தலையங்கம்

தலையங்கம்: செயல்பட வேண்டிய தருணம்!

1977-க்கும் 1988-க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள்தான் குறுகிய கால லாபத்துக்காக தீவிரவாதிகளை ஊக்குவித்து வந்துள்ளனர் என்பது ஜர்தாரி

தினமணி

சில தினங்களுக்கு முன் தனது இல்லத்தில் முன்னாள் சிவில் அதிகாரிகளுடன் பேசியபோது, ""முந்தைய ஆட்சியாளர்கள் சிலர் குறுகிய ஆதாயங்களுக்காகத் தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் ஊக்குவித்து, அவர்களுக்குப் பயிற்சியும் வேறு சில உதவிகளையும் அளித்து வந்துள்ளனர். இதுதான் தீவிரவாதம் தலைதூக்க மிகப்பெரிய காரணம்'' என்று ஜர்தாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

 1977-க்கும் 1988-க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள்தான் குறுகிய கால லாபத்துக்காக தீவிரவாதிகளை ஊக்குவித்து வந்துள்ளனர் என்பது அவரது குற்றச்சாட்டு. மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக் தான் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பாகிஸ்தான் அதிபர் இவ்வாறு கூறியுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதும், பின்னர் திட்டங்களைத் தீட்டி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதும் உலகம் அறிந்த ரகசியம். தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தானுக்கு இன்று தீவிரவாதிகளாலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் சவால்களை எதிர்கொண்டு அவர்களை ஒடுக்க முடியாத நிலையில் இப்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் ஜர்தாரி.

 தனது நாட்டு மண்ணில் இருந்துகொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்காதவரை பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இதேபோல அமெரிக்காவும் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதையும், ஆயுதங்கள் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

 மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கெனவே இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் தீவிரவாதிகள் தாக்குதல் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்கிற உண்மையையும் இந்தியா உலக அரங்கில் எடுத்துக் கூறியுள்ளது. இப்போது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியும் உண்மையை ஒப்புக் கொண்டதன் மூலம் இந்தியாவின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தெற்காசியாவில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் அண்டைநாடுகளுடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்பதை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நமது அண்டை நாடுகள்தான் இதைப் புரிந்துகொள்ள மறுக்கின்றன. பாகிஸ்தான் இனிமேலாவது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதைக் கைவிட்டு அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமானால், அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சுமுக உறவைப் பேணவும் இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

 எந்த ஒரு நாடும் வன்முறையைத் தூண்டிவிடுவதும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வளர்த்து வருவதும் நல்லதல்ல; இதன் மூலம் குறுகிய லாபம் அடைந்தாலும் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதனால் ஏற்படும் தீமைகளே அதிகம்.

 மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என இந்தியா ஆதாரங்களுடன் கூறியுள்ளதை மனதில் கொண்டு, இந்தியா குறிப்பிட்டுள்ள தீவிரவாதிகளை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க பாகிஸ்தான் அதிபர் முன்வரவேண்டும்.

 தீவிரவாதிகளுக்கு புகலிடமும் பயிற்சியும் அளிப்பதால் ஏற்படும் அபாயத்தை பாகிஸ்தான் இப்போதாவது புரிந்துகொண்டு பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முன்வர வேண்டும்.

 காஷ்மீர் உள்பட அத்தனை பிரச்னைகளையும் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள எப்போது பாகிஸ்தான் தயாராகிறதோ, மதவாதிகளின் பயமுறுத்தல்களையும், ராணுவத்தின் மேலாதிக்கத்தையும் ஒதுக்கித்தள்ளி தீவிரவாதத்தை தயவுதாட்சண்யமில்லாமல் எப்போது பாகிஸ்தான் ஒடுக்குகிறதோ, இந்திய எதிர்ப்பு என்கிற மஞ்சள் காமாலையிலிருந்து எப்போது பாகிஸ்தான் விடுபட்டு, சகோதர பாசத்துடன் இந்தியாவுடன் நட்புறவு கொண்டாடுகிறதோ அப்போதுதான் தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படும்.

 மேலை நாடுகளும் சரி, அண்டை நாடான சீனாவும் சரி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயுள்ள பிரச்னைகளை முன்னிறுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன. நாம் கை கோர்த்தால் உலக வல்லரசாகத் தெற்காசியா மாறிவிடும் என்று அவர்களுக்குத் தெரிகிறது. பாகிஸ்தானுக்குத் தெரியவில்லையே...

 கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவத்துக்காகத் தங்களது நிதிநிலை அறிக்கையில் செலவிடும் ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. சில கோடிகளாக இருந்து, இப்போது சில ஆயிரம் கோடிகளாக நமது பாதுகாப்புச் செலவு அதிகரித்து இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்கிடையே சுமுகமான உறவும், இந்தப் பகுதியில் அமைதியும் நிலவுமானால், ராணுவத்துக்கான ஒதுக்கீடு பாதிக்குமேல் குறைந்து கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும். தெற்காசியாவில் வளர்ச்சி அபரிமிதமாக உயரும். இதை பாகிஸ்தான் உணரவேண்டும்.

 ஜர்தாரி துணிந்து செயல்பட வேண்டிய தருணம் இது... தவறினால் நஷ்டம் அவருக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT