தலையங்கம்

பெருந்திரள் தற்கொலை!

பிகார் மாநிலத்தில், தமரா காட் ரயில்நிலையத்தில் சிவபக்தர்கள் மீது ரயில் மோதி 37 பேர் இறந்திருப்பதற்கு ரயில்வே நிர்வாகமோ அல்லது ரயில் ஓட்டுநரோ பொறுப்பாக முடியாது.

ஆசிரியர்

பிகார் மாநிலத்தில், தமரா காட் ரயில்நிலையத்தில் சிவபக்தர்கள் மீது ரயில் மோதி 37 பேர் இறந்திருப்பதற்கு ரயில்வே நிர்வாகமோ அல்லது ரயில் ஓட்டுநரோ பொறுப்பாக முடியாது. இந்த மரணங்கள் மிகவும் வேதனையான சம்பவம் என்பது புரிந்திருந்தாலும்கூட, இந்த மரணத்துக்கு அந்த மக்களே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆளில்லா ரயில் கடவுப்பாதையில், ஒரு பேருந்து மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தால், பேருந்து ஓட்டுநரின் அறியாமையால் நேர்ந்த விபத்தாகவும், இறந்த பேருந்து பயணிகளின் துரதிருஷ்டமாகவும் கருத இடம் உண்டு. ஆனால் நடந்திருக்கும் சம்பவம் அவ்வாறாக இல்லை. இதனை ஒரு பெருந்திரள் தற்கொலைக்கு சமமானது என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

சமஸ்திபூர்-சகர்ஸா ரயிலிலிருந்து இறங்கிய சிவபக்தர்கள், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாக சொல்லப்பட்டாலும், அல்லது அவர்கள் ரயிலை நிறுத்தவே தண்டவாளத்தின் குறுக்கே நின்றதாக சொல்லப்பட்டாலும், 80 கிமீ வேகத்துடன் அந்த ரயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்ல வேண்டிய ராஜ்யராணி விரைவுரயிலின் முன்பாக இத்தகைய விபரீத செயல்களில் ஈடுபட்டிருக்கத் தேவையில்லை.

விபத்தின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்குடன் ரயிலை நிறுத்திய ஓட்டுநரை அடித்து நொறுக்கி, ரயில்நிலையத்தை சேதப்படுத்தி, 14 பெட்டிகளுக்குத் தீயிட்டுத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய மக்கள், உண்மையில் யார் மேல் கோபம் கொள்ள வேண்டும்? யாருடைய அறியாமைக்கு எதிராக இந்தக் கோபம்?

தண்டவாளத்தைக் கடந்துபோய் இன்னொரு நடைமேடையில் நிற்கும் ரயிலில் ஏறமுடியாமல் பயணிகள் ஏறுவதும், சில நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் தடுமாறி, தூக்கிவிடுவோரை நாடிக் கை நீட்டுவதும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அன்றாடம் நாம் காணும் காட்சிகள் இவை. இது தவறு என்று சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் செய்கிறார்கள்.

ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும் நடைமேடையில் இறங்காமல், கூட்டத்தை தவிர்க்க அல்லது வேகமாக வெளியேறிவிட வேண்டும் என்பதற்காக, ரயில்பெட்டியின் எதிர்வாசல் வழியாக இறங்கிச் செல்வதும், நடைமேடையில் நிறைய கூட்டம் என்பதால் பின்வழியாக ஏறி இடம் பிடிக்க சில பயணிகள் தடம் மாறுவதும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காணக்கூடிய காட்சிதான்.

பல ரயில்நிலையங்களில் உள்ளூர் பயணிகள் முதன்மை வாயில் வழியாக வருவதே இல்லை. பின்புறத்திலிருந்து வருகிற ஒற்றையடிப்பாதை அல்லது இடிக்கப்பட்ட சுவர், வளைக்கப்பட்ட முள்கம்பி வழியாகத்தான் நடைமேடைக்கு வருகிறார்கள்.

இவ்வாறு தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக, விரைவு ரயில் அல்லது சரக்கு ரயில் வந்துவிட்டால் அதில் சிக்கி உயிரிழக்கும் பரிதாப சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. வழக்கமாக அவை "தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒருவர் அல்லது இருவர் சாவு' என்ற அளவில்தான் இருக்கும். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் இறந்தன என்பதைப் போல, மாடுகள் இறந்தன என்பதைப் போல மிகச் சாதாரண நிகழ்வாகத்தான் இவை கருதப்பட்டு வருகின்றன. இதை மக்களும் பொருட்படுத்துவதில்லை. ரயில்வே நிர்வாகமும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தற்போது நடந்திருப்பதைப் போன்று எண்ணிக்கை பெருமளவில் இருக்கும்போது, தவிர்க்க முடியாமல் இது நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறுகிறது. ஆகவே ரயில்வே நிர்வாகம் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத்தொகை அறிவிக்கிறது! ஒருவர், இருவர் இறந்தால் ஒன்றும் கிடைக்காது!

ரயில் மறியல் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் புறப்படவிருக்கும் ரயிலை, அல்லது வந்து நின்றுகொண்டிருக்கும் ரயிலை மட்டுமே மறிப்பார்கள். அதன் என்ஜினில் ஏறிக்கொள்வார்கள். என்ஜின் டிரைவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருப்பார். நின்று கொண்டிருக்கும் ரயில் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து ஊடகங்களுக்காக படம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் ஏற்கெனவே ரயில்நிலைய மேலாளரிடமும் தங்கள் போராட்டம் குறித்து சொல்லி வைத்திருப்பதும் உண்டு. அவரும் ரயில் மறியல் செய்யவுள்ள அந்த நடைமேடை அல்லது அதற்கு அடுத்த நடைமேடையைத் தவிர்த்து வேறு பாதையில் ரயில்களை தடம் மாற்றி விடுவார், அல்லது ரயில்நிலையத்துக்கு வெளியிலேயே ரயில்களை நிறுத்தி வைத்து, ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகு உள்ளே வர சமிக்ஞை தரவும் நிலைய மேலாளர்கள் திட்டமிட்டு செயல்பட முடியும்.

போராட்டக்காரர்களின் கட்சி சார்ந்த ரயில்வே தொழிற் சங்க நிர்வாகிகளும் உடன் இருப்பதால் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடாது. போராட்டக்காரர்களும் ஐந்து நிமிடங்களுக்கு அனைத்து ரயில்பயணிகளும் பார்த்திருக்க கோஷம் எழுப்பிவிட்டு, முன்னமே காவல்துறை அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கைதாகி, வாகனங்களில் ஏறிச் செல்வார்கள்.

அரசியல்வாதிகளை முன்னுதாரணமாகக் கொண்டு சாதாரண மக்கள் திடீர் என்று தண்டவாளத்தில் இறங்கி, ரயிலை நிறுத்தக் கோரினால், நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினால் எந்த ரயிலும் நடைமேடை மாறிச் செல்லாது. அல்லது ரயில்நிலையத்துக்கு வெளியிலேயே நிறுத்தப்படாது. நிறுத்தம் இல்லா ரயில்நிலையத்தில் நிற்கவே நிற்காது.

ரயில் மறியல் போராட்டத்தில், ரயில் மோதி அரசியல்வாதிகள் சிலர் இறந்ததாக சம்பவங்கள் நடந்தால் அதில் ஏதோ "தவறு' இருப்பதாக குறை சொல்ல முடியும். "உள்நோக்கம்' கற்பிக்கவும் முடியும். சாதாரண மக்கள் -தனியாகவோ கூட்டமாகவோ-ரயில் தண்டவாளத்தில் இறந்துபோனால், அது அவர்களது அறியாமையின் தவறு மட்டுமே!

வினையை விலைக்கு வாங்குபவர்கள் மீது அனுதாபப்படத்தான் முடியும். அவர்களது தவறை நியாயப்படுத்தவும் முடியாது. விளைவுகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கவும் முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT