வேண்டாம் இந்த விவாதம்!
மதுரை ஆதீனத்தை இந்து அறநிலையத் துறை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும், விரைவில் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப் போகிறது என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மதுரை ஆதீனத்தை இந்து அறநிலையத் துறை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும், விரைவில் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப் போகிறது என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
"மடம் அல்லது ஆதீனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தால் மட்டுமே, இந்து அறநிலைய சட்டம்-1959 பிரிவு 59-ன் கீழ் இந்து அறநிலையத் துறை இந்த விவகாரத்தில் தலையிட முடியும். தற்போது மதுரை ஆதீனத்தின் தலைவராக அருணகிரிநாத தேசிகர் இருப்பதால், அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை' என்று ஆகஸ்ட் 22-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை ஆணையர் எம். ராஜாராம் நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் தெரிவித்த பிறகும், ஏன் இத்தகைய செய்திகள், பேட்டிகள் போன்றவை பத்திரிகைகளில் வளைய வருகின்றன என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இதுநாள்வரை எந்தவொரு மடத்தின் பொறுப்பையும் இந்து சமய அறநிலையத் துறை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட வழக்கம் இல்லை. இது தொடர்பான சில வழக்குகளில் மடாலயங்களின் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டையேகூட நீதிமன்றங்கள் கண்டித்தும் இருக்கின்றன.
மடம் அல்லது ஆதீனத்தின் பதவி காலியாக இருக்கும்போது தாற்காலிகமாக நிர்வாகப் பொறுப்பை ஏற்கவும் அல்லது நிதிமுறைகேடுகள் நடந்திருந்தால் அப்போது ஆதீனத்தின் நடவடிக்கையில் தலையிடவும், இந்து சமய அறநிலையத் துறை சட்டங்கள் இடம் அளிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், மதுரை ஆதீனத் தலைவர் அருணகிரிநாத தேசிகர், தன் விருப்பப்படி சுவாமி நித்யானந்தரை இளைய ஆதீனமாகப் பட்டம் சூட்டிய நாளுக்கு முன்பு வரை மதுரை ஆதீனம் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் இல்லை.
சுவாமி நித்யானந்தர் மீது பாலியல் புகார்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை இளைய பட்டமாக அறிவித்து பட்டம்சூட்டிய செய்கைதான் உலக இந்துகள் அனைவரையும் மதுரை ஆதீனத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதுநாள்வரை, மதுரை ஆதீனம் எங்கே இருக்கிறது என்பதும்கூட பல இந்துக்களுக்குத் தெரியாது. அதன் தலைவர் யார் என்று கேள்வி கேட்டால், 90% இந்துக்கள் பதில் தெரியாமல் விழித்திருப்பார்கள்.
இந்து மதத்தினருக்கு ஆன்மிக அதிர்ச்சி கொடுத்ததால்தான் மதுரை ஆதீனத்துக்கு எதிராகப் போராட்டம், வழக்குகள், தகராறுகள் எல்லாமும் நடந்தன. இப்போது, பிரச்னைக்குக் காரணமான சுவாமி நித்யானந்தரை, இளைய ஆதீனப் பதவியிலிருந்து நீக்கிவிட்ட பிறகு, இந்த வழக்கிலிருந்து அரசு விலகிக் கொள்வதுதான் முறையாகும்.
ஆதீனங்களின் சொத்துகளை விற்பனை செய்வது, 5 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகைக்கு விடுதல் ஆகியவற்றுக்குக்கூட இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், காலம்காலமாக குத்தகைப் பணம் தராமலும், கடை வாடகை தராமலும், ஆதீனங்களையும் மடங்களையும் ஏமாற்றிக்கொண்டிருப்பவர் மீது அரசு நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கிறதா என்றால் இல்லை. இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். ஆதீனத்தின் சொத்துகளைப் பாதுகாப்பதிலும், ஆதீனத்தை ஏமாற்றிக் கொழிப்பவர்களைத் தண்டிப்பதிலும் ஆர்வம் காட்டாத அரசு, ஆதீனங்களைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது என்பது சிந்தனைக்குரிய கேள்வி.
தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்களின் சொத்துகளில் பலவும் யார்யாராலோ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் மீட்கப்பட முடியாமல் போயின. இந்த ஆதீனங்கள் கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்தி வருமானம் பார்ப்பவை அல்ல. பாதிக்கும் மேற்பட்ட ஆதீனங்கள் தங்கள் பழம்பெருமை போய்விடாமல் இருப்பதற்காக வெறுமனே கெளரவத்துக்குப் பகட்டாக வலம் வருகிறார்கள்.
உண்மையில், ஆதீனத்துக்கு சொத்துகள் இருந்தும் அந்தச் சொத்துகளால் எந்தப் பயனும் இல்லை. அதை அனுபவிப்பவர்களேகூட இந்த ஆதீனங்களை மதிப்பதே இல்லை. ஆதீன ஊழியர்களைத் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, மடத்தை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டமே இருக்கிறது. இவர்களுக்கு அரசியல் பின்புலமும் உண்டு என்பதுதான் வெளியில் சொல்லப்படாத உண்மை.
சுவாமி நித்யானந்தரை இளைய ஆதீன பதவியிலிருந்து நீக்கிய பின்னரும், மதுரை ஆதீனத்தை அரசு எடுத்துக் கொள்ளும்; கொள்ளலாம் என்று வரும் செய்திகள், பெருந்திரள் கருத்தை உருவாக்கத்தான் என்பது வெளிப்படை. இதை மக்கள் கருத்தாக மாற்றி, மதுரை ஆதீனத்தை அரசு தன் பொறுப்பில் ஏற்கும்படி செய்துவிட்டால், இதேபோன்று ஒவ்வொரு ஆதீனத்தின் மீதும் நிதிமோசடி, நிர்வாக ஊழல் என்று ஏதாவது வழக்குகளை ஜோடித்து, ஒவ்வொன்றாக அரசின் பொறுப்பில் கொண்டு வந்துவிடலாம். அதன் பிறகு தமிழ்நாட்டில் எந்தச் சொத்துகள் மீதும் ஆதீனத்துக்கு உரிமை இல்லை. அனுபவிப்பவர்களுக்கும் கொண்டாட்டம். அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம். இத்தகைய உள்நோக்கதுத்துடன்தான், இத்தகைய கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறதோ என்று அஞ்சுதற்கு இடம் இருக்கிறது.
ஒரு மடம் அல்லது ஆதீனம் தனக்கான அடுத்த வாரிசை நியமிப்பது அதனதன் தலைவர்களின் உரிமை. அதற்கான வழிமுறைகளைத் தீர்மானிப்பதோ, நியமிக்கப்படுபவர்களின் ஆன்மிகத் திறமைக்கும் ஆன்மசக்திக்கும் சான்று கோருவதோ அரசின் வேலை அல்ல.
மதச்சார்பற்ற அரசு, எந்தவொரு மத நிறுவனத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்வது சரியாக இருக்காது. இந்து அறநிலையத் துறை தேவையில்லை என்று பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆதீனங்களை அரசு ஏற்றுக்கொள்ளலாம் என்பதே தேவையில்லாத பேச்சு.
தங்கள் வசமுள்ள ஆதீன குத்தகைகளை நிரந்தரமாக அனுபவிக்கவும், ஆதீனங்களின் வசமிருக்கும் சொச்சமிச்சம் சொத்துகளைக் கபளீகரம் செய்யவும் நடக்கும் சதியின் வெளிப்பாடுதான், ஆதீனத்தை அரசு ஏற்க வேண்டும் என்கிற விபரீத யோசனை. இது ஏற்புடைத்தன்று!