உதயகுமார் 
சிறப்புக் கட்டுரைகள்

இறந்தோரை நினைத்து வரும் ராமேசுவரத்தில் இருப்போர் அலையும் துயரம்

தனது குடும்பத்திற்காக இளமையை தொலைத்து விட்டு முதுமையில் பிள்ளைகளால் ஆதரவின்றி விரட்டப்படும் பெற்றோர்கள், கண்ணீருடன் தனது இறுதி நாள்களை கழித்து வருவது இன்றைய தலைமுறையில் அதிகரித்து வருகிறது.

ஜெ. முருகேசன்

பூமி செழிப்புடன் இருக்கப் பெய்து வரும் மழைபோலத் தனது குடும்பத்திற்காக இளமையைத் தொலைத்துவிட்டு, முதுமையில் பிள்ளைகளால் ஆதரவின்றி விரட்டப்படும் பெற்றோர்கள், கண்ணீருடன் தனது இறுதி நாள்களைக் கழித்துவருவது இன்றைய தலைமுறையில் அதிகரித்துவருகிறது.

ஒருபுறம் தங்களுடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக என்று சடங்குகள் செய்ய  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டுவரும் ராமேசுவரம் புனிதத் தலத்திலேயே, மறுபுறம் முதியோர் பலர் ஆதரவற்றுக் கையேந்தி அலையும் துயர நிலையைப் பார்க்க முடிகிறது.

மனிதர்கள் வாழ்வில் உறவு, பாசம், பந்தம் என ஒன்றிணைந்து அனைத்து உறவுகளோடு வாழ்ந்து வந்தோம். அந்த காலகட்டத்தில் தாத்தா, பாட்டி, தாய், தந்தை என அனைத்து உறவுகளை உள்ளடக்கி அமைந்திருந்தது. இதில் குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு மரியாதை கொடுப்பது முதல் அவர்களின் தேவைகள், மருத்துவ உதவிகள் அளிப்பதுடன் அவர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வது, அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பது என உயரிய மரியாதையுடன் முதியவர்களைப் பார்த்து வந்தோம். 

இன்றையாக காலகட்டத்தில் நாம் முதியவர்களை மதிக்க தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை. திருமண உறவில் பிறக்கும் குழந்தைகளுக்காக ஆண், பெண் இருவரும் வாழ்நாள் முழுவதும் உழைக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

தந்தை, தனது மனைவி, குழந்தைகளின் தேவைகளுக்குப் பணத்தை சம்பாதிக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். பிள்ளைகளைப் படிக்க வைப்பதுடன், அவர்களின் தேவையறிந்து அதனை பெற்றுத் தரும் வேலைகளில் ஈடுபடுகிறார். இதிலேயே வாழ்நாளில் 75 சதவீதம் கடந்து விடுகிறது.

தனக்கென்று வாழ்வில் பெரிய அளவிற்கு சேர்க்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு பொருள்களை சேர்த்துக்கொள்கிறனர். மகள், மகன் திருமணம் முடிந்தவுடன் பெற்றோரின் நிலை தலைகீழாக மாறிவிடுகிறது. வயது முதிர்ந்த நிலையில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கடமையாகக் கருதுவது இல்லை. இதனால் பெற்றோர்கள் தேவையற்ற பேச்சுக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

வயது முதிர்வு, வேலை செய்ய முடியாத நிலை, குடும்பச் சூழல், மீண்டும் பிள்ளைகளுடன் சேர முடியாத நிலை என வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்று விடுகின்றனர்.

குழந்தை வேண்டி ராமேசுவரத்தில் பூஜை செய்ய வந்த பெற்றோர்கள், தற்போது தங்களின் இறுதி வாழ்க்கையை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என நினைத்தும் ராமேசுவரம் வந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் செல்லபாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த உதயகுமார் (70). இவரது மனைவி மாரியம்மன். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள்.

இதில், பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், மகனின் பராமரிப்பில் பெற்றோர் இருந்து வந்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக உதயகுமார், தன் ரத்த உறவு கொண்ட உறவினர்கள் வீட்டுக்குச் சென்றபோது, இவரைக் கண்டவுடன் அவர்கள் வீட்டின் கதவை மூடிவிட்டனர். இதனால் மனமுடைந்த உதயகுமார் தான் மட்டும், கடந்த 8 வருடங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். 

திருப்பதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஏர்வாடி... இதன் பின்னர் ராமேசுவரம் வந்துள்ளார். இங்கே தர்மம் எடுத்துத் தனது உணவுத் தேவையை முடித்து வாழ்ந்து வருகிறார்.

உதயகுமாரைச் சந்தித்தபோது, "குடும்பத்திற்காக ஓடி, ஓடி சம்பாதித்து குடும்பத்தை பாதுகாத்தேன். ஆனால் இன்று எனக்கு ஆறுதல் கூறக்கூட யாரும் இல்லை. என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று குடும்பத்தினரிடம் தெரிவித்தும் நீ ஏன் இங்கு வருகிறாய், ராமேசுவரத்திலே வாழ்க்கையை முடித்துக்கொள்" எனக் கூறுவதாக கண்ணீருடன் வேதனையை வெளிப்படுத்தினர்.

இதேபோன்று கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி கூறுகின்றனர்:

"குடும்பத்திற்காக இரண்டு பேரும் உழைத்து இரண்டு பிள்ளைகளையும் படிக்கவைத்து உயர்ந்த வாழ்விற்கு வழி அமைத்துக் கொடுத்தோம். உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய், தந்தையைப் பாதுகாக்க பிள்ளைகள் தவறிவிட்டனர். இதனால் இன்று வாழ வழியின்றி ராமேசுவரத்தில் தர்மம் எடுத்து வருகிறோம். குடும்பத்திற்காக இரவு பகலாக சம்பாதித்தோம், எங்களின் உடல்நிலையைப் பற்றிக்கூட கவலைப்பட்டதில்லை. நோய்வாய்ப்பட்டபோது, பிள்ளைகள் எங்களை பார்த்துகொள்வார்கள் என நினைத்தோம். ஆனால், எங்களை பிள்ளைகள் பாதுகாக்கவில்லை. இறுதிநாள்களை இங்கேயே கழித்து விடுவோம்" எனக் கவலையுடன் தெரிவித்தனர்.

பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்பட்ட, வீட்டை விட்டு விரட்டப்பட்ட , அல்லது வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்ட எண்ணற்ற முதியோர், ராமேசுவரத்தில்  தங்களின்  இறுதி நாள்களைக் கண்ணீருடன் கழித்து வருகின்றனர்.

இறந்த பிறகு பித்ரு சாந்தி செய்ய - முன்னோர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்த - ராமேசுவரத்திற்கு வருகிறார்கள் எண்ணற்றோர். இருக்கும்போது அவர்கள் மனம் வலிக்காமல் பார்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை ராமேசுவரம் வீதிகளில் தடுமாறித் திரியும் முதியோரிடமிருந்து தற்போதைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT