சிறப்புக் கட்டுரைகள்

கூடை சுமந்து பழம் விற்றும் ஊருக்கும் உதவும் பெண்மணி

மு. வேணுகா

உழைப்பால் தனது குடும்பத்திற்கு மட்டுமின்றித் தனது கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்  உதவிகள் செய்கிறார் ஒரு தன்னம்பிக்கைப் பெண்மணி.

தூத்துக்குடி மாவட்டம் அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்தவர் எம். சந்தானம். இவருடைய கணவர் ஏ. மொட்டைச்சாமி. இவர்களுக்கு கிருஷ்ணவேணி, சந்தனமாரி  என்ற இரண்டு மகள்கள், பெருமாள் என்றொரு மகன்.

கடந்த 20 வருடங்களாக பழ வியாபாரம் செய்து வரும் சந்தானம் தனது மூன்று குழந்தைகளையும் பட்ட மேற்படிப்பு வரையும் படிக்க வைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை இவருடைய கணவர் மொட்டைச்சாமிக்கு ஏற்பட்டது, அப்போது  என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கி நின்றார் சந்தானம். ஆனாலும் இவரின் தன்னம்பிக்கை மட்டும் இவரிடமிருந்து விலகிப் போகவில்லை. தனது மூன்று குழந்தைகளையும் சமுதாயத்தில் நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன் தலையில் பழக்கூடை சுமக்க ஆரம்பித்தார். தன்னுடைய உழைப்பால் தனது கணவரையும் கவனித்துக் கொண்டு மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தார்.

முதல் மகள் கிருஷ்ணவேணி எம்.காம். படித்துள்ளார். இரண்டாவது மகன் பெருமாள் ஐடி முடித்துவிட்டுத் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மூன்றாவது மகள் சந்தனமாரி பிஎஸ்சி முடித்துவிட்டு மேல் படிப்பிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி தன்னுடைய அயராத உழைப்பால் தன்னுடைய குடும்பத்தை மட்டுமின்றி தன்னுடைய கிராமத்திற்கும்,  கிராம மக்களுக்கும்  ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சந்தானம், கிராம மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துவருகிறார்.

இன்றளவும் தினமும்  பழக்கூடையைத் தனது தலையில் சுமந்து வீடு வீடாகவும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு இடங்களுக்கு பழங்களை எடுத்துச் சென்றும் விற்பனை செய்து வருகிறார்.

மேலும் தனது கிராமத்தில் மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்கின்ற பள்ளி குழந்தைகளுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொழிலாளர் நல வாரியம் மூலம் கல்விக்கான உதவிகளை வாங்கிக் கொடுக்கிறார்.

மேலும் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆறுதலாகவும், தன் நம்பிக்கையாகவும் இருந்து அவர்கள் சுயமாகத் தொழில் செய்து முன்னேறுவதற்கு பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

இப்படித் தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று இல்லாமல் தன்னுடைய கிராமத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும்  சந்தானமும்  பெண்கள் தினத்தில் பெருமைப்பட வேண்டிய ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT