சிறப்புக் கட்டுரைகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: விபரீத விளைவுகளை அன்றே கணித்த மேதை

பணமதிப்பிழப்பின் விபரீதமான விளைவுகளை பொருளாதார மேதை மன்மோகன் சிங் அன்றே துல்லியமாக கணித்திருந்தார். சுமார் 15 மாத காலம் கடந்த பிறகும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

சுதாகரன் ஈஸ்வரன்

பணமதிப்பிழப்பின் விபரீதமான விளைவுகளை பொருளாதார மேதை மன்மோகன் சிங் அன்றே துல்லியமாக கணித்திருந்தார். சுமார் 15 மாத காலம் கடந்த பிறகும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நவம்பர் 8, 2016 – பெரும்பாலான இன்றைய தலைமுறை மக்களின் மறக்க முடியாத நாள். இன்னும் சொல்லப்போனால் சிலரின் வாழ்க்கையை புரட்டி போட்ட நாள். இது ஒன்றும் இங்கு மிகைப்படுத்தி  சொல்லப்படவில்லை. உண்மையான யதார்த்தமான நிகழ்வின் விளைவை உணர்த்தும் செய்தி மட்டுமே. 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த நடவடிக்கையின் நோக்கம் அனைத்து  தரப்பு மக்களாலும் அதிகளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட விதம் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 

24 நவம்பர், 2016 அன்று ராஜ்ய சபாவில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பல்வேறு முக்கியமான விஷயங்களை எடுத்து உரைத்தார்.

அதில் சில  துளிகள் :

  • இப்பொழுது செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்த விதம், நிர்வாகத் தோல்வியை தழுவியுள்ளது.
  • இது விவசாயம், சிறு மற்றும் குறு தொழிற்துறைகள், முறைபடுத்தப்படாத சீர்திருத்தப் பிரிவு ஆகியவற்றில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
  • இது பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும்.
  • என் சொந்த கருத்து என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையக் கூடியது. 
  • மக்களின் துயரங்களைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
  • இந்த நடவடிக்கை நாணய மற்றும் வங்கி முறைகளில் நமது மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடும்.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்காலத்திற்கு சிறந்த ஒன்று என்று கூறுபவர்கள் பின்வரும் மேற்கோளை நினைவில் கொள்ள வேண்டும். “மிக தொலைவில் உள்ள தூரத்தை நோக்கி பயணிக்கும் போது  சில நேரங்களில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்”

நிர்வாகத் தோல்வி:
99% சதவீத அளவிலான பணம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவிலான கருப்புப்பணம் பிடிபடும் என்ற திட்டம் பொய்த்துப் போனது. மேலும்  100-க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த உயிரிழப்பிற்களுக்கு இது மட்டுமே காரணம் இல்லை என்ற போதிலும், இது முக்கிய காரணி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழில்பாதிப்பு:
கடந்த சில ஆண்டுகளாகவே பல தொழில்கள் மந்தமாக இருந்தன. அந்த நிலையில்தான் பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டது. இன்று காணப்படும் சிறு, குறு தொழில்களின் பாதிப்பிற்கு செல்லாக்காசு  நடவடிக்கை வலுசேர்த்தது என்பது யதார்த்தம். ஏற்கனவே நிலவி வந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு இது மேலும் பாதிப்பை அதிகப்படுத்தியது.


மக்களின் நம்பிக்கை:
வங்கிகளின் மேல் இருந்த மக்களின் நம்பிக்கை குறைந்ததற்கு இந்த நடவடிக்கை ஒரு தொடக்கப் புள்ளியாகும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை  பாமர மற்றும் நடுத்தர மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு தொழில்நுட்பத்தில் இருந்து அடுத்த நவீன தொழில்நுட்பத்தை நோக்கி அரசு செல்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் 132 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில்  அனைவரையும் அடுத்த நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகர்த்துவது மிகவும் சிக்கலான ஒன்று என்பதை அரசு உணரவில்லை என்றே தோன்றுகிறது. 

சட்டப்பூர்வ கொள்ளை: 
சட்டப்பூர்வ கொள்ளைக்கு இந்த நடவடிக்கை இட்டுச்செல்லும் என்பதை அன்றே எச்சரித்தார் மன்மோகன் சிங். இன்று ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் ஏதாவது ஒரு வகையில்  தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சில சமயம் அரசு நிறுவனங்களுக்கோ நம் பணத்தை நம்மை அறியாமல் இழந்து வருகிறோம் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மேற்குறிப்பட்ட அனைத்து பாதிப்புகளும் இன்று அனைவரையும் ஏதாவது ஒரு முறையில் பாதித்துள்ளது. இன்றும் அதனுடைய பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய பாதிப்புகளை அன்றே சுட்டிக்காட்டினார் பொருளாதார மேதை என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவ்வளவு துல்லியமாக விளைவை கணித்ததன் மூலம் தன்னுடைய  பொருளாதார அறிவை உலகிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT