தலையங்கம்

கண்துடைப்பு வாரியம்!

சுற்றுச்சூழல் ஒழுங்காற்று ஆணையங்கள்; மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்பான மதிப்பீடுகள்' என்ற பொருண்மையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர்

சுற்றுச்சூழல் ஒழுங்காற்று ஆணையங்கள்; மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்பான மதிப்பீடுகள்' என்ற பொருண்மையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மோசமான விமர்சனங்களுக்கு இலக்காகி இருப்பவை வடஇந்திய மாநிலங்கள் மட்டுமே. தமிழகம் குறித்து மோசமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இல்லை. ஆனால், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்பதுதான் ஆய்வின் முடிவாகக் காணப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததற்கு முதன்மைக் காரணம் அரசியல் தலையீடு மட்டுமே என்று அண்மையில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் சமூக, தொழில்நுட்ப அறிவியல் மையம் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த செயலின்மைக்குச் சொல்லப்படும் பிற காரணங்கள், ஆள் பற்றாக்குறை, அறிவியலாளர் இல்லாத குறை.

ஆய்வு முடிவுகள் சொல்வதைப்போல,அரசியல் தலையீடு, அதிகார ஊழல் என்பதோடு வாக்கு வங்கி அரசியலும் ஒரு காரணம் என்பதை ஏனோ குறிப்பிடத் தவறி இருக்கிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்களாக நியமிக்கப்படுவோர் அரசியல் சாய்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாக்குவங்கியைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற ஒரே காரணத்துக்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை முடக்க இத்துறையை அரசே அடங்கி இருக்கச் சொல்கிறது என்பதுதான் நிஜ நிலைமை.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை பிரச்னை இதற்கு ஒரு நல்ல உதாரணம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மைக்கு ஊழல் மட்டுமே காரணம் அல்ல. அங்குள்ள சாயத்தொழில் அதிபர்கள் இந்தத் தொழில் நடைபெறவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்த சாயப் பட்டறைகளை மூட உத்தரவிட்டால், தொழில்முடக்கம் ஏற்படுவதோடு, பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் சிதைகிறது. அதனால், எந்த அரசாக இருந்தாலும், சாயப்பட்டறை மாசுகளைக் கண்டுகொள்வதில்லை. பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்காக அரசே பல நூறு கோடி ரூபாய் பணம் ஒதுக்கினாலும்கூட, இந்தப் பிரச்னை முடிவு காணப்படாமலேயே நீள்கிறது.

இன்னொரு முக்கியமான காரணம், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுகள். தேசிய சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆணையம் அல்லது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக திட்டங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இதனால் திட்டம் தீர்மானிக்கப்பட்டு தொடங்கப்படும் நேரத்தில் பிரச்னைகள் எழுகின்றன. பல கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், திட்டத்தின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உதாரணம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை.

மிகப்பெரும் பன்னாட்டுத் தொழிற்கூடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இவற்றை மத்திய அரசு அனுமதிக்கும்போது மாநில அரசுடன் கலந்தாய்வு செய்வதில்லை. போஸ்கோ போன்ற தொழிற்கூடம் அமைக்க அனுமதி அளித்துவிட்டு, அதை எங்கே நிறுவுவது என்பதைத் தீர்மானிக்கவும், உதவிகள் செய்யவும் மட்டுமே மாநில அரசுக்கு பொறுப்பு அளிக்கப்படுகிறது.

வெறும் தொழிற்கூடங்களுக்கு மட்டும் இந்த நிலைமை அல்ல. நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு, வனப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கான விடுதிகள், அண்டை மாநிலங்களுக்கு இடையிலான அணை கட்டும் திட்டங்கள் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் பல முடிவுகளும் மாநில அரசுடன் கலந்து ஆய்வு செய்யப்படாதவைதான்.

2011-ஆம் ஆண்டில் 1,714 திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 2012-ஆம் ஆண்டில் 859 திட்டங்களுக்கு அனுமதி. 2013-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை 88 திட்டங்களுக்கு அனுமதி. இவற்றில் எத்தனை திட்டங்கள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டன? பல திட்டங்கள், முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவையின் நெருக்குதல் காரணமாக அனுமதிக்கப்படுபவை. இந்தியாவுக்கு அன்னிய நேரடி முதலீட்டு அளவை உயர்த்துவதற்காக உடனடி அனுமதிகள், ஒற்றைச் சாளர அனுமதிகள் அளித்துவிட்டு, சாவகாசமாக மாசு கட்டுப்பாடு, இயற்கை ஆதாரம் கெடுதல் ஆகியவற்றைப் பிறகு யோசிப்பதே நமது வழக்கமாகிவிட்டது.

பெரிய திட்டங்கள் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் திணிக்கப்படக்கூடாது. அது சுற்றுச்சூழல் சார்ந்த தொழில்கள் எனில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முழுச் சம்மதத்துடன்தான் தொடங்கப்பட வேண்டும். எல்லா திட்டங்களுக்கும் அனுமதியைக் கொடுத்துவிட்டு, சுற்றுச்சூழல் பிரச்னை குறித்துப் பிறகு யோசிக்கும்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறுப்பு, மாசினை கட்டுக்குள் வைத்திருக்கும் வேலையாக மட்டுமே இருக்கிறது.

இந்த அடிப்படைக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை, வாரியத்தின் செயல்பாடுகளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. இதுபற்றி ஆய்வு நடத்துவதிலும் அர்த்தமில்லை.

ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய நிலையில் இது கட்டுப்பாட்டு வாரியமல்ல; வெறும் கண் துடைப்பு வாரியம், அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT