சிறப்புக் கட்டுரைகள்

ஆண்டவன் சன்னதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் வாழ்க்கை

கே.பி. அம்​பி​கா​பதி

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டவன் சன்னதியே கதியென காத்துக் கிடக்கும் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாகி வருகிறது.

சுனாமி, கஜா என இரு பேரிடர் காலத்தில்கூட தன்னைக் காத்துக்கொண்டு வென்ற அந்த மூதாட்டி கரோனாவையும் எதிர்கொண்டு வாழும் வாழ்க்கை சில நேரங்களில் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரப் பகுதியில் உள்ளது வேதாதாமிர்த் ஏரி. இதன் கீழ்க் கரையாக அமைந்துள்ள நாகை சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோயில். கோயிலின் வாசல் படிக்கட்டுகளில் அவ்வப்போது அமர்ந்து காணப்படும் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாதசாரிகள், பக்தர்கள் என பலருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.



நாள்தோறும் ஏரியில் குளித்து துவைத்த துணிகளை உடுத்திய நிலையில் காணப்படுவார். யாரிடமும் பேசுவதில்லை. உணவுக்காகவோ, தருமம் கேட்டோ யாரிடமும் கை நீட்டுவதில்லை. அதேநேரத்தில் யாராவது கொடுத்தால் பணிவோடு பெற்றுக்கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பெரும்பான்மையான நேரங்கள் மூடியே கிடக்கும் கோயிலின் மேல வாசல் படிக்கட்டுகளே இவரது வசிப்பிடமாக மாறிவிட்ட நிலையில், மழை, காற்று, இரவு நேரங்களில் ஏரியின் படிக்கட்டுகளையொட்டிக் கட்டப்பட்டுள்ள சிறிய அளவு குகை போன்ற இடமே அவரது உடைமைகளைப் பாதுகாக்கும் மையமாக திகழ்கிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் காணப்படும் இந்த மூதாட்டி யார் என்ற அடையாளம் தெரியாமலே போய்விட்டது. பல நேரங்களில் இந்த பகுதியில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை முகாம்களில் பராமரிக்க அழைத்துச் செல்லும்போதுகூட யாருக்கும் இடையூறு செய்யாத இந்த மூதாட்டி விதிவிலக்காக இருப்பார்.

கோயில் படிக்கட்டுக்கும் குளத்தின் படித்துறைக்கும் மட்டுமே செல்லும் இந்த மூதாட்டி சாலையைக் கடக்கும்போது நிதானமாக செல்வது வழக்கம். சிலநேரங்களில் சங்கடங்களையும் இவர் அடைந்துள்ளார்.



2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்கத்தின்போது தப்பிய இவர், 2018-ல் இந்த பகுதியில் வீசிய கஜா புயலின்போது ஆதரவற்ற நிலையில் இருந்த இந்த மூதாட்டி உயிரோடு இருந்ததே பெரிய விஷயமாக பேசப்பட்டது.

கடந்த சில வாரங்களாக  சற்று உடல் தளர்ந்து காணப்படும் நிலையில், தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா நேரத்திலும் மூதாட்டியின் வாழ்வியல் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மெளனமாக நகரும் மூதாட்டியின் பார்வையில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளதை  உணர முடிகிறது. அந்த  ஜீவன்  யாருக்காக காத்துக் கிடக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT