நாடு விடுதலை பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்த நிலைமைக்கு நம் மாநில அரசுகளைத் தள்ளிவிட்டதோ என ஐயம் கொள்ளச் செய்கிறது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்திருக்கும் ஆலோசனை கருத்து!
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் தராமல் காலந்தாழ்த்திக் கொண்டிருந்த ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அதிரடியான வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்ட இருவர் அமர்வு, மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் - முன்னெப்போதுமில்லாத வகையில் - காலவரையறையை நிர்ணயித்துத் தீர்ப்பளித்தது. இவற்றைப் பின்பற்றத் தவறினாலோ, தாமதித்தாலோ ஆளுநரின் செயல்பாடு நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், எதுவுமே செய்யாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்க ஆளுநருக்கு எவ்வித தனி அதிகாரமும் (வீட்டோ) கிடையாது. தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாகத் தனது ஒப்புதலுக்காக அனுப்பிவைத்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடு சட்டத்துக்கு எதிரானது; சட்டப்படி தவறானது. எனவே, இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. முக்கியமாக, மசோதாக்களை நீண்ட காலமாக ஆளுநர் தன் வசம் வைத்திருந்து தாமதப்படுத்தி, பிறகு அவற்றைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிய செயல்பாட்டில் நேர்மை காணப்படவில்லை என்று குறிப்பிட்டதுடன், ஆளுநருக்கு மசோதாக்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலேயே அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என அரசமைப்பின் 142-வது விதியின்படி உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் உத்தரவையும் பிறப்பித்து சட்டமாக்கியது இருவர் அமர்வு.
தீர்ப்பின் ஒரு பகுதியாக,
“அரசியல் காரணங்களுக்காக மக்களின் விருப்பத்தைத் தடுக்கவோ, தடைகளை உருவாக்கவோ அல்லது மாநில சட்டப்பேரவையின் குரலை நெரிக்கவோ கூடாது என்பதில் ஆளுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
“ஜனநாயக செயல்பாட்டின் விளைவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். ஆளுநர் என்பவர் உணர்ச்சிவசப்படாமல் செயலாற்ற வேண்டும். அரசியல் நோக்கங்களுடன் வழிநடத்தப்படாமல், எடுத்துக்கொண்ட அரசமைப்பு உறுதிமொழியின் புனிதத் தன்மையால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும். முரணாக அமையும் எந்தவொரு நடவடிக்கையும் அரசமைப்பின்படி எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்தை மீறுவதாகும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம், காலங்காலமாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் – மத்திய அரசால், ஆளுங்கட்சியால் நியமிக்கப்படும் - ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு ‘மணி கட்டியதாக’ வரவேற்கப்பட்டது; இப்போதும், பின் எப்போதும் ஆளுநர்களின் செயல்பாடுகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகவும் கருதப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்தத் தீர்ப்பு தொடர்பாக, உரிய காலக்கெடு தாண்டிய பிறகு திடீரென, 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுத, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் (கருத்து தெரிவித்த மறுநாள் ஓய்வு பெற்றார்!), நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து, ஒருமனதாக, நீண்டதொரு விளக்கத்தை அளித்திருக்கிறது. இந்த விளக்கம்தான் வேதாளத்தைப் பிடித்து மீண்டும் ஏணி வைத்து முருங்கை மரத்திலேயே ஏற்றிவிட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது!
அரசமைப்பின்படி ஆளுநருக்குள்ள மூன்று தேர்வுகளை – மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பலாம், நிறுத்திவைத்து அதைப் பேரவையின் மறு ஆய்வுக்குத் திருப்பி அனுப்பலாம் – குறிப்பிட்டு, நிறுத்திவைப்பதாக இருந்தால் காரணத்தை ஆளுநர் தெரிவிக்காமல் தவிர்ப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, கால வரம்பின்றி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது என்றெல்லாம் தெரிவித்த அமர்வு... அப்படியே அதே வேகத்தில் ஒரு யு டர்ன் அடித்து, ஆளுநரின் முடிவு நீதித்துறைக்கு உள்பட்டதல்ல; அதில் நீதிமன்றம் தலையிடாது, காரணமின்றி, எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைத்திருந்தால் அதை நீதிமன்ற ஆய்வுக்குள்படுத்தி தேவைப்பட்டால் ஆளுநர்களுக்கு அந்தவொரு விஷயத்தில் வரையறுக்கப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்க முடியும்; ஆனாலும் அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்காது; அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொருத்தது என்று விலகிக் கொண்டிருக்கிறது.
தாமதப்படுத்தப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருத அரசமைப்பின் 142-வது பிரிவின் கீழுள்ள அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கலாகாது. அவ்வாறு செய்வது அரசமைப்பு அதிகாரத்தை எடுத்துக்கொள்வதாகும். எனவே, ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு நிர்ணயிப்பது பொருத்தமானது அல்ல. கால வரம்பை நிர்ணயிப்பது அரசியல் சாசனத்துக்கு முரணானது. அந்த வகையில், ஏப். 8-ல் இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு அரசமைப்புக்கு எதிரானது. குறிப்பிட்ட காலவரம்பை நிர்ணயித்து மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. வேண்டுமென்றால் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த முடியும்... என்று 111 பக்கங்களில் நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறது ஐந்து நீதிபதிகள் அமர்வு. இவ்வாறான விளக்கத்தின் மூலம், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு நேர் மாறான கருத்துகளைத் தெரிவித்து, தீர்ப்பையே இல்லையென்றாக்கிவிட்டிருக்கிறது. (நல்லவேளையாக, இவையெல்லாம் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கான விளக்கம் மட்டுமே; மேல் முறையீடு போன்றவற்றின் மீதான தீர்ப்பு அல்ல!).
புதிய விளக்கத்தின் மூலம் மீண்டும் பழைய பாணியிலேயே, மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆன சட்டப்பேரவைகள், மக்கள் நலன் கருதி சட்டமாக்க நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களின் மீது, எந்த வகையிலும் மக்களுக்கு நேரடித் தொடர்பு இல்லாத – பெரும்பாலும் மத்தியில் ஆளும் கட்சியின் தேர்வாக - நியமிக்கப்படுகிற ஆளுநர்கள் ‘சும்மா’ காலவரையறையில்லாமல் அமர்ந்துகொண்டிருக்க முடியும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கிப் போடவும் முடியும் என்றாகியிருக்கிறது!
இந்த சர்ச்சையில் நீதிபதிகள் பார்திவாலா – மகாதேவன் அமர்வின் முன் தமிழ்நாடு அரசால் வைக்கப்பட்ட வாதங்களும் அவர்களுடைய தீர்ப்பு விவரங்களுமே பலவற்றைத் தெளிவுபடுத்தும். தவிர, அரசமைப்பு எந்த இடத்திலும் ஆளுநர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப ஒரு மசோதாவை நிறுத்திவைக்கவோ, கிடப்பில் போடவோ, ஒழித்துக்கட்டவோ தனி அதிகாரம் - வீட்டோ எதையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு மாநிலம் முழுவதன் மக்கள் பிரதிநிதிகளால் ஆன சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களை ஆளுநர் என்ற ஒற்றை மனிதரால் எவ்வாறு நிறுத்தி வைக்க இயலும்?
ஐவர் அமர்வின் விளக்கம் மேலும் குழப்பத்தையும் தெளிவின்மையையும்தான் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட முடியாது; குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயல்பட வேண்டும் என்று கூறிவிட்டு, அந்தக் காலவரையறை என்னவென்று எதுவும் தெரிவிக்கவில்லை (நிர்ணயிக்கவும் கூடாது; முடியாது என்றும் கூறுகிறது); ஒவ்வொன்றையும் பொருத்து, தேவைப்பட்டால், சூழ்நிலைகளைப் பொருத்து என்று குழப்பமாகச் செல்கிறது.
ஒப்புதல் அளிக்காமல் மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவதென்றால் எந்தெந்த காரணங்களுக்காக அனுப்பலாம்? எப்போது அனுப்பலாம்? குடியரசுத் தலைவரின் பதிலுக்காக எவ்வளவு காலம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் விளக்கத்தில் எதுவுமில்லை.
நிதி சாராத மசோதாக்களைப் பொருத்தவரை ஆளுநர் திருப்பியனுப்பிய போதிலும் இரண்டாவது முறையாக மீண்டும் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பினால், அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதலளித்தே தீர வேண்டும் என்றுதான் அரசமைப்பு சொல்கிறது. அவற்றைக் கால தாமதம் செய்வதும் அவற்றுக்கொரு நியாயம் கற்பிப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், இரு நீதிபதிகள் அமர்வும் கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில், கால நிர்ணயம் பற்றியெல்லாம் எதுவும் கூற முடியாது என்றிருக்கிறது ஐவர் அமர்வு. அப்படியென்றால், இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பும் நடைமுறை எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது?
கூட்டாட்சியின் செயல்பாடு மற்றும் மத்திய – மாநில அரசுகளின் உறவு மேம்பாடு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா கமிஷன்கூட, தனது பரிந்துரையில் மசோதாக்களின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் காலத்தை ஆறு மாதங்களாக நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் என்பதைப் போல, மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட முடியாது என்று கூறிவிட்டு, கூடவே காலவரையறையெல்லாம் நிர்ணயிக்க முடியாது என்றும் கூறியிருப்பதன் மூலம் உள்ளபடியே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள்தான் முடக்கப்படும். இவை யாவும் அப்படி அப்படியே மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும் என்கிற நிலையில் (நெருப்பு என்றதும் வாய் சுட்டுவிடாது) எதிர்காலத்தில், ஒருவேளை ‘வில்லங்கமான - விவகாரமான’ ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக நேரிட்டால் மக்களவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு என்ன நேரிடும்? மக்களாட்சிக்கு என்ன நேரிடும்?
ஆளுநர்களின் அதிகாரம் தொடர்பான நீதிபதிகள் பார்திவாலா – ஆர். மகாதேவன் தீர்ப்பின் காத்திரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடும்; முடிவான விஷயத்தில் மீண்டும் ஒரு விவாதம் தேவையற்றது என்ற பார்வையுடன் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை; நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகியவை கோரின. ஆனால், குடியரசுத் தலைவருக்குப் பதிலளிக்க வேண்டியது கடமை எனக் குறிப்பிட்டு நிராகரித்துவிட்டது ஐவர் அமர்வு.
இந்த சர்ச்சையின் தொடக்கமாக குரல் எழுப்பி உச்ச நீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர் அரசமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும் நீதிமன்றங்களே ஒரே நம்பிக்கை. ஆகவே, தீர்வு பெற நீதிமன்றங்களின் கதவு திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.
மக்களாட்சியின் மாண்புகளைக் காப்பவர்களாக, நிலைநிறுத்துபவர்களாக, நெறியாள்பவர்களாக விளங்குவார்கள் என்ற நல்ல நோக்கத்தில்தான் ஆளுநர் பதவிகளை அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்; ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான தருணங்களில் மத்திய அரசின் பிரதிநிதிகளைப் போல, முகவர்களைப் போலவே செயல்படுவதால் சங்கடங்கள் நேரிடுகின்றன.
தற்போதைய உச்ச நீதிமன்ற ஐவர் அமர்வின் ஆலோசனை கருத்து என்பது வெறும் கருத்து மட்டுமே. ஏற்கெனவே, தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது; இப்போது நடைபெறும் வழக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே நீதித்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
நம்முடைய அரசமைப்பையும் சட்டங்களையும் பார்த்து, ஒவ்வொரு வழக்குரைஞரும் ஒவ்வொரு நீதிபதியும் ஒவ்வோர் அமர்வும் ஒவ்வொரு விதமான வாதங்களையும் கருத்துகளையும் தீர்ப்புகளையும் விவரித்துக் கொண்டிருக்கின்றனர் – அந்தக் கால வியாசங்கள் - வியாக்கியானங்கள் – உரைகள் போல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை, ஒவ்வொரு தேர்வு. நாமும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதிரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் மாகாணங்களில் ஆளுநர்கள்தான் அதிகாரம் மிக்கவர்கள்; அவர்கள் அன்னியர்கள், ஆங்கிலேயர்கள். ஆனாலும் அவர்கள்தான் தீர்மானித்தார்கள். பிற்காலத்தில் விடுதலைக்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசுகள் அமைக்கப்பட்ட காலத்திலும், ஒப்புக்கு அவர்கள் சொல்வார்கள், ஆனால், ஆளுநர் ஆம் என்றால்தான் ஆம். இல்லை என்றால் இல்லைதான்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்றைக்கு ஒட்டுமொத்த மக்களும் வாக்களித்துதான் சட்டப்பேரவைகளும் மக்களவையும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நடைமுறையில் இந்த பேரவைகளின் முடிவுகளை, செயற்பாடுகளை ஆளுநர்கள் என்கிற மத்திய அரசால் நியமிக்கப்படுகிற ஒற்றை நபர்களால் முடக்கவும் நிராகரிக்கவும் முடியும் என்றால்... அவற்றில் தலையிட முடியாதென உச்ச நீதிமன்றமே கூறும் என்றால்...
மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசமைப்பின் கண்காணிப்பு உறுப்பே நீதித் துறையும் நீதிமன்றங்களும். மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றங்களே நிராகரிக்குமானால்...
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே; மக்கள் பிரதிநிதிகளுக்கே. அந்த மக்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும் அனைத்து செயற்பாடுகளும் என்று மக்கள் எதிர்பார்ப்பது இயல்பே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.