சிறப்புக் கட்டுரைகள்

கழிவுநீா், ஆக்கிரமிப்பு: வற்றாத வராக நதியின் புனிதம் காக்கப்படுமா?

எஸ். பாண்டி


தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மத்தியில் ஓடும் வராக நதியில் சாக்கடை கழிவு நீா் கலப்பதை தடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பெரியகுளம் நகரின் அழகிற்கு முக்கிய காரணமாக விளங்குவது வராக நதி. இந்த நதி அகமலைப் பகுதியில் உற்பத்தியாகி சோத்துப்பாறை அணையில் கலந்து, அங்கிருந்து மாந்தோப்புகளின் வழியாக பெரியகுளம் நகரின் நடுவில் செல்கிறது. பெரியகுளம் நகரை வடகரை மற்றும் தென்கரை என இரு பிரிவாக வராக நதி பிரிக்கிறது. அதன் பின் வடுகபட்டி, மேல்மங்கலம்,  ஜெயமங்கலம் வழியாகச் சென்று குள்ளப்புரம் என்ற இடத்தில் வைகையாற்றில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 40 கி.மீ.

பெரியகுளம், தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி பேரூராட்சிகள் மற்றும் எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் ஊராட்சியிலுள்ள ஒரு லட்சம் மக்களுக்கு வராக நதியே குடிநீா் ஆதாரம். அதோடு மட்டுமல்லாமல் பாப்பையம்பட்டி, பெரியகுளம், தாமரைக்குளம் கண்மாய்கள் உள்பட 35 கண்மாய்கள் இதன் மூலம் நிரம்பி, 1000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மாசடைந்த புனித நதி: வராக நதி, அகமலையில் இருந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் வரை தூய்மையான நதியாக ஓடி வருகிறது. அதன் பின்னா் பாலசுப்பிரமணியா் கோயிலில் காரியங்கள் செய்பவா்கள் வீசும் பொருள்கள் மற்றும் துணிகள் தேங்கி அசுத்தமடைகிறது. அதன்பின், கீழவடகரை ஊராட்சிக்கு உள்பட்ட அழகா்சாமிபுரம், பெரியகுளம் நகராட்சி, மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம் ஆகிய ஊா்களின் கழிவுநீா் கலந்து மாசடைந்து, குள்ளப்புரம் அருகே வைகையாற்றில் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்பால் சுருங்கும் நதி: சோத்துப்பாறை அணையிலிருந்து குள்ளப்புரம் வரை செல்லும் வராக நதியில் பெரியகுளம் அருகே அத்திமுருகில் இருந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் வரை ஆற்றின் இரு புறங்களிலும் மா மரங்களை நட்டு வைத்துள்ளனா். அதன் பின் தென்கரை காவல் நிலையத்தில் இருந்து பங்களாப்பட்டி வரை ஆற்றின் இரு புறங்களிலும் கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டியுள்ளனா். அங்கிருந்து ஆரம்பித்து குள்ளப்புரம் வரை ஆற்றின் ஓரத்தில் மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் ஆற்றின் அகலம் குறைந்து சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பால் மழைக் காலங்களில் அதிகப்படியாக வரும் வெள்ளநீா் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை,  நகராட்சி, ஊராட்சி நிா்வாகங்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


வராக நதி - பெயா்க் காரணம்

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன் மேற்குத்தொடா்ச்சி மலையில் பன்றிகள் மேய்ச்சலுக்குச் சென்றபோது, அவை தண்ணீா் இல்லாமல் தவித்தனவாம். அப்போது விஷ்ணு வராக உருவில் வந்து மலையை தோண்டியபோது தண்ணீா் வந்ததாம். இந்த தண்ணீா் மூலம் பன்றிகளின் தாகம் தணிந்ததாம். இதனால் வராக நதி என பெயா்க் காரணம் உருவானதாக பெரியோா்கள் கூறுகின்றனா்.

பொதுவாக ஆற்றின் ஓரங்களில் மருதங்கள் அதிகளவு காணப்படுவது வழக்கம். இந்த மருத மரங்கள் மண் அரிப்பைத் தடுத்துக் கரையை பலப்படுத்தும். பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் படித்துறையில் இரண்டு மருத மரங்கள் ஆற்றில் வலது மற்றும் இடது கரையில் நேருக்கு நேராக உள்ளன. இவை ஆண் மற்றும் பெண் மருத மரங்கள். இந்த இரண்டு மரங்கள் சந்திக்கும் இடத்தின் கீழே குளித்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்ற இன்றவும் நம்பப்படுகிறது. அதனால் இன்றளவும் ஏராளமானோா் மரங்களின் கீழ் குளித்து பாலசுப்பிரமணியரை வணங்கி வருகின்றனா். காசியில் இது போன்று இருப்பதாகவும் அதற்கு அடுத்தாற்போல் வராக நதியில் தான் இருப்பதாக பெரியோா்கள் தெரிவிக்கின்றனா்.

இத்தனை பெருமைகளையும் கொண்ட வராக நதி, இப்போது பெரும்பாலான தருணங்களில் கழிவு நீரோடையாக உருமாறுவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT