தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும்படி எல்லா உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஒரு பிரச்னை ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிப் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்போதாவது, இதுவரை விசும்பலும், அவமானமுமாக மூடி மறைக்கப்பட்ட அநீதிகள், அரங்கத்துக்கு எடுத்து வரப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அதேநேரத்தில், சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இந்தப் பிரச்னைக்குச் சட்டம் மட்டுமே தீர்வாகிவிடுமா என்பதுதான் அது.
டிசம்பர் 16 ஆம் தேதி இரவு நடந்த அந்தக் கொடிய சம்பவம் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகப் போகிறது. இன்னமும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இதுவரை காவல்துறையும், நீதிமன்றமும், அரசும் இந்தப் பிரச்னையை உளப்பூர்வமான உறுதியுடன் எதிர்கொண்டுள்ளதா? தேர்தல் முடிந்து ஆட்சி மாறினால், முதல்வரின் படத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு அலுவலகங்களில் மாற்றி விடுகிறார்களே, அதேபோல, சம்பவம் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்போது, இதற்குள் இந்தியாவில் உள்ள அத்தனை காவல் நிலையங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளிருக்கு, சட்டப்படி என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன என்கிற தகவல் பலகை பளிச்சென்று பார்வையில் படுவதுபோல வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? ஏன் இல்லை?
பாலியல் வன்கொடுமைப் பிரச்னையில் காவல்துறையின் மெத்தனமும், குற்றவாளிகள்மீது அவர்கள் காட்டும் அனுதாபமும்தான் பாதிக்கப்பட்ட மகளிரைக் காவல் நிலையத்தை அணுக விடாமல் தடுக்கின்றன. மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். அந்த மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களும், ஆணாதிக்கக் காவல்துறை அதிகாரிகளின் கைப்பாவையாகச் செயல்படும் அவலம்தான் காணப்படுகிறதே தவிர, தன்னிச்சையாகப் பெண்களுக்காக அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை நிலை.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், மேகாலய மாநிலத் தலைநகர் இம்பாலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 18 வயதுப் பெண், புகார் கொடுக்கக் காவல்நிலையத்தை அணுகி இருக்கிறார். நடந்தது என்ன தெரியுமா? அவர் ஐந்து நாள்கள் காவல்துறைக் கண்காணிப்பில் காவலில் வைக்கப்பட்டார். எதற்குத் தெரியுமா? அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய!
இந்தியக் குற்றவியல் சட்டப்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர் விசாரணைக்காகவோ, குற்றப்பதிவு செய்வதற்காகவோ காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்படக்கூட சட்டம் அனுமதிக்கவில்லை. இதெல்லாம் அவரை விசாரணைக்குக் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்ட காவல்துறை அதிகாரிக்கும், அதற்கு அனுமதித்த விசாரணை நீதிபதிக்கும் தெரியாதா என்ன? காவல் நிலையத்தில் குற்றப்பதிவுக்காகக் காவலில் வைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்த்தால் - நிச்சயமாக, வார்த்தைகளால் எள்ளிநகையாடவாவது செய்திருப்பார்கள், மனதைக் காயப்படுத்தும் விதத்தில் கேள்வி கேட்டிருப்பார்கள் - அந்தப் பெண் இதைவிடப் பாலியல் வன்கொடுமையே மேல் என்கிற எண்ணத்துக்கு வந்திருப்பார்.
கடந்த 15 நாள்களில் நடந்தேறியிருக்கும் சில சம்பவங்கள் இவை. கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில், ஐந்து வயதுச் சிறுமி இரண்டு நபர்களால் வல்லுறவுக்கு ஆளாகி இருக்கிறார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினரால் தரப்பட்ட தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
பெங்களூரில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்யப்படாமல், காவல்துறையும், ஊர்ப் பெரியவர்களும் சேர்ந்து, ஏற்கெனவே திருமணமாகி இருந்த குற்றவாளிக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி இருக்கிறார்கள். காவல்துறையே, பாலியல் வன்கொடுமை செய்தவனுக்குச் சாதகமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகப் பெண்ணின் தந்தை முறையிட்டிருக்கிறார்.
கேரளத்தில் 16 வயதுப் பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திய வழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்றம் 36 பேருக்குத் தண்டனை வழங்கியது. நான்கு ஆண்டுகள் நீண்டு நின்ற வழக்கில், 2005 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம், போதிய சாட்சியங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டி 35 பேரை விடுதலை செய்துவிட்டது. அந்த வழக்கு மேல் முறையீட்டில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வழக்கு பலவீனமானதற்குக் காரணம், குற்றவாளிகளுக்கு எதிராகப் பலமான சாட்சியங்களையோ, சட்டப் பிரிவுகளையோ காவல்துறை பயன்படுத்தாமல் விட்டதுதான்.
கடுமையான சட்டம் கொண்டு வருவதும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீலிக்கண்ணீர் வடிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சாதகமாகக் காவல்துறை இல்லாமல் போனால் சட்டங்களால் என்ன பயன்? கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஆறு உயர்நிலைக் குழுக்கள் காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பித்து விட்டன. இதுவரை, அவற்றில் ஓர் அறிக்கை வேண்டாம், ஒரு பரிந்துரைகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் காவல்துறை சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தச் சொல்லியும், எந்தவொரு மாநிலமும், மத்திய அரசும் அதைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால், நமது அரசியல்வாதிகள் காவல்துறையின் பாதுகாப்பிலும், காவல்துறையினர் அரசியல்வாதிகள் தரும் பாதுகாப்பிலும் இருப்பதுதான் காரணம். இந்த லட்சணத்தில், சட்டங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகத்தான் இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.