தலையங்கம்

திருத்துவோம் சட்டத்தை!

தேர்தல் ஆணையம் இரண்டு முக்கியமான முடிவுகளை அறிவித்திருக்கிறது. முதலாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்யும்போது, வாக்காளர் பதிவு செய்த சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த அச்சுப்பிரதி வழங்கும் முடிவு.

ஆசிரியர்

தேர்தல் ஆணையம் இரண்டு முக்கியமான முடிவுகளை அறிவித்திருக்கிறது. முதலாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்யும்போது, வாக்காளர் பதிவு செய்த சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த அச்சுப்பிரதி வழங்கும் முடிவு.

சுமார் 13 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் அச்சுப்பதிவு இயந்திரத்தை இணைக்க ஏறத்தாழ 1,700 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிகிறது. தனது வாக்கு சரியாகப் பதிவாகி இருக்கிறதா என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, வாக்குப்பதிவில் பிரச்னை எழுந்தால் அதைச் சரிபார்க்கவும் இந்த முறை உதவும்.

தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அறிமுகப்படுத்தப்பட இருக்கும், "நோட்டா' எனப்படும் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்கிற பதிவு, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பது. "நோட்டா' மூலம், களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அதைப் பதிவு செய்யும் உரிமை வாக்காளர்களுக்குத் தரப்படுகிறது. ஆனால், பெருவாரியான வாக்காளர்கள் "நோட்டா'வில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதால் மறுதேர்தல் நடத்துவது என்பது இப்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி சாத்தியமில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.

இப்போதைய தேர்தல் முறையிலேயே பல அடிப்படைக் குறைபாடுகளும், குழப்பங்களும் நிலவுகின்றன. உதாரணமாக, 60 விழுக்காடு வாக்காளர்கள்தான் ஒரு தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு வேட்பாளர் 28 விழுக்காடு வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக வருபவர் 27 விழுக்காடு வாக்குகளும், மூன்றாவது வேட்பாளர் 25 விழுக்காடு வாக்குகளும் ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து 20 விழுக்காடு வாக்குகளும் பெற்றிருந்தால் 28 விழுக்காடு வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்.

வாக்களித்தவர்களில் 28 விழுக்காடு பேர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவர் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகிறார். அதாவது வாக்களித்தவர்களில் 72 விழுக்காடு பேர்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் அந்தத் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகிறார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்றிருப்பவர் ஆட்சி அமைக்கிறார். அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றும், பெருவாரியான மக்களின் ஆதரவுபெற்ற அரசு என்றும் வர்ணிக்கிறோம். நமது தேர்தல் முறையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு இது.

இன்னொரு முரணும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் காணப்படுகிறது. நமது அரசியல் சட்டம் மக்கள் பிரதிநிதிகள் பற்றித்தான் குறிப்பிடுகிறதே தவிர, அரசியல் கட்சிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. எந்தக் கட்சியையும் சாராத சுயேச்சை வேட்பாளர்கள்கூட தேர்தலில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதி அளிக்கிறது. தொகுதியின் பிரதிநிதியாகத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர கட்சியின் பிரதிநிதியாக அல்ல. அப்படி இருக்கும்போது, கொறடா, கட்சித்தாவல் சட்டம் போன்றவைகளால் ஒரு உறுப்பினரைக் கட்டுப்படுத்துவது எப்படிச் சரியாகும்?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் காணப்படும் இந்த அடிப்படைக் குறைபாடுகள் முதலில் களையப்பட்டாக வேண்டும். 60 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தால் அங்கே மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும், பதிவான வாக்குகளில் 50 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அந்த வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் தேவைப்படும் அத்தியாவசியமான மாற்றங்களாகும்.

பெருவாரியான வாக்காளர்கள் "நோட்டா' பதிவின்மூலம் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையுமே நிராகரித்தால், மறு தேர்தலுக்கு உத்தரவிடுவது என்று மாற்றம் கொண்டுவரப்படாத நிலையில் "நோட்டா' என்பதற்கு அர்த்தமே இல்லை.

தேர்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா என்று கேட்டால், நிச்சயமாக சாத்தியம். தொகுதி சீரமைக்கப்படலாம் என்றால், மாநிலங்கள் சீரமைக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப்படலாம் என்றால் தேர்தல் சீர்திருத்தம் மட்டும் ஏன் சாத்தியப்படாது? அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கொண்டு வருவோமே, அதற்கு ஏன் தயங்க வேண்டும்?

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்ற சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமானால், மக்களாட்சியைப் பலப்படுத்தும் இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிக்காக தேர்தல் சீர்திருத்தக் கமிஷனை அமைத்து, அரசியல் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றங்களை ஏன் செய்ய முடியாது, கூடாது? மறு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT