தலையங்கம்

தெலங்கானாவல்ல, பகடைக்காய்

புவி அமைப்பு அல்லது மொழி, ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதற்கு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், அரசியல் அடிப்படையாக இருக்குமேயானால் அது புதிய பல பிரச்னைகளுக்கு...

ஆசிரியர்

புவி அமைப்பு அல்லது மொழி, ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதற்கு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், அரசியல் அடிப்படையாக இருக்குமேயானால் அது புதிய பல பிரச்னைகளுக்கு வழிகோலுமே தவிர புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு மாநிலங்களுக்குமே வளர்ச்சியையோ திறமையான நிர்வாகத்தையோ உறுதிப்படுத்தாது. மத்திய ஆளும் கூட்டணி, குறிப்பாக காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மாநிலம் அமைக்க முற்படுவது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இதனால் மாநிலத்திற்கு வளர்ச்சி ஏற்படுமா என்பதைவிட காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பு அதிகரிக்குமா என்பதுதான் மத்திய ஆட்சியாளர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி நிறுவனர் சந்திரசேகர ராவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது பரவலான எதிர்பார்ப்பு. அதன்படி தெலங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டவுடன் சந்திரசேகர ராவ் தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் வெளிப்படையாக மறுத்தாலும்கூட அவர்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. அதன் மூலம் ஆந்திரத்தை காங்கிரஸ் இழந்தாலும்கூட புதிதாக உருவாக்கப்படும் தெலங்கானா மாநிலத்தில் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவது என்பதுகூட திட்டமாக இருக்கலாம்.

இன்றைய நிலையில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கணிசமாக சரிந்துவிட்டிருக்கும் நிலை. தெலங்கானா பகுதியில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதியும், ஆந்திரப் பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýம் செல்வாக்கில் முன்னணியில் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆந்திரப் பகுதியில் போட்டியே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையில்தான் என்பதும், தெலங்கானா பகுதியில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கும் இடையில்தான் என்பதும்தான் நிஜ நிலைமை.

அதனால்தானோ என்னவோ ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் இரண்டு மாவட்டங்களை தெலங்கானாவுடன் இணைக்க முற்பட்டிருக்கிறது மத்திய அரசு. இந்த இரண்டு மாவட்டங்களை தெலங்கானாவுடன் இணைப்பதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரûஸப் பலவீனப்படுத்துவது என்பதுதான் திட்டம்.

தெலங்கானா மாநிலம் அமைப்பது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்ததுமுதல் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் முடிவுக்கு மாறாகக் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து தெலங்கானா பிரச்னையில் அவசர முடிவு எதுவும் எடுத்துவிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியே கூட கட்சித் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆந்திர மாநிலம் பிரிக்கப்படக் கூடாது என்பதைவிட தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரண்டு தரப்பினரிடமும் பெயரைக் காப்பாற்றிக் கொண்டு அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடையலாம் என்பதுதான். புத்திசாலித்தனமாக "இரட்டை வேடம் போட்டு' அரசியல் ஆதாயம் பார்க்கும் உத்திதான் இது.

சிறிய மாநிலங்கள் அமைவதில் தவறொன்றுமில்லை. அப்படி மாநிலங்கள் அமையும்போது அரசின் திட்டங்கள் எளிதாக மக்களைப் போய்ச் சேர்வதற்கும் அந்தத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கும் வசதியாக இருக்கும். இந்த வகையில் பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்களான ஹரியாணா, சத்தீஸ்கர் போன்றவை மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியடைந்திருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் சிறிய மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று எழும் கோரிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைத்துவிடவும் முடியாது.

தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அவர்கள் முன்வைக்கும் இன்னொரு காரணம் ஆந்திர மாநிலத்துக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அனைத்துமே தெலங்கானாவுக்குக் கிடைக்காமல் கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவுக்குச் சென்றுவிடுகிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல் தெலங்கானா பின்தங்கிய பகுதியாகவே தொடர்கிறது என்பதும் தனி மாநிலக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வாதம். ஆனால், தனித் தெலங்கானா மாநிலம் அமையுமானால் அதனால் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

தெலங்கானா மாநிலம் அமைவதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் தெலங்கானாவிலுள்ள பல பகுதிகள் உள்ளன. பலம்பொருந்திய பெரிய மாநிலமாக ஆந்திரம் இருந்தும்கூட சமாளிக்க முடியாத மாவோயிஸ்ட் பிரச்னையை சின்ன மாநிலமான தெலங்கானாவால் எதிர்கொள்ள முடியுமா என்பதுதான் அது.

ஹைதராபாத், சண்டீகர் போல பொதுத் தலைநகராக இருந்தாலும்கூட மாவோயிஸ்டுகளின் பிரச்னையை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் அவசரக் கோலத்தில் ஆந்திரத்தைப் பிரிப்பது உசிதமாக இருக்காது என்பதை பச்சைக்குழந்தை கூட தெரிவிக்கும். அப்படியானால் அரசுக்குத் தெரியாதா என்ன?

மத்திய அரசின் நோக்கம் ஆந்திரத்தின் வளர்ச்சியோ முன்னேற்றமோ அல்ல. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இரண்டு மாநிலங்களிலும் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்பதுதான். அதற்கு பகடைக்காயாக "தெலங்கானா' பயன்படுகிறது, அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT