தலையங்கம்

இது இன்றைய தேவை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்துள்ள "தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்ட'த்துக்கு ("ராஷ்ட்ரீய கிஷோர் ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்') அதிக கவனமும், போதிய நிதிஒதுக்கீடும், முறைகேடுகள் இல்லாதபடி கண்காணிப்பும் இருக்குமேயானால், அடுத்த இளம் தலைமுறை உடலாலும் மனதாலும் நோயற்ற சமூகமாக உருவெடுக்கும்.

ஆசிரியர்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்துள்ள "தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்ட'த்துக்கு ("ராஷ்ட்ரீய கிஷோர் ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்') அதிக கவனமும், போதிய நிதிஒதுக்கீடும், முறைகேடுகள் இல்லாதபடி கண்காணிப்பும் இருக்குமேயானால், அடுத்த இளம் தலைமுறை உடலாலும் மனதாலும் நோயற்ற சமூகமாக உருவெடுக்கும்.

ஏனென்றால் இந்தத் திட்டம் இந்தியா முழுவதிலும் 10 வயது முதல் 19 வயதுக்குள்ளாக இருக்கும் வளர் இளம் பருவத்தினர் அனைவரையும் - பள்ளி செல்பவராக இருந்தாலும் தொழில்புரிபவராக இருந்தாலும் மணமானவராக இருந்தாலும் - அனைவரையும் தனது வரம்புக்குள் கொண்டு வந்துவிடுகிறது.

இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு, உணவுமுறை, போதையின் பின் விளைவுகள், இளம் வயதுக்கே உரிய நெறிப்பிறழ்வுகள், குற்றவுணர்ச்சி, சத்தான உணவு குறித்த புரிதலை உருவாக்குதல், பாலின சமன்பாடு, தொற்றுநோய் மற்றும் தொற்றாநோய் குறித்த விளக்கம், வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கங்களால் ஏற்படும் நோய்த் தாக்குதல் போன்ற அனைத்தையும் இளம் தலைமுறைக்கு அறிவுறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இதை முறையாக இளம் தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்த்துவிட முடிந்தால், பாலியல் வன்முறை குறையும்; நோயற்ற இளம் தலைமுறை உருவாகும்; இவர்களால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்; வாழ்க்கைச் சூழல் மேம்படும் என்று மத்திய அரசு நம்புகிறது. இது முழுக்க முழுக்க உண்மை. ஆனால், இந்தத் திட்டத்தை முறையாகவும் அக்கறையோடும் செயல்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

இன்றைய இளம் தலைமுறை கொண்டிருக்கும் தவறான கருத்தாக்கங்களுக்கு முடிவே இல்லை. முட்டை சைவ உணவு; மது வகைகளில் பீர் சுத்த சைவம்; துரித உணவுகளே சுவையானவை; குடிநீருக்குப் பதில் கோக் அல்லது மென்பானங்கள் போதும்; திருமணத்துக்கு முன்பான பாலியல் உறவுகள் தவறல்ல; உடற்பயிற்சி செய்யாமலே ஆபரேஷன் மூலம் "சிக்ஸ் பேக்'கூட சாத்தியம்; பணம் கொடுத்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும், அரசு வேலை கிடைக்கும்; எப்படியும் வாழலாம் என்ற கருத்தாக்கங்களுடன் வளரும் இவர்கள், கல்லூரியிலிருந்து வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, வாழ்க்கை முரண்களைக் கண்டு பேதலித்துப் போகிறார்கள்.

பதினெட்டு வயது இளம்பெண் தன்னை ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கூறியதால் கலவிக்கு சம்மதித்து, அவர் ஏமாற்றியபிறகு வன்புணர்வு குற்றத்தின் கீழ் அவர்மீது வழக்குதொடுக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துள்ள இந்த வேளையில், ஓர் இளம்பெண் மற்ற ஆண்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதைச் சொல்லித்தரும் அவசியம் இன்று மேலதிகமாக இருக்கிறது.

பாலியல் கூட்டு-வல்லுறவுக் குற்றங்கள் அனைத்திலுமே ஒரு வளர் இளம் பருவ இளைஞன் இடம்பெறுவதால், இளம் தலைமுறைக்கு இத்திட்டத்துக்கான அவசியம் இருக்கிறது.

டிவி முன்பாக எப்போதும் உட்கார்ந்து கொண்டு, விளையாட்டுகளைக்கூட மனத்திரையில் விளையாடி களைத்துப்போகும் இன்றைய இளம் தலைமுறை, மிகவிரைவிலேயே தொற்றாநோய்களுக்கு ஆள்பட்டு விடுகிறார்கள். துரித உணவின் உப்புகளும் எண்ணெய்க் கொழுப்புகளும் இதற்கு துணைபுரிகின்றன என்ற புரிதல் இருந்தால், இவர்கள் இந்திய உணவு முறைக்கு மாறுவார்கள். இவர்களை மாற்ற வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது.

10 வயது முதல் 19 வயதுவரையிலான வளர் இளம் பருவத்தினர் இந்தியாவில் 24 கோடி பேர் உள்ளனர். இவர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் இத்திட்டத்தினால் பயன்பெற்றாலும், ஓர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிவிட முடியும்.

பள்ளி செல்வோர், தொழில் புரிவோர், வீட்டுக்குள்ளேயே இருக்கும் வளர் இளம் பெண்கள் என அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்துவதால், கிராம வாரியாக, நகரங்களில் வார்டு வாரியாக, வளர் இளம் பருவப் பொதுநல குழுக்களை உருவாக்கி, இவர்கள் அனைவரையும் இத்திட்ட வரம்புக்குள் கொண்டுவந்தாலன்றி இதை செயல்படுத்த முடியாது.

இதைச் செயல்படுத்துவதில், மத்தியில் எந்த அரசு மாநிலத்தில் எந்த அரசு என்கின்ற ஆட்சிக் காழ்ப்புணர்வு, அரசியல் காழ்ப்புணர்வு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். இது எளிதான செயல் அல்ல. ஆனால் செய்ய முடியாததும் அல்ல.

"பருவத்தே பயிர் செய்' என்பது வேளாண்மைக்கு மட்டுமல்ல, மானுடத்துக்கும் பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT