தலையங்கம்

தீ பரவட்டும்!

பாரதிய ஜனதா வரலாறு காணாத வெற்றியை ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மத்தியப் பிரதேசத்திலும், தட்டுத் தடுமாறி ஆட்சி அமைக்கும் நிலையை தில்லி மற்றும் சத்தீஸ்கரிலும் பெற்றுள்ளது.

ஆசிரியர்

பாரதிய ஜனதா வரலாறு காணாத வெற்றியை ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மத்தியப் பிரதேசத்திலும், தட்டுத் தடுமாறி ஆட்சி அமைக்கும் நிலையை தில்லி மற்றும் சத்தீஸ்கரிலும் பெற்றுள்ளது. தான் ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்களைத் தக்க வைத்துக் கொண்டதுடன், காங்கிரஸிடமிருந்து இரண்டு மாநிலங்களில் ஆட்சியைத் தட்டிப் பறித்திருக்கிறது என்கிற வகையில் இது நிச்சயமாக பா.ஜ.கவுக்கு இனிப்பான செய்தியாகத்தான் இருக்க முடியும். அடுத்த ஆறு மாதத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தத் தேர்தலின் முடிவுகள் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் என்றாலும், வர இருக்கும் மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் கருதப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் முழுவீச்சில் பிரசாரக் களத்தில் இறங்கினார்கள். இதற்கு முன்னால் நடந்த தேர்தல்களைப் போலவே இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ராகுல் காந்தியின் பிரசாரம் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

""இது நரேந்திர மோடியின் வெற்றியுமல்ல, ராகுல் காந்தியின் தோல்வியுமல்ல' என்று விளக்கமளிக்கும் காங்கிரஸின் மக்கள் தொடர்பாளர்களுடைய கருத்து ஏற்புடையதல்ல. பா.ஜ.கவின் வெற்றியை வேண்டுமானால் நரேந்திர மோடியின் வெற்றியல்ல என்று கூறலாம், தவறில்லை. ஆனால், நிச்சயமாக ராகுல் காந்தியின் பிரசாரம் எடுபடாமல் போனதும், மத்திய அரசின் மீதுள்ள பரவலான அதிருப்தியும், ஊழல் குற்றச்சாட்டுகளும்தான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

தில்லியைப் பொருத்தவரை, எதிர்க்கட்சி வாக்குகளை அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பிரித்து, மீண்டும் ஷீலா தீட்சித்தே நான்காவது முறையாக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற கனவை வாக்காளர்கள் தகர்த்து எறிந்திருக்கிறார்கள். நரேந்திர மோடியின் பிரசாரம் இல்லாமல் போயிருந்தால், ஒரு வேளை, பா.ஜ.க. இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கக்கூட வாய்ப்பிருந்திருக்கும்.

கடந்த தேர்தலில் இருந்ததைவிட 10% அதிகமாக 67% வாக்குப் பதிவு தில்லியில் காணப்பட்டபோதே, ஏதோ பெரியதொரு மாற்றத்திற்கு இந்தியத் தலைநகர் தயாராகிறது என்பதற்கான அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது. வாக்களிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு, இரவு எட்டு மணிவரை மக்கள் பொறுமையாக வரிசையில் நின்று வாக்களித்தனர் என்றால், அவர்கள் மாற்றத்தை உறுதிப்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது.

ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கிய ஒன்பதாவது மாதத்திலேயே கணிசமான இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருப்பது அரசியலில் ஒரு அசாதாரண நிகழ்வு. ஏனைய அரசியல் கட்சிகளைப் போல, மதம், ஜாதி, பண பலம், அடியாள் பலம் போன்ற எதையும் நம்பாமல், பரவலான ஊழல், முறைகேடுகள் இல்லாத நேர்மையான நிர்வாகம் போன்ற ஆக்கபூர்வமான கொள்கைகளுடன் மக்களை சந்தித்து, வாக்குக் கேட்டு இத்தனை இடங்களையும் அந்தக் கட்சி வென்றெடுத்திருப்பது, இந்தியாவில் இளைஞர் கூட்டம் இன்றைய அரசியல் கலாசாரத்தையே புரட்டிப் போடத் தயாராகி விட்டதைத்தான் காட்டுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வெற்றிப் பயணம், அந்தக் கட்சி சென்னை மாநகராட்சித் தேர்தலில் 1959இல் வெற்றி பெற்று நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்தது முதல்தான் தொடங்கியது. பாரதிய ஜனதாக் கட்சியின் அசுர வளர்ச்சி, அதன் முந்தைய பரிணாமமான ஜனசங்கம் 1967இல் தில்லி முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்று லால் கிருஷ்ண அத்வானி அதன் தலைவரானதிலிருந்துதான் ஆரம்பித்தது. மகாராஷ்டிரத்தில் சிவசேனா அரசியல் சக்தியாக உருவெடுத்தது அந்தக் கட்சி மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியது முதல்தான். இப்போது, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பயணம் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் ஆதரவிலிருந்து தொடங்கி இருக்கிறது.

இளைஞர் கூட்டம் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும். நேர்மையும் தூய்மையும் குறிக்கோளாகக் கொண்டு புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும். ஊழல் பெருச்சாளிகளையும், குற்றப் பின்னணி உள்ளவர்களையும், சமூக விரோதிகளையும் அரசியலிலிருந்து களையெடுக்க வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் ஓர் ஆம் ஆத்மி கட்சி உருவானால்தான் அது சாத்தியம்.

"வந்தே மாதரம்', "பாரத் மாதாகீ ஜே!' போன்ற சுதந்திரப் போராட்ட காலத்து கோஷங்கள் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியினரால் எழுப்பப்படும் போது நம்பிக்கை துளிர்க்கிறது. அன்று வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வாங்கியதுபோல, இன்று அரசியல்வாதிகளின் போர்வையில் நடமாடும் கொள்ளையர்களிடமிருந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தில்லியில் எழுந்திருக்கும் தீ தேசமெங்கும் பரவட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT