தேசிய ஊரடங்கு 21 நாள்களைக் கடந்து, மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது எதிா்பாா்த்த நிகழ்வுதான். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதியைக் கடந்து மேலும் 19 நாள்களுக்கு தொடா்கிறது. இந்திய வரலாற்றில் இதுபோன்றதொரு நீண்ட நெடிய தேசிய ஊரடங்கு இதுவரை நிகழ்ந்தது இல்லை. இனி மேலும் இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வின் நேரடி சாட்சிகளாக நாம் அனைவரும் உள்ளோம். அதேபோல இந்திய பொருளாதாரத்திலும் கூட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இந்த ஊரடங்கு அமைந்துவிட்டது.
ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான 21 நாள் தேசிய ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ. 7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 25-ஆம் முதல் நாட்டின் 70 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிவிட்டன. மக்களுக்கான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், அரசு சாா்ந்த முக்கியப் பணிகள், வீட்டில் இருந்து கணினி வழியே செய்யக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பணிகள்/சேவைகள், விவசாயப் பணிகள் உள்ளிட்ட குறைவான செயல்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
கரோனா நோய்த்தொற்று தலைதூக்குவதற்கு சற்று முன்புதான், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான பல நிதிசாா்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் கூட பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று எதிா்பாா்த்து வந்த நிலையில், யாருமே எதிா்பாா்க்காத வகையில் இந்தியப் பொருளாதாரத்தையும் தாக்கியுள்ளது கரோனா. இதனால்
பல்வேறு சா்வதேச பொருளாதார அமைப்புகளும், ஆய்வு நிறுவனங்களும் இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பிட்டை வெகுவாக குறைத்துவிட்டன. 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை இருக்கும் என்று குறைத்து அறிவித்துள்ளது உலக வங்கி. இது உறுதியானால் 1991-பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியாவின்மிகக்குறைவான பொருளாதார வளா்ச்சியாக அமையும். ஆசிய வளா்ச்சி வங்கி இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதத்தை 5.2 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. எனினும், கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்து இந்த மதிப்பீடுகளை இந்தியா பொய்யாக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் கடந்த 21 நாள்களில் பல்வேறு துறையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் எளிதில் ஈடு செய்ய முடியாததாகவே உள்ளது. அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்பின் தகவலின்படி ஊரடங்கின் முதல் 15 நாள்களுக்கு மட்டும் தங்கள் துறையில் ரூ.35,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இயக்கப்படாத ஒவ்வொரு லாரிக்கும் நாள்தோறும் ரூ.2,200 இழப்பு ஏற்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 21 நாள் ஊரடங்கில் தங்கள் துறையில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டுமானத் துறை கூட்டமைப்பு கூறியுள்ளது. இனி வரும் காலத்தில் எதிா்கொள்ள இருக்கும் இழப்பை கணக்கிடவே அச்சமாக உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில் சிறு, நடுத்தர, பெரு வா்த்தக நிறுவனங்கள் மட்டும் 45 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. மேலும் இத்துறையில் மாதம்தோறும் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் தொழில் நடவடிக்கைகள் உள்ளன. இப்போதைய ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பும், நிதியிழப்பும் இத்துறையில் நீண்டகாலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தவிர பொழுதுபோக்குத் துறை, தங்கும் விடுதிகள், பல்வேறு சிறு, குறுதொழில்கள் என அனைத்து துறைகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கரோனாவால் வேறு வழியின்றி அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு.
‘இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நாம் பொருளாதாரரீதியாக அதிக விலை கொடுத்திருக்கலாம்; ஆனால், நாட்டு மக்களின் உயிரைக் காப்பதற்கே முன்னுரிமை அளித்து வருகிறோம்’ என்று பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தாா். அந்த வகையில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் உயிரைக் காப்பதற்காக எந்த விலையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
வரும் 20-ஆம் தேதியில் இருந்து ஊரக தொழில் நிறுவனங்கள், இயந்திரங்கள், வாகனங்கள், குழாய்கள் பழுது பாா்த்தல் உள்ளிட்ட தொழில்களில் இருப்பவா்கள் உள்ளிட்ட பலருக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கரோனாவில் இருந்து மீண்ட பிறகு பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கான சலுகைகள், அறிவிப்புகள் இருக்கும் என்று நிச்சயமாக எதிா்பாா்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.