தலையங்கம்

மூச்சு திணறப் போகிறது...

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது.

ஆசிரியர்

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தில்லி அந்த அவப்பெயரை இப்போது பெறுவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. தில்லியின் காற்று அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிகிறது.

தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி நிர்வாகம் ஆகியவற்றுடன் இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளும் இந்த அறிக்கையின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். புது தில்லியின் சராசரி காற்று மாசு அளவு, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைவிடக் குறைவு என்பது அவர்களது வாதம். இப்படியொரு வாதத்தை முன்வைக்கும் அந்த அதிகாரிகள், எந்தவொரு நேரத்

திலும் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அசுத்தமாக இருந்ததே இல்லை என்று கூறுகிறார்களா என்றால் இல்லை.

சராசரி என்பது கணக்குக் காட்ட வேண்டுமானால் உதவலாம். மக்கள் சராசரியையா சுவாசிக்கிறார்கள்? எந்தவொரு கட்டத்திலும் காற்று மாசு உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அபாயகரமான அளவில் இருக்கக்கூடாது என்பதுதானே எதிர்பார்ப்பு!

காற்று மாசைப் பொருத்தவரை தில்லி முன்னிலை வகிக்கிறதா, பெய்ஜிங் முன்னிலை வகிக்கிறாதா என்பதல்ல பிரச்னை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக தில்லியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் அந்த அளவு அதிகரித்து வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது.

தில்லியைவிட மோசமாக இருந்த சீனாவின் பெய்ஜிங்கில் காற்று மாசு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட்டு, காற்று மாசின் அளவை படிப்படியாகக் குறைக்க அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

தில்லி அரசு இதுபற்றிக் கவலைப்படாமலே இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. இந்தியாவிலேயே முதல் முதலாக எரிவாயுவில் மட்டுமே பொது வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்திய மாநிலம் தில்லி மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாகவே தில்லியில் பேருந்துகள், லாரிகள் மட்டுமல்ல, வாடகைக் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது வாகனங்கள் அனைத்துமே எரிவாயுவில்தான் இயங்குகின்றன.

அத்துடன் நின்றுவிடாமல், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான தனியார், பொது வாகனங்களின் உரிமம் தில்லியில் புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதிலும் நிர்வாகம் கடுமையாக இருந்து வருகிறது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் "தில்லி மெட்ரோ ரயில் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. தில்லி மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயங்குகிறது என்றாலும், இதனால் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், வருடத்தில் ஒரு சில மாதங்

களைத் தவிர, ஏனைய மாதங்களில் தில்லியின் காற்று மாசு அளவு அதிகரித்து, காற்று மண்டலம் புகை மண்டிய நிலையில் காணப்படுகிறது.

தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பெரு நகரங்களிலும் சுற்றுப்புறக் காற்றில் காணப்படும் மாசு அதிகரித்து வருகிறது. அதிகரித்துவிட்ட நகர்ப்புற மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் காற்று மாசின் அளவு, நூறு விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிற உண்மையை யாரும் பேசுவதில்லை.

காற்று மாசின் விளைவால் ஏற்படும் மரணம் 2000இல் ஒரு லட்சமாக இருந்தது. அது 2010இல் ஆறு லட்சமாக அதிகரித்திருக்கிறது. காற்று மாசு விளைவிக்கும் சுகாதாரக் கேடுகளுக்கான மருத்துவச் செலவும் மிக அதிகம்.

இந்தியாவில் நல்ல தண்ணீர்தான் கிடைக்கவில்லை என்றால், இனிமேல் சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைக்காத நிலைமை ஏற்படக்கூடும். அதை எதிர்கொள்ளவும், காற்று அசுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT