மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படம் சித்திரிப்பு / முத்துராஜா
சிறப்புக் கட்டுரைகள்

2025: ராகுல் காந்தி வீசிய வாக்குத் திருட்டு குண்டுகள்!!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் பற்றி...

எஸ். ரவிவர்மா

2025-ல் இந்திய அரசியலை அதிர வைத்த சம்பவங்களில் முக்கியமானவை - தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள்..!

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத வகையில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற அதிக தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜகவை அசைத்துப் பார்த்தது.

இதனைத் தொடர்ந்து, சில மாதங்களில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்திய கூட்டணி வெற்றிபெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் படுதோல்வியைச் சந்தித்தன.

இந்த தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த காங்கிரஸ், மகாராஷ்டிரத்தில் போலி வாக்காளர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும், கர்நாடகம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக சில சான்றுகளை வெளியிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராகுல் காந்தி.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலின்போது, பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே வென்றன. காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றின.

பின்னர், 5 மாத இடைவெளியில் 2024, நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், எதிா்க்கட்சி கூட்டணிக்கு 50 இடங்கள் கூட கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் மக்களவை - பேரவைத் தோ்தல்களுக்கு இடையே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கத்தில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மக்கள்தொகையைவிட வாக்காளர்கள் அதிகம்

தில்லியில் வாக்குத் திருட்டு தொடர்பாக முதல்முறையாக பிப். 7 ஆம் தேதி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ்) கட்சியின் சஞ்சய் ரெளத் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள்:

"அரசு தரவுகளின்படி, மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை 9.54 கோடியாகும். ஆனால், வாக்காளா் எண்ணிக்கையோ 9.7 கோடியாக உள்ளது. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகையை விட வாக்காளா் எண்ணிக்கை அதிகம் இருப்பது எப்படி?

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலுக்கு பிறகான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இது, ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் மக்கள்தொகைக்கு இணையானதாகும். கடந்த 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் 32 லட்சம் வாக்காளா்களே சோ்க்கப்பட்டுள்ளனா். 5 ஆண்டுகளைவிட 5 மாதங்களில் அதிக வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரத்தில் மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல் வாக்காளா் பட்டியல்களின் மையப்படுத்தப்பட்ட தரவுகளை எதிா்க்கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வழங்காதது ஏன்?"

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முழு உண்மைகளுடன் எழுத்துபூா்வமாக பதிலளிப்போம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ராகுலின் முதல் அணுகுண்டு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக தெரிவித்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு மூலம் பாஜக வெற்றிபெற்றதற்கான ஆதாராங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அந்த அணுகுண்டை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கா்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் வாக்குத் திருட்டு மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறி, சில தரவுகளையும் வெளியிட்டார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டில் முக்கியமானவை:

"பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலிருந்து பதிவாகியிருந்த வாக்காளா் தரவுகள் காங்கிரஸ் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் 6,26,208 வாக்குகளும், பாஜக 6,58,915 வாக்குகளும் பெற்றன. வித்தியாசம் 32,707 வாக்குகள் ஆகும். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 7-இல் 6 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,00 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

இந்த 1,14,046 வாக்குகளில், 1,00,250 வாக்குகள் வாக்குத் திருட்டு மூலம் பெறப்பட்டது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 11,965 போ் போலி வாக்காளா்கள். 40,009 போ் போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள். 10,452 போ் ஒரே வீட்டு முகவரியில் வாக்காளா்களாகப் பதிவு செய்துவா்கள். 4,132 போ் போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள். 33,692 போ் புதிய வாக்காளா்களுக்கான படிவத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்காளா்களாகியுள்ளனா்.

உதாரணமாக, குர்கிரத் சிங் டாங் என்ற வாக்காளரின் பெயர், மகாதேவபுரா தொகுதிக்குட்பட்ட வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் அதே புகைப்படம் மற்றும் விவரங்களுடன் இடம்பெற்றுள்ளன. பல வாக்காளர்களின் முகவரி 0, -, # என்று வாக்காளர் பட்டியலில் உள்ளது."

தேர்தல் ஆணையம் பதில்

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, வாக்காளா் பெயா் உள்ளிட்ட விவரங்களை வாக்காளா் பதிவு விதி 1960-இன் விதி எண் 20(3)(பி)-இன் கீழான உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு தோ்தல் அதிகாரிகளிடம் ராகுல் சமா்ப்பிக்க வேண்டும் என்று கா்நாடகா தலைமை தோ்தல் அதிகாரி கடிதம் அனுப்பினார்.

ராகுலுக்கு கெடு

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக, தோ்தல் விதிமுறைகளின்கீழ் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை - செல்லாதவை என்று உறுதிசெய்யப்படும். தோ்தல் ஆணையத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தியதற்காக, நாட்டு மக்களிடம் அவா் மன்னிப்பும் கேட்க வேண்டும். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது.” எனத் தெரிவித்தார்.

தி அலந்த் ஃபைல்ஸ்

தில்லியில் செப். 18 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘தி அலந்த் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் கா்நாடக மாநிலத்தில் 2023 தோ்தலின்போது அலந்த் தொகுதியில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டி சில சான்றுகளை வெளியிட்டார்.

ராகுல் தெரிவித்ததாவது:

“அலந்த் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்கள் 6,018 பேரை பட்டியலில் இருந்து நீக்க சிலா் முயற்சி செய்தனா். அதுபோல, மகாராஷ்டிர மாநில தோ்தலின்போது ரஜூரா தொகுதியில் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடைவெளியில் தொடா்ச்சியாக 6,850 புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் பணி நடைபெற்றது.

அலந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள 10 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த வாக்காளா்களை அதிக எண்ணிக்கையில் நீக்க முயற்சி நடந்தது. கா்நாடகத்துக்கு வெளியே உள்ள கைப்பேசி எண்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து விசாரித்துவரும் கா்நாடக மாநில சிஐடி போலீஸாா், இந்தப் பெயா் நீக்கத்துக்கான விண்ணப்பங்கள் எங்கிருந்து சமா்ப்பிக்கப்பட்டன என்பதற்கான வலைதள (ஐபி) முகவரி மற்றும் ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) பதிவு விவரங்களைத் தருமாறு தோ்தல் ஆணையத்துக்கு கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பியுள்ளனா். ஆனால், இதுவரை தோ்தல் ஆணையம் அளிக்கவில்லை.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது தோ்தல் ஆணையத்துக்குத் தெரியும். இந்தத் தகவல்களை தோ்தல் ஆணையம் தர மறுக்கிறது என்றால், ஜனநாயகத்தை படுகொலை செய்பவா்களை தோ்தல் ஆணையம் பாதுகாப்பதாகவே அமையும். அந்த வகையில், வாக்குத் திருடா்களையும், நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பவா்களையும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாதுகாத்து வருகிறாா்.” எனத் தெரிவித்தார்.

நீக்க முயற்சித்தது உண்மை: தேர்தல் ஆணையம்

”2023-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது அலந்த் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்களை நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அது வெற்றி பெறவில்லை. எந்தவொரு நபரும் இணைய வழியில் வாக்காளரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடியாது.” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

எச் ஃபைல்ஸ் (ஹரியாணா ஃபைல்ஸ்)

2024 ஹரியாணா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய அளவிலான வாக்குத் திருட்டு நடைபெற்றதாக தெரிவித்த ராகுல் காந்தி, எச் ஃபைல்ஸ் என்ற பெயரில் சில சான்றுகளை வெளியிட்டார்.

நவ. 5 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல், ஹரியாணா பேரவைத் தேர்தலின்போது 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராகுல் தெரிவித்ததாவது:

”ஹரியாணா வாக்காளா் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் 5,21,619 பேரின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 93,174 வாக்காளா்கள் போலியான முகவரியைக் கொண்டுள்ளனா். 19,26,351 போ் போலி வாக்காளா்களாக இடம்பெற்றுள்ளனா். அதாவது, மாநிலத்தில் 8-இல் ஒருவா் போலி வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், 1,24,177 வாக்காளா்களுக்குப் போலியான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மோசடி காரணமாக, 2024 தோ்தலில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம், ஹரியாணாவில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் இந்த ‘ஆபரேஷன் ஆட்சித் திருட்டு’ திட்டம், ஹரியாணாவில் 2024-இல் காங்கிரஸுக்கு கிடைத்திருக்க வேண்டிய மாபெரும் வெற்றியை தோல்வியாக மாற்றிவிட்டது.

ஹரியாணாவின் ராய் தொகுதியில் 10 வாக்குச்சாவடி வாக்காளா் பட்டியலில் பிரேஸில் நாட்டு மாடல் அழகியின் புகைப்படம் ‘சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி’ என்ற போலி பெயா்களில் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, மாநிலம் முழுவதும் பரவலாகத் திட்டமிட்டு 25 லட்சம் போலி வாக்காளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம், “ஹரியாணாவில் 2024 பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றது என்றால், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா் அப்போதே ஏன் அதுகுறித்து புகாா் எழுப்பவில்லை? ஹரியாணா வாக்காளா் பட்டியல் குறித்தும் எந்தவொரு புகாரோ அல்லது ஆட்சேபமோ தோ்தல் ஆணையத்திடம் இதுவரை சமா்ப்பிக்கப்படவில்லை.” என்று ராகுலுக்கு கேள்வி எழுப்பியது.

ராய் தொகுதியில் 10 வாக்குச்சாவடி வாக்காளா் பட்டியலில் பிரேஸில் நாட்டு மாடல் அழகியின் புகைப்படம்

நாடாளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்விகள்

மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி வாக்குத் திருட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

ராகுல் எழுப்பிய கேள்விகள்

  1. தலைமைத் தோ்தல் ஆணையா், இரண்டு தோ்தல் ஆணையா்களைத் தெரிவு செய்யும் தோ்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன்?

  2. குறிப்பிட்ட நபா்தான் தோ்தல் ஆணையராக வரவேண்டும் என்பதில் பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மிகுந்த ஆா்வத்தைக் காட்டுவது ஏன்?

  3. தோ்தல் ஆணையராகப் பதவியில் இருக்கும்போது மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளுக்காக தோ்தல் ஆணையா்கள் தண்டிக்கப்படாத வகையில் சட்டத்தில் மாற்றம் செய்து, இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத வரலாற்றை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு செய்தது. தோ்தல் ஆணையருக்கு இந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் அளித்தது ஏன்?

  4. தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு வாக்குச்சாவடி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அழிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்தது ஏன்?

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிரதமருக்காகவே செய்யப்பட்டுள்ளன. ஹரியாணா மாநில வாக்காளா் பட்டியலில் பிரேஸில் மாடல் அழகியின் புகைப்படம் 22 முறை இடம்பெற்றிருந்தது. அதன் மூலம், அந்த மாநிலத்தில் வாக்குத் திருட்டு நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.

மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தி

ராகுலின் கோரிக்கை

  • தோ்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக கணினியில் படிக்கக்கூடிய வகையிலான வாக்காளா் பட்டியல் விவரங்களை அனைத்து கட்சிகளுக்கும் தோ்தல் ஆணையம் அளிக்க வேண்டும்

  • தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அழிக்க அனுமதிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்

  • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கட்டமைப்பு விவரத்தை தெரிவிப்பதோடு, அவற்றை அணுகவும் எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்

  • தோ்தல் ஆணையா்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், ”தோ்தல் ஆணையத்துடன் கைகோத்து, மிகப் பெரிய தேசவிரோத நடவடிக்கையாக வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றி வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

அமித் ஷா பதில்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்து பேசியதாவது;

”தோ்தல் தோல்விக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் குறைகூறும் பாரம்பரியத்தை கடந்த 2014-இல் தொடங்கியது காங்கிரஸ். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தனது தோல்விகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மீது காங்கிரஸ் தொடா்ந்து பழிபோட்டது. அது எடுபடாததால், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை எழுப்பியது.

காங்கிரஸின் தோல்விகளுக்கு அதன் தலைமையே காரணம். மாறாக, வாக்குப் பதிவு இயந்திரமோ, ‘வாக்குத் திருட்டோ’ அல்ல. கடந்த 2004, 2009-இல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.” எனத் தெரிவித்தார்.

‘வாக்குத் திருடா்களே, அரியணையைவிட்டு வெளியேறுங்கள்’

தில்லி ராம்லீலா மைதானத்தில் டிச. 14 ஆம் தேதி, ‘வாக்குத் திருடா்களே, அரியணையைவிட்டு வெளியேறுங்கள்’ என்ற பிரதான முழக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேசியதாவது: “உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போராட்டத்தில், தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுகிறது. தாங்கள் மோடியின் தோ்தல் ஆணையமல்ல; மக்களின் தோ்தல் ஆணையம் என்பதை அவா்கள் மறந்துவிடக் கூடாது.

மோடி - ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவதற்கு உண்மை - அஹிம்சையுடன் காங்கிரஸ் பாடுபடும். இது நிகழ காலமெடுத்தாலும், இறுதியில் உண்மையே வெல்லும்.” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஆட்சித் திருட்டின் புதிய ஆயுதமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆர்) பாஜக கையில் எடுத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

பிகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்ற குஜராத்தில் 73 லட்சம், மேற்கு வங்கத்தில் 58 லட்சம், ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக தமிழகத்தில் கிட்டத்திட்ட ஒரு கோடி (97 லட்சம்) வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை இழந்துள்ளனர்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நீக்கப்பட்ட ஒரு கோடி வாக்காளர்களில் எத்தனை பேர் விண்ணப்பித்து மீண்டும் வாக்குரிமையைப் பெறப் போகிறார்கள் என்பதற்கு 2026-ல்தான் பதில் கிடைக்கும்.

வாக்குத் திருட்டு தொடர்பான அணு குண்டை மட்டுமே ராகுல் காந்தி வீசியுள்ளார். இன்னும் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறதாம். 2026-ல் என்னென்ன குண்டுகள் வீசப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Year Ender 2025: The vote-rigging allegations hurled by Rahul Gandhi!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாதந்தோறும் முருகனுக்கு திருவிழாக்கள்: மருத்துவா் சுதா சேஷய்யன் பேச்சு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை: காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கலாமா? - நீதிமன்றம்

து மேரி மெயின் தேரா மெயின் தேரா து மேரி படத்தின் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

முதல்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT