சிறப்புக் கட்டுரைகள்

மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!

சி.பி.சரவணன்

இந்தியர்களின் குடிப்பழக்கம் 38% அதிகரித்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 18 முதல் 70 வயது வரையிலான 5 ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை 'குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு எதிரான சமூகம்' (Community Against Drunken Driving /CADD) என்ற அமைப்பு நடத்தியது.

இதன்படி, ''உலக அளவில் அதிக அளவில் குடிப்பழக்கத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியர்களின் குடிப்பழக்கம் 38% அதிகரித்திருக்கிறது. 2005-ல் ஓராண்டுக்கு 2.4 லிட்டர் மது அருந்திய நபர் தற்போது 5.7 லிட்டர் மதுவை உட்கொள்கிறார்.

இதற்கான காரணத்தைத் தேடும்போது, குடிப்பழக்கத்தில் அமைதியான பங்கேற்பாளர்களாக பெண்கள் இருந்தது தெரியவந்தது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குடிக்கின்றனர். அதேபோல பெண்கள் குடிக்கும் மதுவின் அளவும் அதிகரித்திருக்கிறது.

சில நூறு ஆண்டுகளாகப் பழக்கவழக்கத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெண்கள் குடிக்காமல் இருந்தனர். ஆனால், தற்போது பெண்களின் மது சந்தை விரிந்துவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 25% அதிகரிக்கும்.

என்ன காரணம்?
இந்த மாற்றத்துக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன.

* அமைதியடையவும் மகிழ்ச்சி பெறவும் மதுவே சிறந்த மருந்து எனத் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.

* பெரும்பாலான அனைத்து சமூக நிகழ்வுளும் மதுவைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.

* மது எளிமையான, வேகமான சமூக இளக்கியாக அமைந்துவிடுகிறது.

* இப்போது மதுப் பழக்கத்தை யாரும் பிரச்சினையாகவோ, தவறாகவோ பார்ப்பதில்லை. அது ஒரு நடைமுறை அவ்வளவே என்ற எண்ணத்துக்கு நகர்ந்து விட்டோம்.

* செலவழிக்கும் திறன், செழிப்பான குடும்பப் பின்னணி, ஆண்களுடனான சம வாய்ப்பு என இருக்கும் பெண்கள் எரிச்சல், மன அழுத்தம், தனிமை, கோபம், வலி, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு வடிகாலாக குடிப்பழக்கத்தையே நாடுகின்றனர்.

உதாரணத்துக்கு டெல்லியில் 40 சதவீத ஆண்களும் 20 சதவீதப் பெண்களும் மது நுகர்வோர்கள். 18-30 வயதுப் பெண்களில் 43.7% பேர் குடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குடிக்கின்றனர். 31 - 45 வயதுப் பெண்களில் 41.7% பேர் தொழில் தேவைகளுக்காகவும் சமூகப் பழக்கத்துக்காகவும் குடிக்கின்றனர். 46- 60 வயதுப் பெண்களில் 39.1% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53% பேரும் உளவியல் காரணங்களுக்காகக் குடிக்கின்றனர்.

அதேபோல பெரும்பாலான பெண்கள் குடிக்கும்போது, ஒரு முறைக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட 'பெக்' என்ற அளவில் எடுத்துக்கொள்கின்றனர்''. இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லி வந்தார்கள். ஆண்கள் குடித்தாலே அது அந்த குடும்பத்தையே கெடுத்துவிடும் என்று சொல்லிவந்த நிலையில், இப்போது அந்த குடும்பத்தின் குத்துவிளக்குகளே அதாவது பெண்களே குடிக்கிறார்கள் என்றால், குடி எந்த அளவுக்குக் குடியைக் கெடுத்திருக்கிறது என்பது நன்றாகவேத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT