சிறப்புக் கட்டுரைகள்

சந்ததி வாழ சரியான வழி காட்டக் கூடிய பொக்கிஷங்கள்

தினமணி

அறிவு மற்றும் அனுபவத்தின் வளர்ச்சியுடன், பொறுப்புணர்வும் அடங்கிய முதுமைப் பருவத்தை எட்டும் ஒவ்வொருவரும் நாட்டின் பொக்கிஷங்கள். உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்து தன் சந்ததியை உருவாக்கி அழகு பார்த்து முதுமையடைந்த பெற்றோர்கள், தங்கள் குடும்பத்தவரால் உரிய கவனம் பெறுகின்றனரா? என்றால், இல்லை என்பதற்கான சாட்சிகளாகவே காட்சித் தருகின்றன முதியோர் இல்லங்கள்.

அந்த வகையில், நாகையில் சமூகநலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நாம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர் சிலரிடம் பேசியதிலிருந்து... :

பாசக்கார குடும்பம் நாங்கள்

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, நல்ல உள்ளம் படைத்த சிலரிடம் வீட்டு வேலை, தோட்ட வேலை என வாழ்க்கை நடத்தி வந்து, கடந்த 3 ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் வசித்து வரும் ரெத்தினம்பாளின் மனக் குமுறல்கள் :

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே தான் எங்கள் ஊர். என் கணவர் பொற்கொல்லர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். என் மகனுக்கு 10 வயதும், மகளுக்கு 8 வயதும் இருக்கும்போது, மஞ்சள் காமாலையால் என் கணவர் இறந்து விட்டார். அவ்வளவுதான், எங்கள் வாழ்க்கையில் வறுமை ஒட்டிக்கொண்டது. வயல்வெளி வேலை தான் எங்களுக்கு வாழ்வாதாரமானது. 3 பேரும் வேலைக்குப் சென்றோம். எங்களுக்குத் தங்குவதற்கு ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. சொத்தெல்லாம் கிடையாது.

எங்கள் குடும்பத்தில் கஷ்டம் அதிகமாக இருந்தாலும், பாசத்துக்கு பஞ்சம் இருக்காது. என் மகன் என்னையும், தன்னோட தங்கச்சியையும் அவ்வளவு பாசமாக நடத்துவான். 3 பேரும் அவ்வளவு பாசமாக இருப்போம். மகளுக்குத் திருமணம் முடித்து விட்டு, மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். பக்கத்து ஊரு பெண் தான். மருமகள் வந்த சில மாதங்களில் இருந்தே மகனிடம் மனமாற்றம். என் மீதான பாசத்துக்கு பஞ்சம்.

என்ன காரணமோ தெரியாது, தாய் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டினால் தன் மனைவி ஏதாவது செய்துக்கொள்ளக்கூடும் என்ற பயம் என் மகனுக்கு அதிகமாகத் தொடங்கியது. என் மகன் என்னை அம்மா- ன்னு கூப்பிட்டால் கூட பிரச்னையாகும் என்றளவுக்கு நிலைமை மாறியது. தனியாக சமைத்து, சாப்பிடவும் தொடங்கினேன். அப்போதும், என் மகன் குடும்பத்தில் நிம்மதி ஏற்படவில்லை.

நான் அங்கேயே தொடர்ந்து இருந்தால், என் மகன் குடும்பம் சிதைந்திடுமோ? என்று அச்சப்பட்டுத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். நாகைக்கு அருகே உள்ள பூவத்தடியில் தங்கியிருந்தேன். அப்போது, ஒரு நாள் உடல் நலக்கோளாறு. அங்கு, ஒரு டாக்டரிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ளச் சென்றேன். அவர்கள் கணவர், மனைவி இருவரும் டாக்டர்கள். என் நிலைமையை அறிந்த அவர்கள் தங்கள் வீட்டிலேயே சமையல் வேலை செய்ய வாய்ப்புக் கொடுத்தார்கள். 8 வருடம் அவர்கள் வீட்டிலேயே இருந்தேன்.

இதற்கு இடையிலேயே, ஒரு மகன், மகளைப் பெற்ற என் மகள் இறந்து விட்டாள். என் மகனுக்கு இரு குழந்தைகள் பிறந்திருந்தனர். அதில், ஒருவன் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டான். நான் எங்கே இருக்கிறேன் என்பது என் மகனுக்குத் தெரியும். இருந்தாலும் என் பேரன் இறந்ததுக்குத் தகவல் கூட எனக்குச் சொல்லவில்லை. அந்தளவு என் மகனுக்கு மனமாற்றம்.

ஒரு முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக நான் என் சொந்த ஊருக்குச் சென்றேன். அங்கு என் மகனைச் சந்தித்துப் பேசினேன். எப்போதாவது உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தால் பேசுகிறேன் நம்பர் கொடு என்று கேட்டேன். அவனும் தன்னுடைய போன் நெம்பரை கொடுத்தான்.

அவன் கொடுத்த நம்பருக்கு சில நாள்கள் கழித்து போன் செய்தேன். ஏதோ நம்பர்தவறாக இருந்ததால் என் மகனுக்குக் கிடைக்கவில்லை. பின்னர், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக்குப் பேசி என் மகனுடைய நம்பரைவாங்கி தொடர்புக் கொண்டேன். பல முறை அழைத்தேன். ஆனால் இதுவரை என் அழைப்பை என் மகன் ஏற்கவில்லை. அப்போது எனக்குப் புரியாதது, இப்போதுதான் புரிந்தது. என் பாசக்கார மகன் என்னிடம் பேசுவதற்குக் கூட கண்ணீருடன்.

குடி, குடியைக் கெடுக்கும்...

மதுரை மாவட்டத்திலிருந்து குடும்பத்தைப் பிரிந்து வந்து, இங்கு தங்கியிருக்கும் ஒரு மூதாட்டியிடம் பேசியதிலிருந்து...

1977 - 79 இல் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் கணவரும், நானும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், அந்தக் காலத்திலேயே இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் தான் எங்கள் திருமணம் நடைபெற்றது.

நான் பணியாற்றிய பகுதியில் என்னைப் பார்த்திருந்த எனது கணவர், அவரது குடும்பத்தாருடன் எங்கள் வீட்டுக்கு வந்து, என்னை பெண் கேட்டார். நாங்கள் பெரிதும் தயக்கம் காட்டினோம். ஆனால், என் கணவரின் பிடிவாதத்தால் சம்மதித்தோம். திருமணத்துக்குப் பின்னர், பணியாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரது உணவகத் தொழில் சிறப்பாக நடைபெற்றது. சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தோம். எங்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர்.

இதனிடையே, என் கணவரின் பூர்வீக சொத்தாக இருந்த வீடு கிடைப்பதில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த விரக்தியில் என் கணவர் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி, இறந்தார். மகன்கள் இருவரும் பிளஸ் 2 வரை படித்து, தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். மூத்த மகனுக்குத் திருமணம் செய்து வைத்தோம். அவனுக்கும் மதுப்பழக்கம் ஏற்பட்டது. அதனால், அவனை நானும், என் இளைய மகனும் ஒதுக்கி வைத்துவிட்டோம்.

பின்னர், எனது இளைய மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவனுக்கும் மதுப்பழக்கம் வந்து விட்டது. இது எனக்குப் பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. நான் பார்த்து வளர்த்த என் மகன்கள், மதுப்பழக்கத்துக்கு ஆளாகிப் போனது எனக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது. இனியும் அவர்களுடன் வாழ்வதில்லை என்று முடிவு செய்துதான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். கடந்த 2 ஆண்டுகளாக இங்கே தங்கியுள்ளேன். குடிப்பழக்கம் என் குடும்பத்தை சீரழித்துவிட்டது.” என்றார்

என் மகன் பாவம்...!

நாகை மாவட்டம், தேத்தாக்குடியைச் சேர்ந்த மல்லிப்பாட்டி என்ற மூதாட்டியிடம் பேசியதிலிருந்து...

எங்களுக்கு விவசாய வேலைதான் வாழ்வாதாரம். என் கணவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது என் மகன் 5ஆவதும், என் மகள் 4 ஆவதும் படித்துக் கொண்டிருந்தனர். வயல்வெளி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தினோம். மகன் 10 ஆவது வரையிலும், மகள் 7 ஆவது வரையிலும் படித்தனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு என் மகனுக்குத் திருமணம் முடித்தோம். அப்போதிருந்தே எனக்கு பிரச்னைதான்.

மருமகளின் ஏச்சு, பேச்சுகளைக் கேட்கமுடியவில்லை. எனக்கு 70 வயதாகி விட்டது. முடிந்தளவு உழைத்தேன். இருந்தும், என் குடும்பம் இன்னும் என் உழைப்பை எதிர்பார்த்தது. என் மருமகள் என்னிடம் அதிகம் பேசிய வார்த்தைகள் வேலைக்குப் போ, இல்லாவிட்டால் சாவு என்பதுதான். பேச்சு, அடியாக மாறத் தொடங்கியது. தாங்கிக் கொள்ளும் வலிமை இல்லை எனக்கு. இதைக் கண்டித்தால், பாவம் என் மகனுக்கும் அதே கதிதான். முடியவில்லை, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டுப் புறப்பட்டு, இங்கே வந்து விட்டேன். முதியோர் உதவித் தொகை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றார்.

பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை குளுக்குன்னு சிரித்ததாம் என்பது கிராமத்து சொலவடை. அந்தக் குருத்து மட்டையைப் போல நிகழ்கால தலைமுறையினர் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம் நம் பெற்றோருக்கு நாம் அளிக்கும் புறக்கணிப்பு, நாளை நமக்கும் ஏற்படும் என்பது. விழியை இழந்திருந்தாலும், தன் சந்ததி வாழ சரியான வழியைக் காட்டக் கூடியவர்கள் முதியவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்! முதுமையைப் போற்றுவோம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT