தலையங்கம்

சுற்றுச்சூழலும் உணவு உற்பத்தியும்!

சர்வதேச அளவிலான வாயு மாசு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்று, ஆய்வு செய்த 178 நாடுகளில் மிகவும் மோசமான அளவு வாயு மாசு உள்ள நாடுகள் என்று ஐந்து நாடுகளை அடையாளம் கண்டிருக்கிறது.

ஆசிரியர்

சர்வதேச அளவிலான வாயு மாசு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்று, ஆய்வு செய்த 178 நாடுகளில் மிகவும் மோசமான அளவு வாயு மாசு உள்ள நாடுகள் என்று ஐந்து நாடுகளை அடையாளம் கண்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்க தேசத்துடன் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய செய்தி.

இதுநாள்வரை, உலகிலேயே வாயு மாசு அதிகமாக இருக்கும் நகரம் என்று கூறப்பட்டு வந்த சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கைவிட, இந்தியத் தலைநகரம் தில்லி இப்போது அதிகமான மாசுடன் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலுமே வாயு மண்டலம் கடுமையாக மாசுபட்டிருக்கிறது என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதால், சுற்றியுள்ள காற்று மண்டலத்தைக் கரியமில வாயு மண்டலமாக மாற்றிவிடும் என்பது அறிவியல் அரிச்சுவடி படித்தவர்களுக்குக்கூடத் தெரியும். வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், வாயு மண்டல மாசு அளவு குறையும் என்று எதிர்பார்ப்பதே தவறு.

தேசிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கடந்த பத்து ஆண்டுகளில் நாம் நூறு விழுக்காடு மோசமாகி இருக்கிறோம். வாயு மண்டல மாசு அதிகரிப்பதால் வாழ்நாள் குறையும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அண்மையில் வெளிவந்திருக்கும் சுகாதாரப் புள்ளிவிவரம் ஒன்று, 2000-ஆம் ஆண்டில் ஒரு லட்சமாக இருந்த முன்கூட்டியே நிகழும் மரணங்கள், 2010-ஆம் ஆண்டில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாகி இருப்பதாகக் குறிப்பிடுகிறது. வாயு மண்டல மாசு நுரையீரல்களைப் பாதிப்பதால் ஏற்படும் மரணங்கள் இந்தப் பட்டியலில் சேரும்.

நகரமயமாதல் தவிர்க்க முடியாதது. ஆனால், நகரமயமாகும்போது, அதனால் சுற்றுச்சூழலுக்கும் வாயு மண்டலத்திற்கும் மாசு ஏற்படாமல் பாதுகாப்பது என்பது செயல்படுத்த முடியாதது அல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், வாயு மண்டலத்தில் தூய்மையான காற்றை உறுதிப்படுத்துவதற்கும் போதிய கவனத்துடன் அதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்வதும்தான் ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமைகளாக இருக்க முடியும். வாயு மண்டலம் மாசுபடுவதாலும், காற்று மண்டலம் அசுத்தப்படுவதாலும் உண்டாகும் வியாதிகளுக்கான மருத்துவச் செலவைக் கணக்கிடும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அரசு செலவிடும் தொகை நிச்சயம் குறைவாகவே இருக்கும்.

வாயு மண்டலம் அசுத்தப்படுவதால், நகர்ப்புற வாழ்க்கைதான் பாதிக்கப்படும் என்று இதுவரை நம்பி வந்தோம். கிராமப்புறங்களும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்வது இப்போது தெரிய வந்திருக்கிறது. கிராமப்புறங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாய உற்பத்திக்குமே சுற்றுச்சூழல் மாசு அடைவதால் பேராபத்து வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தேசிய அறிவியல் கழகம் (நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்) வெளியிட்டிருக்கும் அறிக்கை, மத்திய விவசாய அமைச்சகத்தைத் திடுக்கிட வைத்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபட்டிருப்பதால், விவசாய உற்பத்தி குறைந்து வருவது தெரிய வந்திருக்கிறது. 1980 முதல் 2010 வரையிலான முப்பதாண்டு காலத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோதுமை விளைச்சல் சுற்றுச்சூழல் பாதிப்பால் பாதிக்குப்பாதி குறைந்திருப்பது தேசிய அறிவியல் கழகத்தால் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மொத்த கோதுமை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கும், மொத்த அரிசி உற்பத்தியில் 14 சதவீதமும் உத்தரப் பிரதேசத்தில்தான் விளைகின்றன. உத்தரப் பிரதேசம் மட்டுமல்ல, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு வட மாநிலங்களில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதால் குறைந்த விளைச்சலைத் தருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. நல்ல வேளையாக பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஏனைய முக்கியமான உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பாதிக்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் விளைச்சல் குறைவது மட்டுமல்ல, தாவரங்களின் வளர்ச்சி தடைபட்டு, வாயு மண்டல வெப்பம் அதிகரித்து மழையின் அளவும் குறைகிறது. சுற்றுச்சூழல் மாசு உணவுப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகிறது என்பதையும் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டாக வேண்டும். அதற்கு கரியமில வாயுவால் காற்றை அசுத்தப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தாக வேண்டும். இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு வாகனங்களுக்கு மாற்று எரிசக்தியின் அவசியத்தை உணரத் தொடங்கியிருக்கிறது என்பதில் சற்று ஆறுதல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT