சிறப்புக் கட்டுரைகள்

நாதியற்றவர்களாக வீதிக்கு வந்த கடவுள்!

எம்.ராஜசேகர்

2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதியவர்களின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐ.நா.வின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போது 943 மில்லியனாக (2019) இருக்கும் உலக முதியவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக உயரும்.

கூட்டு குடும்பங்களாக வாழ்ந்த முன்னோர், இல்லங்களில் நல்லொழுக்கமும் நன்னடத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிவழியாய் வாய்மொழி சொல் மூலம் வாழ வழிவகுத்து கொடுத்தது. நாகரீகம் என்ற பெயரில், அற்ப சுகம் என்ற போர்வையில் உருவெடுத்த தனிக்குடும்பமே முதியோர் இல்லத்திற்கு அடித்தளமிட்டுள்ளது.

மகப்பேறு முதல் பள்ளிப்படிப்பு வரை தாய் தந்தையை வாழ்வியல் கதாநாயகர்களாக கற்பனை செய்யும் குழந்தை, வளரிளம் பருவத்தில் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அவர்களுக்கு என்ன தெரியும், நான் யார் தெரியுமா, என்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்ற கர்வம் தலைக்கேறி தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை. அன்னை தந்தையே அன்பின் எல்லை என்ற பூவை செங்குட்டுவன் வரிகளை மறந்து வாழ்வில் பயணிக்க தொடங்குகின்றனர்.

தனி வாழ்வு, தன் மனைவி, தன் குழந்தைகள், தன் குடும்பம், தன் சுகம் என தனி வாழ்க்கையை வாழ தொடங்கி தாய் தந்தையை மறந்து விடுகின்றனர். வயது ஆக ஆக குழந்தைகளாக மனதளவில் மாறிவிடும் பெற்றொர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூட கொடுக்க பெற்ற குழந்தைகள் மறந்துவிடுகின்றன. குடும்ப பிரச்சனை, வேலைப்பழு, பணப்பற்றாக்குறை, போட்டி வாழ்வு என பல காரணங்களால் அவதியுற்று வரும் நிலையில், வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் எப்படி நேரத்தை செலவழிக்க முடியும் என கேள்வியும் கேட்கின்றனர்.

அத்தனை பிரச்னைகளை சமாளித்து தன்னை வளர்த்தெடுத்தவர்கள் தான் பெற்றோர்கள் என்பதை மறந்தும் விடுகின்றனர். அவர்களிடம் இதன் அத்தனைக்கும் தீர்வு கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்றோர்களை வீதிக்கு விட்டவர்களே இங்கு அதிகம் என கூறப்படுகிறது. ஒரு ஆண் மகன் மட்டுமே இத்தகைய சூழலை உருவாக்குகிறான் எனவும் படுகிறது. ஆனால் பெண் பிள்ளை தனது பெற்றோர்களைக் கடைசி வரை போற்றி காப்பாற்றுவாள் எனவும் நியாயப்படுத்தப்படுகிறது. இதில் முதியோர் வீதியேற காரணம் அந்த இடத்தில் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பதை உணர வேண்டும். அது தனது தாய் தந்தையாக இருந்தாலும், மாமியார், மாமனாராக இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டி பாசத்துடன் நடந்துகொண்டால், ஆதரவற்று வீதியேறும் முதியோர்கள் எண்ணிக்கை குறையும்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டு வீதிகளை தஞ்சமடைந்துள்ள முதியவர்களை விட, பெற்ற பிள்ளைகளே வீதிக்கு வந்து பெற்றோர்களை விட்டு செல்லும் முதியவர்கள் தான் அதிகம். மணப்பாறை பகுதியில் மணப்பாறை, துவரங்குறிச்சி பேருந்துநிலையங்களில் இதுபோன்ற முதியவர்களை நாள்தோரும் காணமுடியும். அவர்கள் உணவிற்காக யாசகம் கேட்பதில்லை. தங்களது சிறு சிறு உழைப்புகளை பெற்று உணவு தாருங்கள் என்றே கேட்கின்றனர்.

ஆயிரமாயிரம் முதியோர் வீதிக்கு சென்ற கதைகளை கேட்டும், படித்தும் உள்ள இன்றைய நாகரீக பிள்ளைகள் இன்னமும் பெற்றோர்களை நாதியற்றவர்களாக்கி வீதிகளில் விட்டு செல்வதை வாடிக்கையாக தான் கொண்டுள்ளனர். இப்படி நாதியற்றவர்களாக வீதியேறிய முதியவர்களை மேட்டுக்கடை விடிவெள்ளி முதியோர் இல்ல நிர்வாகிகள் சரிதா, கோபால் தம்பதியினர் எந்தவித தயக்கமுமின்றி அரவணைத்து தங்களது முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்று பாதுகாத்து வருகின்றனர். சுமார் 90-க்கும் மேற்பட்ட வீதியேறிய முதியவர்களை அன்பால் அரவணைத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின் தங்களது இல்லத்திற்கு அழைத்து செல்லும் இந்த தம்பதியினர் கடவுளின் பிள்ளைகள்.

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று என தாய்மையின் பெருமைகளை கூறும் வரிகளை வெறும் வெற்று உணர்வுகளை கொண்டு ரசிக்கத்தான் முடிகிறது. கருணை தாய்க்கு மட்டும் இருந்தால் போதுமா? பிள்ளைகளுக்கு வேண்டாமா? என்பதுதான் விடை தெரியா புதிராக உள்ளது. பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை, சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை என்பதை பிள்ளைகள் உணர்ந்தால் வீதியேறும் முதியோர் எண்ணிக்கை குறையும். நாதியற்றவர்களாக வீதிக்கு வந்த கடவுள், இனி இருக்க கூடாது என்பதே அவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT