தலையங்கம்

கவலை நியாயம்; தீர்வு இதுவல்ல!

மாநில அரசுகள் ஆய்வுக் குழுக்களை அமைத்து, அரசு தொடுக்கும் வழக்குகளில் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

ஆசிரியர்

மாநில அரசுகள் ஆய்வுக் குழுக்களை அமைத்து, அரசு தொடுக்கும் வழக்குகளில் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 80 சதவீத குற்றச்சாட்டுக்களில் புலன்விசாரணை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவாகின்றன. ஆனால், அப்படிப் பதிவாகி நீதிமன்ற விசாரணைக்கு வரும் வழக்குகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்படுகிறது. போதிய சாட்சியங்கள் இல்லாமலோ, குற்றம் சரியாக நிரூபிக்கப்படாமலோ, தவறான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகி இருப்பதாலோ, 75 சதவீத வழக்குகள் தோல்வியடைந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி விடுகிறார்கள்.

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் குற்றக் கண்டுபிடிப்பு (கிரைம் டிடெக்ஷன்) என்பது 40 சதவீதம்கூட இல்லை. ஆனால், தொடரப்படும் வழக்குகளில் 90 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். அதற்குக் காரணம், காவல் துறையினர் அந்த அளவுக்கு முனைப்புடன் செயல்பட்டு, வலுவான சாட்சியங்களுடன் அரசுத் தரப்பு வழக்குகள் தோல்வி அடையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதுதான்.

அரசுத் தரப்பு வழக்குகளில் போதுமான சாட்சியங்கள் இல்லாமல் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுவிக்கப்படுவது என்பதே அநீதியானது. தவறான ஒருவர்மீது முறையான விசாரணை இல்லாமல் குற்றம் சுமத்தி அவரை கைது செய்து, வழக்குத் தொடர்ந்து, அப்பாவி ஒருவரைப் பலவித மனஉளைச்சலுக்கும், சமூக அவமானங்களுக்கும் ஆளாக்குவது என்பது நியாயமல்ல. ஒருவேளை அவர் குற்றவாளியாகவே இருந்து, போதிய ஆதாரங்களைத் திரட்டாமல் ஏனோதானோ என்று வழக்கை ஜோடித்து அதைத் தோல்வியடையச் செய்வது என்றால் அதுவும் நியாயமல்ல. நிரபராதி இம்சிக்கப்படுவதும் தவறு; குற்றவாளி விடுவிக்கப்படுவதும் தவறு.

அரசுத் தரப்பு வழக்கு தோற்றுப்போனால், அதற்கு காரணம் விசாரணையில் ஏற்பட்ட கவனக் குறைவா அல்லது வழக்குப் பதிவில் ஏற்பட்ட தவறா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து, அந்த கவனக் குறைவுக்குக் காரணமான காவல்துறை அதிகாரி அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, வலுவான வழக்கு இருப்பதை உறுதி செய்த பிறகுதான் அரசு வழக்கு தொடர வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நீதித்துறை தெரிவித்திருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், இந்தியாவைப் பொருத்தவரை, காவல்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல், நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கவலைக்கு விடைதேட முடியாது. போதுமான காவலர்கள் இல்லாத நிலையில், இந்த அளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவது என்பதே காவல்துறையினரின் மிகப்பெரிய சாதனை.

இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 76 காவலர்கள்தான் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் (401), ஆர்ஜென்டினா (558), பிரேசில் (282), டென்மார்க் (245), பிரான்ஸ் (356), ஹாங்காங் (393), ஜப்பான் (404), மலேசியா (370), நேபாளம் (225), பாகிஸ்தான் (207), போர்ச்சுகல் (462), ரஷ்யா (546), சிங்கப்பூர் (752), இலங்கை (438), இங்கிலாந்து (307), அமெரிக்கா (256) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் மக்கள் - காவலர்கள் விகிதம் மிகமிகக் குறைவு.

ஒரு லட்சம் பேருக்கு குறைந்தது 176 காவலர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவின் சாதனை என்ன தெரியுமா? 14,842 அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை 47,557 காவலர்கள் பாதுகாக்கிறார்கள் என்பதுதான்!

பல வழக்குகள் அரசியல் தலைமையின் நிர்பந்தத்தாலோ அல்லது ஏதாவது பிரமுகருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே உள்ள நெருக்கத்தாலோ பழிவாங்குவதற்காக ஜோடிக்கப்படுபவை. அதனால், போதிய சாட்சியங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுவது இயற்கை. பணிச்சுமை அதிகமாக இருப்பதால் முறையாக விசாரணை நடத்தி, சாட்சிகளை உறுதிப்படுத்தாமல் காவல் துறை வழக்குத் தொடுப்பதும் நடக்கிறது.

அரசு தரப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கும் காரணங்களை ஆராய்வதற்கு முன்னால், காவல்துறை சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டாக வேண்டும். காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பும், புலன்விசாரணையும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டாக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கவலை நியாயமானது. ஆனால், அதற்கு அவர்கள் கூறியிருக்கும் பரிந்துரை மட்டுமே தீர்வாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT