தமிழகக் காவல்துறை மோசமான தேவதையா? நல்ல ராட்சஷனா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்திய வரலாற்றில் ஒரு துக்கமான நிகழ்வு. தொன்னூற்று ஒன்பது போராட்ட நாட்களில் நடக்காத வன்முறையும், துப்பாக்கிச்சூடும் நூறாவது நாளில் நடந்தேறியிருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்திய வரலாற்றில் ஒரு துக்கமான நிகழ்வு. தொன்னூற்று ஒன்பது போராட்ட நாட்களில் நடக்காத வன்முறையும், துப்பாக்கிச்சூடும் நூறாவது நாளில் நடந்தேறியிருக்கிறது. தமிழகம் முழுவதுமே துக்கத்தில் ஆழ்ந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் மன இறுக்கத்துடனான ஒரு அமைதியை உணரமுடிந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி சில அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்த காட்சிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தோம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தார்களுக்கு 1.5 லட்ச ரூபாயும் இழப்பீடாக அறிவித்தது அரசு. எவ்வளவு இழப்பீடுகளை கொடுத்தாலும், அவை உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் உண்மையான இழப்பை ஈடு செய்யாது.
கலவரத்தின்போது, காவல்துறையினரை பலர் சூழ்ந்து தாக்குவதையும், மற்றொரு இடத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்கும் வீடியோக்களை செய்திகளிலும், இண்டெர்நெட்டிலும் பார்க்கிறோம். இந்த கலவரத்தில் போலீஸ் தரப்பில் 130 பேர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பிலும் அதிக பாதிப்புகள் இருப்பதை பார்க்க முடிந்தது. காயமடைந்த போராட்டக்காரர்களை நேரில் சென்று பார்த்த அரசியல்வாதிகள், காயமடைந்த காவலர்களை சென்று பார்த்தார்களா? அல்லது ஆறுதலான அறிக்கையாவது விட்டார்களா? அரசு தரப்பிலிருந்து ஆறுதலான அறிவிப்போ, நிதியுதவியோ அறிவிக்கப்பட்டதா? எதற்கெடுத்தாலும் தமிழன் தமிழன் என்று பேசும் அரசியல்வாதிகளே! சினிமாக்காரர்களே! பாதிக்கப்பட்ட காவலர்கள் தமிழர்கள் இல்லையா?
ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஆளுகின்ற கட்சிக்கு எதிரானவர்கள் துடிப்போடு செயல்படுகிறார்கள். மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், நாடே நம் பின் நிற்கிறது என்று யாராவது நினைத்தால், அது அவர்களது அறியாமை.
ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று யாருமே காவல்துறையை ஆதரித்தோ, ஆறுதலான வார்த்தைகளை பேசாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.
ஒரு அரசன். அவனிடம் ஒரு அற்புத விளக்கு இருந்தது. அதை தேய்த்தால் ஒரு தேவதை அவன் முன் தோன்றுவாள். அரசன் சொல்லும் கட்டளைகளை செய்து முடிப்பாள். தேவதையின் உதவியோடு மக்களுக்கு வேண்டிய பல நல்ல பணிகளை செய்து வந்தான் அரசன்.
அந்த சமயத்தில் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அரசன் தவித்தான். சட்டென்று அற்புத விளக்கின் நியாபகம் வந்தது. விளக்கை எடுத்து தேய்த்தான். அவன் முன் தேவதை தோன்றினாள்.
‘தேவதையே! எதிரிகளால் இந்த நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், நீ தேவதையாக இல்லாமல் ராட்சஷனாக உருவத்தை மாற்றிக்கொள். கலகக்காரர்களை அடித்து விரட்டு', என்று ஆணையிட்டான் அரசன்.
ராட்சஷனாக உருமறியது தேவதை. கலகக்காரர்களை அடக்கியது. அரசனுக்கு மகிழ்ச்சி. நிம்மதியாக ஆட்சியை தொடர்ந்தான்.
ஒரு நாள் அரசனிடம் இருந்த அற்புத விளக்கை போராட்டக்காரர்களின் தலைவன் திருடிச் சென்றுவிட்டான். அவன் விளக்கை தேய்த்தான். அவன் முன் தோன்றினாள் தேவதை.
‘தேவதையே! விளக்கு என்னிடம் இருக்கிறது. இனி நீ என்னுடைய ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும்', என்றான் தலைவன்.
‘தலைவரே வணங்குகிறேன்! தேவதையாகிய நான், இந்த விளக்கு யாரிடம் இருக்கிறதோ, அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எதற்கு அழைத்தீர்கள்?' என்று கேட்டது தேவதை.
‘இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்போகிறேன். நீ உடனடியாக ராட்சஷனாக உருவத்தை மாற்றிக்கொள். அரசனை விரட்டியடி. பிறகு நான் தான் இந்த அரசன்', என்றான் தலைவன்.
போர் மூண்டது. ராட்சஷன் அரண்மனைக்குள் சென்றான். அரசனை அடித்து விரட்டினான்.
‘ராட்சஷனே! நிஜத்தில் நீ ஒரு தேவதை. உன்னிடம் அன்பு, இரக்கம், கருணை, பாசம் ஆகிய நல்ல குணங்கள் இருக்கின்றன. அதை உணர்ந்து கொள். இவ்வளவு காலம் எனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாய். நானும் உன்னை அன்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். அதையெல்லாம் மறந்து தற்போது என்னையே தாக்குகிறாயே! இது நியாயமா?', என்று கேட்டான் அரசன்.
‘இது போன்ற வசனங்கள் என்னை கட்டுப்படுத்தாது. விளக்கை வைத்திருப்பவர் மட்டுமே என்னை கட்டுப்படுத்த முடியும். ஒரு தேவதையாக அவர் சொல்லும் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றுவேன். நான் உனக்கு உதவ வேண்டுமென்றால் விளக்கு உன்னிடம் இருக்க வேண்டும். ஓடு ஓடு', என்று விரட்டினான் ராட்சஷன்.
அரசன் ஓடினான். காட்டில் சென்று பதுங்கினான். தலைவன் புதிய அரசனானான்.
அரசனாக ஆன பிறகும், அரசுக்கு எதிராக போராடிய காலத்தில் ராட்சஷன் வடிவில் இருந்த தேவதையால் பட்ட கஷ்டம் அவன் நினைவுக்கு வந்தது. விளக்கை எடுத்து தேய்த்தான். தேவதை வந்தது.
‘தேவதையே! நீ தற்போது என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், முந்தைய காலங்களில் எனக்கு எதிராக செயல்பட்டிருக்கிறாய். அதனால் உன்னை பழிவாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். அதற்கு இப்போதுதான் சந்தர்ப்பம் வந்துள்ளது', என்று சொல்லி கையில் இருந்த குச்சியால் தேவதையின் மண்டையில் ஓங்கி அடித்தான். தேவதையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது.
வழியும் ரத்தத்தோடு காட்டில் நடந்து சென்றது தேவதை. எதிரில் ஒரு சாது வந்து கொண்டிருந்தார்.
‘தேவதையே! தலையிலிருந்து ரத்தம் வழிகிறதே! உனக்கு ஏன் இந்த நிலை?', என்று கேட்டார் சாது.
‘சாதுவே! என் மண்டை உடைவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும் விளக்கு கை மாறும் போதும் என் மண்டை உடைகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கிறேன். இந்த உலகில் எனக்கென்று விருப்பு, வெருப்பு ஏதுமில்லை. விளக்கு யாரிடம் இருக்கிறதோ, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். விளக்கு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறும் போது என்னுடைய இலக்கும் மாறுகிறது. ஒவ்வொருவரின் கட்டளையை சிறப்பாக செய்தாலும், இறுதியில் பழியையும் பாவத்தை சுமக்கிறேன். விளக்கை வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் நான் வரமாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, விளக்கு யாரிடமிருந்தாலும் எனக்கு அது சாபம்தான். என்னால் பயனடைந்தவர்களும் என்னை திட்டுகிறார்கள்', என்று புலம்பியது தேவதை.
‘தேவதையே! எல்லா விஷயத்தையும் கடமையாக நினைப்பதும், உன்னுடைய அருமை, பெருமை தெரியாதவர்களிடம் நீ கட்டுப்பட்டு கிடப்பதுமே இந்தனை பிரச்னைகளுக்கும் காரணம். உன் தலைவன் நன்மை செய்யும் படி உனக்கு கட்டளையிடும் போது அதைச் செய். ஆனால், உன்னை ராட்சஷனாக மாற்றினால், நீ அவன் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால், தேவதையாக இருக்கும்வரை மட்டுமே அவன் கட்டளைக்கு நீ கட்டுப்பட்டவள். மோசமான தேவதையாக இருப்பதை விட, நல்ல ராட்சஷனாக இருந்துவிட்டுப் போ', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
தேவதை விழித்துக் கொண்டாள். இன்றைய அரசனாக இருந்தாலும் சரி, நாளைய அரசனாக இருந்தாலும் சரி, இனி ராட்சஷனாக மாறிய தேவதையை ஏமாற்ற முடியாது. தன்னை நம்பாத, தன் மீது விசுவாசமில்லாதவர்களை கையாளும் யுக்தியை தேவதை கற்றுக் கொண்டுவிட்டாள். இனி ஆளும் தரப்பு, எதிர் தரப்பு என்று யாரிடமும் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தக் கதை பல விஷயங்களை நமக்கு உணர்த்தியிருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று, ‘நம் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்காக உழைப்பது வீண்', என்பதுதான். 130 பேர் காயமடைந்த பிறகும், அவர்களுக்காக ஆறுதலாக ஒரு வார்த்தைகூட சொல்லாத அரசியல்வாதிகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் எதற்காக விசுவாசத்தோடு இருக்க வேண்டும்?
தமிழக காவல்துறை உச்ச அதிகாரி அவர்களே!
போராட்டத்தில் புகுந்த வன்முறையாளர்களால் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னரே இறுதிக்கட்டமாக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு காவலரின் தனிப்பட்ட வெறுப்பிலும் துப்பாக்கி சூடு நடக்கவில்லையே? காவலர்களின் செயலை கொச்சைப்படுத்தி அரசியல் தலைவர்களாலும், அவர்களின் தொண்டர்களாலும் பரப்பப்படும் கருத்துக்களை தடுக்க என்ன செய்யப்போகிறீர்கள்?
அரசியல்வாதிகள் காவல்துறையை சமூகத்தின் எதிரிபோல சித்தரித்து வருகிறார்களே! இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
காவலர்கள் கடமையைத்தானே செய்தார்கள்! கேவலமான ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் ஏன் சுமக்க வேண்டும்? அத்தகைய பேச்சுக்களுக்கு பதிலளிக்கவும், தங்களை காத்துக்கொள்ளும் அமைப்பு காவல்துறையில் ஏதுமில்லையா?! கருத்துச் சுதந்திரமில்லாத எந்த அமைப்பும் தோல்வியை மூடி வைக்குமே தவிர வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லாது.
ஒரு கூட்டம் காவல்துறை அதிகாரிகளை குறிவைப்பதாக செய்திகள் வருகிறதே! காவலர்களின் உயிருக்கும் உடமைக்கும் என்ன உத்திரவாதம்?
இன்றைய ஆட்சியாளர், நாளை எதிர்கட்சியில் அமரலாம். இன்றைய எதிர்கட்சி நாளை ஆட்சியாளராக மாறலாம். ஆனால், சட்டத்தின் இயக்கம் மாறக்கூடாது.
காவல்துறை செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் ஆள்கின்ற அரசு தங்கள் சாதனைகளாக சொல்லிக்கொள்கிறது. சோதனையான விஷயங்களை காவல்துறையின் தலையில் போட்டு தப்பித்துக் கொள்கிறது. இது என்ன நியாயம்?
காவல் துறையின் உச்ச அதிகாரி, ஆளுகின்றவர்களை மட்டும் திருப்திப்படுத்தினால் போதும் என்று நினைக்ககூடாது. களத்தில் நிற்கும் காவலர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.
காவல்துறையினரின் மரியாதையை குலைக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுமானால், காவலர்கள் மக்களிடையே மரியாதையை இழப்பார்கள். இத்தகைய செயல்கள் தமிழகம் - காஷ்மீர் கலாச்சாரத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
மிகவும் வருத்தமான விஷயம் என்ன தெரியுமா? காவல் துறையின் உயர் அதிகாரியாக இருந்த ஒருவர் இன்று மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார். ஆனாலும், காவல்துறைக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிடுவோம் என்று காவல்துறையினர் நினைத்தால், மக்கள் யாரும் நிம்மதியாக தூங்க முடியாது.
காவல்துறையின் மீதான விமர்சனங்கள் இன்றோ, நேற்றோ திடீரென்று நடந்த விஷயமல்ல. எந்தக் கலவரமாக இருந்தாலும், கடைசியில் காவல்துறையின் மீது பழியை போட்டு பிரச்னை முடித்து வைக்கப்படும். இந்த நிலை மாற வேண்டும்.
அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கும் நிலையிலிருந்து காவல்துறை வெளிவரவேண்டும். காவல்துறையும், நீதித்துறையும் இணைந்ததொரு தன்னாட்சி அதிகாரம் மிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அது கிட்டத்தட்ட இந்திய ராணுவ அமைப்பைப் போன்று அதிகாரம் மிக்கதாக இருக்க வேண்டும். யார் இதை செய்வார்கள் என்பது தெரியாது. ஆனால், இப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டால், காவல்துறை, சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன் சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com