தமிழ்நாட்டில் ஏறத்தாழ 90 சதவீத பெண்கள் முறைசாரா பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மை, கூலி வேலைகள் மற்றும் வீட்டை அடிப்படையாகக் கொண்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘பெண்கள் தொழிலாளர்கள் படை பங்கேற்று விகிதம் (Female Labour Force Participation Rate)' அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 2022 23 இல் ஏறத்தாழ 43% பெண்கள் பணியாளர்களாக இருக்கிறார்கள். இது பல மாநிலங்களின் சராசரி மற்றும் தேசிய சராசரியை விடவும் அதிகம். கிராமப்புறங்களில் சுமார் 14.5% பெண்கள், நிலையான சம்பளப் பணிகளில் உள்ளனர். நகர்ப்புறங்களில் இதன் விகிதம் அதிகமாகவும், தொடர்ந்து வளர்ச்சியும் அடைந்துவருகிறது.
தமிழ்நாட்டில், 2019-20 இல் சுமார் 6.3 லட்சம் பெண்கள் உற்பத்தித் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலங்களுக்கிடையில் உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
இருந்தும் பெண்களின் மீதான பாலின அடிப்படையிலான பேதமைகள், வேலை செய்யும் இடங்களில் அவர்கள் மீது ஏவப்படும் அதிகப்படியான அழுத்தம், தொழிலாளர்களுக்கு அவர்களின் பாலின ரீதியான சிக்கல்களை பேசவும், அடிப்படை உரிமைகளை கேட்கவும், நீதிமுறையில் விடைக்காணவும் வாய்ப்புகள் இருப்பதே இல்லை.
பெண்கள் தொழிலாளர் சங்கம் (பிடிஎஸ் - PTS): அமைப்பின் தோற்றம் மற்றும் பணிகள்
சென்னையில் உள்ள பெண்கள் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சுமதி கூறுகையில், ”சென்னையில் மிகப்பெரிய சங்கமாக முறைசாரா பெண்கள் தொழிற்சங்கம் உள்ளது. இது 1998 இல் தொடங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் அமைத்து, ஏறத்தாழ 25 ஆயிரம் பெண் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு.
இந்த சங்கம் குறிப்பாக முறைசாரா பெண் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக வேலை இடங்களில் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக. புதிய வர்த்தக சங்க முன்முயற்சி (NEW TRADE UNION INITIATIVE) இணைந்து உருவாக்கப்பட்டது.
என் அம்மாவும் வீட்டு வேலைக்கு சென்றவர் தான். பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பாலின ரீதியான சிக்கல்களை நாம் கண்டு கொள்வதே இல்லை, அதிலும் முறைசாரா பணிகளில் ஈடுபடும் பெண்களின் நிலை இன்னும் அவலம். அவர்களுக்கான தார்மீக உரிமைகளை கேட்டுப் பெற கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதில் பெருமளவிலான தொழிற்சங்கங்களில் ஆண்களே பெரும்பான்மை வகிக்கிறார்கள். அவர்களால் பெண் தொழிலாளியின் சிக்கலை புரிந்து கொண்டு தீர்வு காண முடியாது.” என்றார்.
நான் வீட்டு வேலைக்காரி இல்லை, ஒரு தொழிலாளர்
பெண்கள் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் விஜயலட்சுமி கூறுகையில், ”நான் அம்பத்தூர் கிளையை உறுப்பினராக இருக்கிறேன், 2007 இல் இருந்து வீட்டு வேலை பணியாளராக இருக்கிறேன். ஏறத்தாழ அதே ஆண்டு சங்கத்திலும் இணைந்து விட்டேன். தொடக்க காலத்தில் வீட்டு வேலைக்கு போகிறவர் என்றால் அனைவரும் இழிவான தொழிலாகப் பார்ப்பார்கள். எனது உறவினர்களே என்னை ஒதுக்கி வைத்தார்கள். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வீட்டு வேலை பணியாளராக என்னுடைய சுயமரியாதையை விட்டுத் தராமல் வேலை செய்கிறேன். அதற்கு காரணம், சங்கம் என்னை வழி நடத்துனதுதான். நானும் ஒரு தொழிலாளர் என்கிற எண்ணத்தை எனக்கு கொடுத்தார்கள். தற்போது நான் வேலை செய்யும் வீட்டில்கூட என்னை எல்லாரும் விஜயலட்சுமி அம்மா என்று தான் அழைப்பார்கள். ஒருவேளை யாரேனும் அவ்வாறு அழைக்க தவறினாலும் நான் அவர்களிடம் இவ்வாறு அழைக்குமாறு அறிவுறுத்துவேன். இவை அனைத்தும் சங்கம் கொடுத்த கெளரவம்தான்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீட்டு வேலை பணியாளரான கற்பகம் கூறுகையில்,
“நான் கேளம்பாக்கம் கிளையில் உறுப்பினராக உள்ளேன். எனக்கு 48 வயதாகிறது, சங்கத்தில் சேர்வதற்கு முன்பு வரை வார நாள்களில் எங்களுக்கான விடுப்பு கேட்பது சுலபமல்ல. எங்களிடமே தயக்கம் இருந்தது. அதுமட்டுமின்றி பணி செய்யும் இடங்களில் இரண்டு மூன்று மணி நேர வேலைக்கு ஏன் விடுப்பு என்று கேட்பார்கள். ஆனால் இப்போது மாதத்தில் நான்கு விடுப்பு அளித்தால் மட்டுமே அவர்களிடம் வேலைக்கு செல்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத் தொகை முறையாக கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன். நான் தொழிலாளியாக என்னை அடையாளம்படுத்திக் கொள்வது என் உரிமைகளை கேட்பதற்கான தைரியத்தை அளிப்பது சங்கம்தான். என்னைப் போல உள்ள சக பெண் தொழிலாளர்களுக்கும் அவர்களின் உரிமைகளை கேட்பதற்கு துணை நிற்கிறேன்.” என்றார்.
சங்கத்தின் போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான செயல்பாடுகள்
சங்கம் எதிர்கொண்ட ஒரு இக்கட்டான வழக்கு பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. நியூ கன்னி அம்மன் நகரில் வீட்டு வேலை பணியாளராக இருக்கும் ஒரு பெண் தொழிலாளியின் மகளுக்கு பள்ளியில் பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. அந்த வழக்கை காவல்துறை ஏற்க மறுத்ததால், 2023 - 24 ஓராண்டு காலம் போராட்டம் நடத்தி அந்த வழக்கை பதிவு செய்து குழந்தைகள் நலக் கமிட்டியுடன் பெண்கள் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து தொழிலாளர்களுக்கும் அந்த குழந்தைக்கும் சார்பாக வழக்கு தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தி வருவதாக சங்கத்தின் நிர்வாகி சுமதி தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்தப் பள்ளியில் அடிப்படை கட்டுமானத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்த நிலையில், பள்ளியின் முன் போராட்டங்கள் நடத்தி சுற்றுச்சுவர்கள் மற்றும் மின்விளக்கு அமைவதற்கான வழிகள் செய்துள்ளோம் என்றார் அவர்.
எங்கள் போராட்டங்கள் பெண் தொழிலாளர்களுக்காக பணியில் ஏற்படும் சிக்கல்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்து துணை நின்று அவர்களுக்கு வலு சேர்ப்பது எங்கள் நோக்கமாகும்.
கடந்த ஆண்டுகூட ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்காக பெண்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் தொடர்ச்சியாக பெரியதாய் என்னும் 70 வயது மதிக்கத்தக்க தொழிலாளிக்கு கடந்த 30 ஆண்டுகளாக வீட்டு பணியாளராக இருந்து வந்தார். அவர் தனது ஓய்வூதியத்திற்காக வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தும் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்காமலே இருந்தது. பெண்கள் தொழிலாளர்கள் சங்கம் இந்த பிரச்னையில் தலையிட்டு அவர்களுக்கான ஒரு லட்ச ரூபாய் ஓய்வூதியத்தை சட்டப்படி வாங்கிக் கொடுத்தோம் என்றார் சுமதி.
சங்கத்தின் நோக்கமும் தலைமைத்துவத்தின் பார்வையும்
பெண்கள் தொழிலாளர் சங்கம் தொடங்கியதற்கான காரணமே பெண் தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, அவர்களுக்கான சமூக பாதுகாப்பை உருவாக்கவும்தான் என்று சங்கத்தின் நிறுவனர் சுஜாதா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“முதன்முதலில் பெண் கட்டட தொழிலாளர்கள் உடன் இணைந்து பணி செய்ய தொடங்கினோம். பின்பு முறைசாரா பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பெண் தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு செயல்பட தொடங்கினோம்.
இந்த சமூகத்தில் பெண்களின் தலைமைத்துவத்திற்கான இடமே அளிப்பதில்லை. அதுமட்டுமின்றி இங்கு நிலவும் சாதிய மற்றும் பாலின பாகுபாட்டின் அதிக பாதிப்படைவது பெண்கள்தான். பெண்களிடம் சட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் அவர்களின் தார்மீக உரிமைகளான மனித உரிமை, தொழிலாளர்களின் உரிமை, நிலம் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான உரிமைகளையும், அரசியல் அமைப்பை பற்றியும் புரிதலை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
சட்டப் போராட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்கான கோரிக்கைகள்
2004 ஆம் ஆண்டிலிருந்து, பெண்கள் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பு, முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தது. 2007 ஆம் ஆண்டு, தமிழக அரசு உள்நாட்டு வேலைக்காரர்களை 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்தது.
2009 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், தொழிலாளர்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. 2015 ஆம் ஆண்டில் அந்த ஆலோசனைக்குழு கலைக்கப்பட்டது, பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டன. இதனால், 2004 லிருந்த நிலை அதேபோல் தொடர்ந்தது. தற்போது வரை முறைசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக 47 ரூபாய் ஒரு மணி நேரத்திற்கு விகிதம் தரப்படுகிறது. எங்களின் கோரிக்கை ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 130 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
பெண்களின் உழைப்பு எந்த வடிவிலும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு சம்பளமாக இருந்தாலும், ஓய்வூதியமாக இருந்தாலும் அல்லது பிற எந்த சலுகைகளாக இருந்தாலும் குறைவான தொகையே பெறுகிறார்கள்
அரசாங்கம் முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களை கருத்தில் கொண்டு திட்டங்கள் அமைப்பது இல்லை. சில திட்டங்கள் அமைத்திருந்தாலும் அது சரிவர இயங்குவது கிடையாது. இதிலும் எதிர்கால சிக்கல்களை கணக்கில் கொண்டு திட்டங்கள் வகுப்பதில் கிடையாத இதுபோன்ற தருணங்களில் தான் அரசாங்கம் எங்களைப் போல உள்ள தொழிற்சங்கள் உங்களுடன் உரையாடல் நிகழ்த்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி இணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள்
பெண்கள் கூடுவதற்கான இடம் சமூகத்தில் பொதுவாக அமைவதே இல்லை, அதன் தேவையை இந்த அரசாங்கம் பெரிதும் கருத்தில் கொள்வதே கிடையாது. எல்லா இடங்களிலும் பெண்கள் கூடுவதற்காக சமூக மையங்கள் அமைக்க வேண்டும். அதில் அவர்கள் தனக்கான பாலியல் அடிப்படையில் சிக்கல்கள் மற்றும் சமூக சிக்கல்களைப் பற்றிய கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பளிக்கும் அதுமட்டுமின்றி அதில் நூலகம் இருப்பது அவசியம்.
நாங்கள் எங்கள் உறுப்பினர்கள் மற்றும் முறைசாரா பணிகளில் இருக்கும் பெண்கள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் மாதம்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.
இந்த பயிற்சி வகுப்புகளில் அடங்கும் பிரிவுகள் தன்னறிமுகம், பணியிட அடையாளம், ஊதிய கணக்கீடு, ஆரோக்கிய வரைபடம் இந்த வகுப்புகளில் ஏன் அவர்கள் தங்களை தொழிலாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை மற்றும் உரிமைகளைப் பற்றியும். அவர்களின் பனிப் பொறுப்பை அறிதல் மற்றும் பணியிடங்களில் அவர்களுக்கான உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வும் வீட்டு தேவைகளை கணக்கில் கொண்டு எவ்வாறாக பணி செய்யும் இடத்தில் நியாயமான ஊதியத்துக்காக கோரிக்கை வைக்க வேண்டும் வேலை பளு காரணமாக அவள் உங்கள் உடல்களில் ஏற்படும் உபாதைகளை பற்றியான சுயபுரிதலை உருவாக்குவோம்.
தொழிலாளர்களின் தரவு சேமிப்பில் எதிர்கொள்ளும் சவால்கள்
நாங்கள் பல சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். அதில் எங்களுக்கு சவாலான விஷயம் என்னவென்றால் கட்டாய இடப்பெயர்ப்புதான். முறைசாரா தொழிலாளர்களின் தனிப்பட்ட தரவுகளை ஆவணப்படுத்துவதில் இதில் சிக்கல் உள்ளது. எடுத்துக்காட்டாக வேலை இடத்தின் அடையாளத் தகவல், அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகளின் கல்வியைப் பற்றியான தரவு, வேலைக்குச் செல்லும் பொழுது நடக்கும் விபத்துகளின் கணக்கீடு போன்ற தரவுகளை சேமிப்பதுதான் கடினம். இந்த தரவுகள் முக்கியமானவை, இதைக்கொண்டுதான் எதிர்கால தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திட்டங்களை வகுக்க முடியும்.
இங்கு முறைசாரா பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்கள் என்னவென்றால், அவர்களுக்கு பணியிடங்களில் அவர்களுக்கான ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதில்லை, விடுப்புகள் தரப்படுவதில்லை, பல ஆண்டுகள் வேலை செய்துவந்த வீட்டில் எந்தவொரு காரணமும் சொல்லாமல் அவர்கள் நீக்கப்படும் பொழுதும் அவர்களுக்கான பணிக்கொடைகூட அளிக்கப்படுவது கிடையாது. இதற்கான அடிப்படையான காரணம் என்னவென்றால் சமூகமா சரி, தொழிலாளர்களோ சரி, ஒரு வீட்டு வேலை பணியாளர்களை தொழிலாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. நாங்கள் அதைதான் உடைக்க நினைக்கிறோம். அதன் தேவைகளை அவர்களுக்கு புரியவைத்து தொழிலாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள ஊக்கமளிக்கிறோம்.
எங்களின் கோரிக்கைகள்
1. வீட்டு வேலை தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை 189யை மத்திய அரசு அங்கீகரிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
2. வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு என்று தனி சட்டம் வேண்டும்.
3. பணி பாதுகாப்பு உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
4. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் POSH சட்டத்தின்படி உள்ளூர் புகார் குழுக்களை (எல்சிசி - LCC) உடனடியாக அமைக்க வேண்டும்.
5. 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
6. ஓய்வூதிய வயதை 55 ஆக குறைத்து, மாதம் ரூ. 3000 வழங்கிட வேண்டும்.
பெண்களின் ஒருங்கிணைப்பே சமத்துவத்தின் அடிப்படை
பெண் தொழிலாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் தான் சமூக மாற்றத்தின் குறியீடுகள், தீவிர நகரமயமாக்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகச் சூழலில் முறைசாரா பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மீதான சுரண்டல் வலுக்கிறது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பொழுது அவர்களுக்கு எதிராக நிற்கும் சமூக மனப்பாங்கை உடைப்பதற்கும் அவர்கள் ஒருங்கிணைந்து தமக்கான உரிமைகளுக்காக குடல் கொடுப்பதற்கு இதுபோன்ற சங்கங்களின் பங்கு மிகவும் அவசியமானது.
கட்டுரையாளர் - அக்ஷரா சனல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.