங்கள். ஆனால், அது மக்கள் தாமாக முன்வந்து நடத்தும் போராட்டமாக இருக்கட்டும். அப்படியில்லாமல், போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதையும், தன்னை போராளியாக சித்தரித்துக் காட்டுவதிலும் முனைப்பு காட்டினால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். உங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நல்ல தீர்வும் கிடைக்காது. மக்கள் போராட்டம் மட்டுமே வெற்றிபெறும்.

இத்தனை பிரச்னை, குழப்பங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் போராட்டங்கள் தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே போராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்', என்று ரஜினிகாந்த் சொல்லியிருப்பது, இந்த குழப்பமான நாட்களில் சற்று ஆறுதலான விஷயம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.