தலையங்கம்

இது அக்கறையல்ல, அரசியல்!

பன்முக உயர்சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி, பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபெறவுள்ள இந்த நியமனங்கள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெறுகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிரியர்

பன்முக உயர்சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி, பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபெறவுள்ள இந்த நியமனங்கள் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெறுகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் விளக்கம் அளித்துள்ளார்.

நீதிமன்ற வழிகாட்டுதல் விவரம், வழக்கு தொடுக்கப்பட்ட தேதி போன்ற புள்ளிவிவரங்களுக்குள் போகாமல், மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போதே, இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்பது தெளிவு.

தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு போதுமான பேராசிரியர்களை நியமிக்க முடியாமல், மத்திய மருத்துவக் குழுவிடம் கெஞ்சிக் கூத்தாடி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் திறமையான, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்வதில்லை என்பதும், அரசு மருத்துவமனையில் இருப்பவர்களும்கூட தனியார் மருத்துவமனையில் பணிபுரிய பதவி விலகுவதையும் புரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், பன்முக உயர்சிறப்பு மருத்துவமனையில் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவோருக்கு மாதம் சில லட்ச ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வெறும் 4 ஆண்டு பொறியியல் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள் சிலர் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம் பெறும்போது, உயிர்காக்கும் மருத்துவத் துறையில், அதிலும் பல ஆண்டுகள் அனுபவத்துடன் மருத்துவ சாதனைகளுடன் வருவோருக்கு ஏன் அதிக சம்பளம் தரக்கூடாது?

மேலும், வெளிநாட்டு மருத்துவமனைகளில் பல ஆயிரம் டாலர் சம்பளத்தில் பணியாற்றிவிட்டு, தற்போது தாயகம் திரும்பும் மனநிலையில் உள்ள திறமைவாய்ந்த மருத்துவர்களை ஈர்க்கவும் இத்தகைய அதிகச் சம்பளம் உதவும்.

ஒரு மருத்துவமனை, பன்முக உயர்சிறப்பு மருத்துவமனை என்ற தகுதியைப் பெற சில ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு உள்கட்டமைப்பை உருவாக்கிவிடுவது மட்டும் போதுமானதல்ல. திறமையான மருத்துவர்கள் நியமிக்கப்படாவிட்டால், அத்தனை ஆயிரம் கோடி ரூபாயும் விழலுக்கு இறைத்த நீராகிப்போகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ள பணியாளர்கள் நியமனம் இடஒதுக்கீட்டு முறையில்தான் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆராய்ச்சியாளர்களை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை வலியுறுத்தப்படுவதில்லை. அங்கே ஆய்வுத்திறன், அறிவியல்புலம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை தரப்படுகிறது. மருத்துவத் துறையும் அதைப் போன்றதுதான். பன்முக உயர்சிறப்பு மருத்துவமனை பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் இருக்கும் என்பதால், இங்கு முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுவோர், தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படுவதுதான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பதில்லை. மிகச் சிறந்த, திறமைவாய்ந்த மருத்துவர்களையே நியமிக்கிறது. அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவும் தயங்குவதில்லை. ஆகவேதான், திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதல்ல விஷயம். அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தரமான சிகிச்சை, திறமையான மருத்துவர்களால் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கூட்டு வல்லுறவுத் தாக்குதலால் மரணத் தருவாயில் இருந்த நிர்பயாவை கடைசியாக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? எய்ம்ஸ் மருத்துவமனையிலும்கூட, சிறந்த, நவீன மருத்துவம் அளிக்க முடியவில்லை என்பதற்கான சான்றுதானே இது.

இந்தியாவில் மருத்துவ உலா அதிகரித்து வருகிறது என்பதையும், அரிய சிகிச்சைகள் இந்தியாவில் அளிக்கப்படுவதும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே நிகழ்கிறது என்பதையும், இதுவும்கூட, வெளிநாட்டு மருத்துவச் செலவை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்காக இருப்பதால்தான் இந்தியாவுக்கு மருத்துவ உலா வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

சாமானியனுக்கும் சிறப்பு மருத்துவம் தரப்படுவதற்காக அதிக சம்பளமும் கொடுக்கலாம். இடஒதுக்கீடு இல்லாமலும் இருக்கலாம். தவறில்லை!

ஆரோக்கியமான அரசியல் இல்லாவிட்டால் போய்த் தொலைகிறது. மக்கள் ஆரோக்கியத்தில் அரசியல் தேவையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT