சிறப்புக் கட்டுரைகள்

'பணம் இல்லாதவருக்கு உறவில்லை, உணவில்லை'

க. தென்னிலவன்

ஆதரவின்றி சாலையோரக் கடை வாசல்களையே புகலிடங்களாகக் கொண்டு வாழும் முதியோர்கள் பெரும்பாலும் கடைகளின் ஊதியமில்லா காவலர்களைப் போலாகிவிட்டார்கள்.

குழந்தையாக இருக்கும்போதும் உழைத்துக் களைத்து முதுமை எய்தியபோதும் மனிதர்களை, உறவுகளைப் பேணிக் காத்து வந்துள்ளது மனித சமுதாயம்.

காலத்தின் கோலம் இன்று  குழந்தையாக இருக்கும்போது மட்டும் சில விலக்குகள் அளிக்கப்பட்டும், முதுமை அடையும்போது பணம் இல்லையேல் உறவில்லை என்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதுமே பணமில்லாவிட்டால் சொந்த உறவுகளால் புறக்கணிப்படுவது பொதுவான ஒன்றாகிவிட்டது.

புறக்கணிக்கப்படும் முதியவர்களில் சிலர், சாலையில்  கடை வாசல்களில் ஊதியமற்ற காவலர்களாகத் தஞ்சம் புகுந்து தங்கள் இறுதிக் காலத்தைப் பசி, வலி, வேதனைகளுடன் கழிக்க வேண்டிய சாபத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இழப்பதற்கு எதுவுமின்றி, வாழ்வதற்குக் காரணமின்றி, சாகவும் வழியின்றி வாழும் இவ்வகை முதியோரின் நிலையை ஒரு கணம் உணர்ந்து பார்த்தால் மனசாட்சியுள்ள மனிதனுக்கு  கண்ணீர் வழியும்.

கோவை கந்தேகவுண்டன்சாவடியை பூர்வீகமாகக் கொண்டவர் சர்தார் (70). உடன் பிறந்தவர்கள் 5 பேர், தந்தை முகமது சாயபு மற்றும் தாய் கூடுபி. இருவரும் இதே பகுதியில் விறகு வெட்டி வியாபாரம் செய்யும் வேலைகளைச் செய்து குழந்தைகளை வளர்த்துள்ளனர்.

சர்தாருடன் பிறந்த 3 தங்கை, 2 சகோதர்களுக்கு திருமணம் முடிந்து அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். சர்தார் உடலில் தோலில் பிரச்னை இருந்ததால் திருமணம் செய்துகொள்ளாமல், லாரியில் சுமை இறக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டு, கிடைக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார்.

தாய், தந்தை காலமான பிறகு தனது சகோதர, சகோதரிகள் வீட்டில் தங்கி வாழ்கையை நகர்த்தி வந்துள்ளார். திருமணமின்றித் தனக்கென தனி உறவு இல்லாததால், உடன் பிறந்தவர்களுடன் வாழ்ந்து வந்தார். தினமும் பணிக்கு செல்வதால் வரும் வருமானத்தை கொண்டு, தனது உறவுகளுடன் தங்கி உணவு உண்டுவந்துள்ளார். 

வயதானபோது உழைக்க முடியவில்லை. வருவாய் குறைந்துவிட்டது, அல்லது நின்றுவிட்டது. சுமார் 56 வயதை அடைந்த நிலையில், உழைத்துக் களைத்து ஓய்ந்தபோது உறவுகள் மெல்ல மெல்ல சர்தாரைக் கைகழுவத் தொடங்கி விட்டன. 

மூன்று வேளை உணவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக இரு வேளையானது. இறுதியாக தினமும் ஒருவேளை உணவுக்கே வழியில்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

பேணிப்  பாதுகாக்கப்பட வேண்டிய முதிய வயதில் சர்தார் உணவின்றி, தங்க இடமின்றி க.க.சாவடி பகுதிகளிலேயே கிடைக்கும் திண்ணைகளில் தங்கி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சாவடியில் உள்ள சாய்பாபா கோயிலில் கிடைக்கும் உணவு மட்டுமே தன்னுடைய உயிரைப் பிடித்துவைத்திருக்கிறது என்று கூறும் சர்தார், முதுமையில் உறவுகள் இல்லாத கொடுமைகளைக் கண்ணீருடன் வெளிப்படுத்துகிறார்.

உடலில் ஏற்படும் வலி எதனால் என்று புரியாமலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆள் இல்லாததாலும் கடை வாசல்களில் ஊதியமில்லா காவலராகக் காலம் கழித்து வருகிறார்.

பணமின்றி, துணையின்றி வாழும் இந்தக் கொடுமையான வாழ்க்கையே இன்று பல முதியோரின் வாழ்வு முறையாக உள்ளது. இறந்தால் மரியாதையுடன் உடலை அடக்கம் செய்வார்களா தெரியவில்லை என்கிறார் சர்தார்.

உறவு இல்லை, உடலால், மனதால் உணரும் வலியைப் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லை. இவற்றையெல்லாம் தெரிவிக்கும்போது மாலை மாலையாகத் துயரத்தில் வழிகிறது சர்தாரின் கண்ணீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

SCROLL FOR NEXT