முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தமிழக அரசியலில் வெற்றிடமும், வைராக்கியத் தீயும்!

தமிழகத்தில் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த ஒரு வார்த்தை “வெற்றிடம்”. அதாவது அரசியல் தலைமை வெற்றிடமாக இருக்கிறது என்பதே அது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:26 PM
பகிர்:

தமிழகத்தில் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த ஒரு வார்த்தை “வெற்றிடம்”. அதாவது அரசியல் தலைமை வெற்றிடமாக இருக்கிறது என்பதே அது. “வெற்றிடம்” என்ற பட்டாசை கொளுத்திப் போட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அது இப்போது வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. ‘அடுத்தது நாம தான்', என்று கணக்குப் போட்டவர்களை மாற்று வழியை தேட வைத்துள்ளது. உண்மையிலேயே தமிழக அரசியல் கள தலைமை வெற்றிடமாக இருக்கிறதா? அப்படி வெற்றிடமாக இருந்தால், அதை யாரால் நிரப்ப முடியும்? அதை எப்படி நிரப்புவது? என்ற கேள்விகள் நம் மனத்தில் எழுகிறது.

‘இது வெற்றிடம்', என்று யாரும் போர்டு வைக்கமாட்டார்கள். அரசியல் களம் அப்படிப்பட்டது. வெற்றிடம் போலத் தெரியும், ஆனால், வெற்றிடமாக இருக்காது. இதற்கு மாறாக, கம்பீரமாக ஒருவர் உட்கார்ந்து இருப்பார், ஆனால், அது கண்களுக்கு புலப்படாத வெற்றிடமாக இருக்கும். அப்படியென்றால், வெற்றிடத்தை எப்படி உணர்வது? விளக்க வருகிறது ஒரு மகாபாரத சூழல்.

ஆதிபர்வம். திருதிராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரில் யாரை அரசனாக்குவது என்று முடிவெடுக்கும் சூழல் ஏற்படுகிறது. திருதிராஷ்டிரன் பார்வையற்றவர். அதனால் அவர் அரசனாகும் தகுதியிழக்கிறார். விதுரர் அரச குடும்பத்தை சேர்ந்த தாய்க்கு பிறக்காததால் அவரும் அதற்கான தகுதியை இழக்கிறார். இதனால் பாண்டு அரசனாகிறார். சில காலத்துக்குப் பிறகு முனிவர் ஒருவரின் சாபத்தால் காட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அதன் பின் பதினாறு வருடங்களுக்கு மேல் காட்டில் வாசம் செய்த பாண்டு மரணமடைகிறார். பாண்டு காட்டிற்கு சென்றவுடன், அரசனாக யாருக்குத் தகுதியில்லை என்று சொன்னார்களோ, அதே திருதிராஷ்டிரன் அரசனாக்கப்படுகிறார். அந்த சூழலில் அவரது பார்வையின்மையை பற்றியோ, அரசியல் ஞானம் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. காரணம் அது தற்காலிக ஏற்பாடாகத்தான் உணரப்படுகிறது. பார்க்கப்படுகிறது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை தொடரும் தற்காலிக நிலை அது. தற்காலிக அரசன் மற்றவர்களை கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை மகாபாரதத்தின் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. சிறிய விஷயங்களுக்குக்கூட அடுத்தவரை நம்பியே காலத்தை கழிக்க வேண்டிய நிலை திருதிராஷ்டிரனுக்கு ஏற்படுகிறது. இதனால், துரியோதனன் போன்றவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர். திருதிராஷ்டிரன் அரியணையில் ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமே இருந்தார். ஆளுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடமாக அந்த சூழல் பார்க்கப்படுகிறது

அடுத்ததாக, வெற்றிடத்தை நிரப்பும் தகுதியையும், சூழலையும் நமக்கு உணர்த்த வருகிறது ஷேக்ஸ்பியரின் காவியங்களில் ஒன்றான அரசர் ஐந்தாம் ஹென்றி (King Henry V). அரசர் நான்காம் ஹென்றியின் மகன் “இளவரசன் ஹாரி”. பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றும் மைனர் குஞ்சு. தவறான சேர்க்கையால் செய்யக்கூடாத கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறான். நம்ம ஊர் மொழியில் சொன்னால் “சுத்த காலிப்பய”. அரசரின் மகனாச்சே! யாராவது அவன் மீது கைவைக்க முடியுமா? அரசருக்கு மிகுந்த மன வருத்தம். மகனை திருத்த வழிதெரியாமல் தவித்தார். அதற்காக பல பிரயத்தனங்களை செய்கிறார். எதுவும் கைகொடுக்கவில்லை. அந்த சமயத்தில் உள் நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஹாரியை அழைக்கிறார் அரசர். இம்முறை அரசரின் வேண்டுதல் பலித்தது. நிலைமையை உணர்ந்த ஹாரி, அரசரின் அழைப்பை ஏற்கிறான். அரண்மனை திரும்புகிறான். உள் நாட்டு போர் வெடிக்கிறது. இளவரசன் ஹாரி பொறுப்புடன் அதை சமாளிக்கிறான். வெற்றிபெறுகிறான். பிறகு ஹாரி ஒரு பொறுப்பான அரசன், ஐந்தாம் ஹென்றியாகிறான்.

இளவரசர் ஹாரி என்ற கதாபாத்திரத்தை கொஞ்சம் அலசிப்பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.

தகப்பன் ஒரு அரசன். அந்த அதிகாரத்தில் மகன் எல்லாத் தவறுகளிலும் ஈடுபடுகிறான். யாராலும் தண்டிக்க முடியாது. ஆனால், ஒரு பிரச்னையான காலத்தில் பொறுப்பை உணர்ந்து தலைமையை ஏற்கிறான். அதாவது தலைமையேற்கும் நேரத்தை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான். கடந்த கால கெட்ட சகவாசங்களை சட்டென்று உதறித் தள்ளுகிறான். தவறான செயல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்கிறான். அந்தப் பாடம் அவனை முதிர்ச்சியான தலைவனாக்குகிறது. நெகடிவான விஷயங்களை பாசிடிவாக்கும் கலையை அவன் தன்னுள்ளே வைத்திருப்பது நமக்குப் புரிகிறது. இதையெல்லாம் விட மற்றொரு முக்கியமான விஷயம், இளவரசன் ஹாரி, ஐந்தாம் ஹென்றியாக பதிவியேற்றதும், அவனுடைய பழைய கெட்ட நண்பர்கள் அவனை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து அரண்மனை பக்கம் வரக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறான். தவறான செய்கையில் ஈடுபடும் போது அவன் அரச பதவியை நினைக்கவில்லை. அரச பதவியில் இருக்கும் போது தவறான செய்கையில் ஈடுபடவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஹாரி தெரிந்து வைத்திருக்கிறான். இதையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம், அரசர் நான்காம் ஹென்றி தான் நல்ல நிலையில் இருக்கும் போதே தன் மகனை அரியணையில் அமர்த்த வேண்டும், அவன் ஆட்சி செய்வதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படியில்லாமல், தான் இருக்கும் போதே மகன் அரியணைக்கு வந்தால், தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நான்காம் ஹென்றி நினைத்திருந்தால், அவர் வெற்றிடத்தை மட்டுமே தன் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்த தருணத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது. நான்காம் ஹென்றியின் ஆளுமையும், திறமையும் அப்படியே ஐந்தாம் ஹென்றிக்கு வந்துவிட்டதே! அப்படியானால், அப்பாவின் உயர்ந்த குணங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் மகனுக்கும் வந்துவிடுமா?

ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.

ஒரு நாடு. அங்கு ஒரு புகழ் பெற்ற திருடன், பக்கிரி இருந்தான். எத்தனை காவல்கள், தடுப்புகள் போட்டாலும் எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவி திருடிச்சென்று விடுவான். அவனுடைய திறமை எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ‘பக்கிரி திருடுமளவுக்கு நான் பெரிய மனிதன்', என்று பொருளை இழந்தவர்கள் பெருமைப்படத் தொடங்கினர். வருத்தப்பட வேண்டிய திருட்டு, பெருமைப்படும் விஷயமாக மாறிவிட்டது. பக்கிரியின் மகனும், அந்த நாட்டு அரசனின் மகனும் நண்பர்கள். இருவரும் ஒரு நாள் சாதுவை சந்தித்தார்கள்.

‘ஐயா! என்னுடைய தந்தையின் தனித் திறமை என்னுடைய ரத்தத்திலும் இருக்கும். ஆனால், அவர் எனக்கு தொழிலின் சூட்சமங்களை சொல்லித்தர மறுக்கிறார். நானும் அவரைப் போல புகழ்பெற்ற திருடனாக வேண்டும். என்னுள்ளே உறங்கிக்கிடக்கும் என் தந்தையின் குணங்களை தட்டி எழுப்ப நீங்கள்தான் உதவ வேண்டும்', என்று கேட்டான்.

அடுத்ததாக அரசனின் மகன் பேசினான்.

‘ஐயா! என் தந்தை சிறந்த நிர்வாகி. ஆட்சி செய்யும் சூட்சமத்தை எனக்கு சொல்லித் தருவதில்லை. என்னுடைய தந்தையின் தனித் திறமை என்னுடைய ரத்தத்திலும் இருக்கும். ஆனால், அவர் ஆட்சி செய்யும் சூட்சமங்களை சொல்லித்தர மறுக்கிறார். என்னுள்ளே உறங்கிக்கிடக்கும் என் தந்தையின் குணங்களை தட்டி எழுப்ப நீங்கள்தான் உதவ வேண்டும்', என்று கேட்டான்.

திருடனையும், அரசனையும் அழைத்தார் சாது. ‘உங்கள் மகன்கள் கேட்கும் சூட்சமங்களை சொல்லித் தாருங்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் சந்திக்கிறேன்', என்று சொன்னார் சாது.

சாதுவின் கோரிக்கையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். திருடன் தான் திருடும் இடத்திற்கு மகனை உடன் அழைத்துச் சென்றான். அரசன், தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு யாத்திரைக்கு சென்றுவிட்டான்.

ஒரு மாதம் கடந்தது.

சாதுவை சந்திக்க திருடன் வந்தான். மகனை தோளில் சுமந்து வந்தான். மகனின் உடல் முழுவதும் காயங்கள். எழுந்து நிற்க முடியாத நிலை. சாதுவைப் பார்த்ததும் மகன் பேசினான்.

‘ஐயா! இவனெல்லாம் ஒரு அப்பனா! திருடும் இடத்தில் என்னை மாட்டிவிட்டு இவன் தப்பி ஓடிவிட்டான். அங்கிருந்தவர்கள் என்னை நையப்புடைந்துவிட்டார்கள். எனக்கு அப்பனும் வேண்டாம், திருட்டுத் தொழிலும் வேண்டாம்', என்று கையெடுத்து கும்பிட்டான்.

சாது திருடனைப் பார்த்தார். திருடன் பேசினான்.

‘ஐயா! திருடும் தொழிலை சிறு வயதிலிருந்தே செய்கிறேன். இது போன்று பலமுறை அடி உதை வாங்கியிருக்கிறேன். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முனைப்பும், வைராக்கியமும் தேவை. அந்த ‘வைராக்கியத் தீயே' நம்முள்ளே இருந்து நம்மை வழி நடத்த வேண்டும். எந்த இடர் வந்தாலும் அந்த தீயை அணையவிடாமல் நாம் காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்தால், அந்த தீ நம்மை உயர்த்திப் பிடிக்கும். எனக்கு மகனாகப் பிறந்ததாலே அந்த தீ என்னிடமிருந்து மகனுக்கு சென்றிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதை என் மகன் இப்போது உணர்ந்திருப்பான்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் திருடன்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அரசன் அங்கு வந்தான். சாதுவை வணங்கினான்.

‘அரசே! தங்கள் மகனுக்கு பட்டம் சூட்டினீர்களே! இப்போது அவன் எப்படி ஆட்சி செய்கிறான்?' என்று கேட்டார் சாது.

‘அரசனுக்கு உண்டான தகுதி அவனிடம் இருக்கிறாதா என்பதை நான் ஆராயவில்லை. அவன் என் மகன். எனக்குப் பின் அவனே அரசாள வேண்டும். அதனால், அவனைச் சுற்றி அறிஞர்களையும், மந்திரிகளையும், விசுவாசிகளையும் அமர்த்தியிர்க்கிறேன். அவர்கள் அவனை பார்த்துக் கொள்வார்கள்', என்றான் அரசன்.

‘அரசே! உங்களின் தந்தையும் உங்களை இப்படித்தான் அரியணையில் அமர்த்தினாரா?” என்று கேட்டார் சாது.

‘ஐயா! என் தந்தை ஒரு விவசாயி. ஆட்சிக்கு எதிராக புரட்சிகள் செய்து இந்த ஆட்சியை பிடித்தேன். ஆட்சியைப் பிடிக்க என்னுள் இருந்த “புரட்சித் தீ” எனக்கு உதவியது. அந்த தீ என்னுடைய மகனிடம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவனைச் சுற்றி பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திருடனின் மகன் பேசினான்.

‘ஐயா! தகுதியில்லாத ஒருவன் திருடனாக இருக்க முடியாது! ஆனால், அரசனாக இருக்க முடியுமா? இது என்ன நியாயம்? ஆட்சியின் போது எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றால், அவன் அரசனா? சுற்றியிருப்பவர்கள் அரசர்களா?' என்று கேட்டான் அவன்.

பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தார் சாது.

நாம் படித்த கதைகளிலிருந்து நாம் புரிந்து கொண்ட விஷயங்களை பட்டியலிடுவோம்.

‘தலையிருக்க, வால் நாட்டியமாடும் அந்த நிலையே “வெற்றிடம்” ஏற்பட்டதற்கான அறிகுறி. இதை மகாபாரத திருதிராஷ்டிரன் ஆட்சி நமக்கு புரியவைக்கிறது. இது போன்ற வால்களின் நாட்டிய சூழல் தற்போதைய தமிழகத்தில் நடக்கிறதா?

ஷேக்ஸ்பியரின் காவியம் நமக்கு உணர்த்துவது, ‘தலைமை என்பது ஒரு சிறப்பான குணம். அது வெளிப்படும் போது மட்டுமே உயரத்திற்கு செல்ல முடியும். இதை இளவரசன் ஹாரி நமக்கு உணர்த்துகிறான்.

திருடன் கதை நமக்கு உணர்த்துவது பிறப்பால் உயர்ந்த குணங்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு இடம் பெயரும் என்று சொல்ல முடியாது. உயர்ந்த குணங்களை ரத்தமும், சதையும் முடிவு செய்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடன் கதை உணர்த்தும் மற்றொரு விஷயம், எந்த உயரத்தை தொட வேண்டுமென்றாலும் ‘வைராக்கியத் தீ' நம்முள் இருக்க வேண்டும். அந்த நெருப்பை அணையாமல் யார் பார்த்துக் கொள்கிறார்களோ, அவர்களால் மட்டுமே வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

மகாபாரதமும், திருடன் கதையும் உணர்த்தும் மற்றொரு விஷயம், வெற்றிடத்தை நிரப்புவதற்கும், அரியணையை பிடிப்பதற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கதைகள் நமக்கு உணர்த்தும் விஷயங்களின் மூலம் தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ‘ஆம் வெற்றிடம் உருவாகியிருக்கிறது. நானே அதை நிரப்புவேன்', என்று யாராவது சொன்னால், அவர்களிடம் இருப்பது ‘ஆசையா' அல்லது ‘வைராக்கிய தீயா' என்பதை அவர் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அது வைராக்கியத் தீயாக இருந்தால், வெற்றிடம் நிரப்பப்படும். ஆசையாக இருந்தால், வெற்றிடம் காத்திருக்கும் மற்றொரு புரட்சியாளருக்காக.

சாது ஸ்ரீராம்
- saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.